Sri Lanka

றோஹித ராஜபக்சவை அலரி மாளிகையைவிட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி உத்தரவு?


பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்சவின் குடும்பம் இதுவரை காலமும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ மாளிகைகளில் வசித்து வந்தனர். முன்னாள் ஜனாதிபதி என்ற அந்தஸ்தில் விஜேராமா மாளிகையிலும், தற்போதைய பிரதமர் என்ற வகையில் அலரி மாளிகையிலும் மஹிந்த ராஜபக்ச, அவரது மக்களின் திருமண சம்பந்திகள் குடும்பம் என எல்லோரும் ஒரு கூட்டுக்குடும்பமாக, இரண்டு மாளிகைகளிலும் வாழ்ந்து வந்தனர்.

இருப்பினும், சமீபத்தில், மஹிந்த குடும்பம் அலரி மாளிகையை விட்டு, விஜேராமா மாளிகைக்கு குடிபெயர்ந்திருந்தது. ஆனால் அவரது மூன்றாவது மகன் றோஹித, மனைவி, மனைவியின் பெற்றோரின் குடும்பம் ஆகியோர் விஜேராமாவுக்கு குடிபெயராமல், இன்னும் அலரி மாளிகையிலேதான் வசித்து வருகிறார்கள். தற்போது அவர்களையும் அலரி மாளிகையை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி உததரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

நாட்டின் பிரதமர் அலரி மாளிகையில் வசிக்காமலிருக்கும்போது அதில் இன்னுமொரு குடும்பம் வசிப்பது உகந்தது அல்லவென ஜனாதிபதி கருதுவதாக அறியப்படுகிறது.

நாட்டின் அதிபர் என்ற ரீதியில் ஜனாதிபதி ராஜபக்சவே அலரி மாளிகையில் வசிப்பதற்கு உரிமை பெற்றவர். ஆனால் அவர் மிரிஹனவிலிருக்கும் தனது பிரத்தியேக இல்லத்தில் வசித்து வருகிறார்.

ஜனாதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து றோஹித ராஜபக்ச பெட்டகனே டூவா தெருவிலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்றுவிட்டதாக அறியப்படுகிறது.