• Post category:WORLD
  • Post published:November 10, 2020
Spread the love

அமெரிக்காவின் அடுத்த உபஜனாதிபதியான கமலா ஹரிஸின் தலைமைப் பணியாளராக நியமனம் பெறுவதன் மூலம், இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கத் தமிழர்களின் மகளான றோஹினி லக்ஸ்மி, அமெரிக்க அரசியலில் அதியுயர் பதவி வகிக்கும் ‘இலங்கைத் தமிழர்’ என்ற ஸ்தானத்தைப் பெறுகிறார்.

அமெரிக்காவுக்கு 1980களின் ஆரம்பத்தில் குடியேறிய மருத்துவர் விஜயதேவேந்திரம் ரவீந்திரன் மற்றும் ஷோபனா ரவீந்திரனின் ஆகியோருக்கு நியூ ஜேர்சியில் பிறந்த றோஹினி, மிச்ஷிகன், ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று, சட்டவாக்க விவகாரத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.

றோஹினி, கடந்த 15 வருடங்களாக அமெரிக்க தலைநகர் அரசியல் வட்டாரங்களில் பல ஆலோசனைப் பணிகளையும், முகாமைத்துவப் பணிகளையும் மேற்கொண்டு வந்திருக்கிறார். இக் காலத்தில் அறிமுகமான மிச்சிக்கன் செனட்டர் டெபி ஸ்ரேபிணோவின் மூலம் தேசிய் அரசியலுக்குள் நுழைகிறார். பின்னர் 2018 ல் கலிபோர்ணியா செனட்டர் கமலா ஹரிஸின் அலுவலகத்தில் முதன்மைப் பணியாளராகக் கடமையேற்கிறார். இதன் மூலம், அமெரிக்க மத்திய அரச நிர்வாகத்தில் அதியுயர் பதவியை எட்டியவராக றோஹினி உருப்பஏர்கிறார்.றோஹினியின் பன்முக முகாமைத்துவ சிறப்பாற்றலால் ஈர்ப்புற்ற செனட்டர் கமலா ஹரிஸ் அவரை செனட் நீதிக்குழு, வரவு-செலவு, உள்ளக பாதுகாப்பு, அரச நிர்வாகம் ஆகிய பல குழுக்களில் நிர்வாகப் பொறுப்புகளில் அவரை நியமிக்கிறார்.

றோஹினி தனது கணவனுடனும், மூன்று குழந்தைகளூடனும் வாஷிங்டன் டி.சி. பகுதியில் வாழ்ந்து வருகிறார்.



ஜனநாயகக் கட்சியில் பல பெண்கள் உயர் பதவிகளை வகுத்தாலும் அவர்களில் பெரும்பாலும் வெள்ளை இனத்தவர்களாகவே இருந்து வந்துள்ளனர். அப் பாரம்பரியத்தை உடைத்து, பல இன, நிறத்தவருக்கும் சந்தர்ப்பத்தை வழங்கியவர்களில் இரண்டாவதானவராக செனட்டர் ஹரிஸ் பார்க்கப்படுகிறார். ஹவாய் செனட்டர் பிறையன் ஷாட்ஸ் இதில் முதன்மையானவர்.

றோஹினியின் தந்தையார் ரவீந்திரன், முன்னாள் கொழும்பு செயிண்ட் தோமஸ் கல்லூரி கிரிக்கெட் ஆட்டக்காரர். 1974 இல், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவப் படிப்பை முடித்துக்கொண்டு 1980 களின் ஆரம்பத்தில் அமெரிக்காவுக் குடிபெயர்ந்தார்.

Print Friendly, PDF & Email