றோபோ ரக்ஸி: இலான் மஸ்க்கின் தோண்டி
சிவதாசன்
ரெஸ்லா நிறுவனத்திற்கும் அதன் நிறுவனர் இலான் மஸ்கிற்கும் போதாத காலம் போலிருக்கிறது. அமெரிக்கா என்ற அரக்கு மாளிகையைப் போல் அவர் மீதும் எழுப்பப்பட்ட பிம்பம் வெறும் சந்தைப்படுத்தல் உத்தியோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாமலிருக்கிறது. ஹொலிவூட் முதல் ஒளி, ஒலி, அச்சு, சமூக ஊடகங்கள் வரை பொதுமக்களின் அபிப்பிராயத்தைத் தமக்கு சார்பாகத் திருப்பும் வல்லமையை அரசியல்வாதிகளே முதலில் கையகப்படுத்திக்கொண்டாலும் பின்னர் வர்த்தகத்துக்குள்ளும் அது புகுந்துகொண்டது. அதன் விளைவுகளிலொன்றே ரெஸ்லாவும் அதன் அதிபர் இலான் மஸ்கும். அவரது திறமைக்கும் மேலாக அவர் மீது கட்டி எழுப்பப்பட்ட பிம்பம் பங்குச் சந்தையை ஊதிப் பெருப்பித்து அவரை உலகப் பெரிய பணக்காரராக்கியது. அமெரிக்காவின் நந்தவனத்தில் இரண்டு ஆண்டிகள் ஆடிப் பாடிக் கொண்டு வந்த தோண்டிகள் உடைக்கப்படும் காலம் நெருங்குவது போல் தெரிகிறது.
“2020 இல் 1 மில்லியன் றொபோ ரக்ஸிகள் தெருக்களில் வலம் வரும்” என 2019 வாக்கில் இலான் மஸ்க் முழங்கியிருந்தார். இப்போது அதை update பண்ணி ஜூன் 2025 இல் அவை பாவனைக்கு வரும் எனச் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருக்கிறார். இது உண்மையானால் ரெக்ஸாஸ் மாநிலத்தின் ஒஸ்ரின் நகரவாசிகள் கொஞ்ச நாட்களுக்கு தெருக்களைத் தவிர்ப்பது நல்லது.
ரெஸ்லா வாகனங்களின் சில மொடல்களில் ‘ஓட்டோ பைலொட்’ (Auto Pilot) மற்றும் ‘ஃபுல் செல்ஃப் ட்றைவிங்’ (Full Self Driving (FSD)) வசதிகளுண்டு. ஓட்டோ பைலொட் இயக்கத்தை சாரதி பாவிக்கும்போது வாகனத்தின் இயக்கத்தில் கணிசமான அளவு சாரதியின் ஈடுபாடும் அவசியமாகவிருக்கும். இதை Advanced Driver Assisted System என அழைப்பர். அதே வேளை சாரதி ஒருவர் விரும்பினால் (அதிக விலை கொடுத்து) FSD வசதியுடன் வாகனங்களை வாங்கிக்கொள்ள முடியும். FSD இயக்கத்தின்போது சாரதி தொடர்ந்து தனது கவனத்தை வாகன இயக்கத்தின் மீது குவித்தப்டியே இருக்க வேண்டும். வாகனம் தவறான இயக்கத்தில் ஈடுபட முற்பட்டால் சாரதி தலையிட்டு அதைத் திருத்திக்கொள்ள வேண்டும்.இலான் மஸ்க்கும் அவரது (இந்திய) எஞ்சினியர்களும் இங்கு தான் தம்மைக் கடவுள்களாக எண்ணத் தொடங்கியிருந்தனர். “நாமின்றி எதுவும் அசையாது” என அவர்கள் தீர்மானித்தபடி எதுவும் நடைபெறவில்லை.
நேற்று முன்தினம் அலபாமா மானிலத்தில் ஒரு மொடல் 3 ரெஸ்லா வாகனம் FSD இயக்கத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தெருவிலிருந்து ஒதுங்கி ஓரத்தில் நடப்பட்டிருந்த இரும்பு வேலிக்குள் புகுந்து வண்டு புரள்வது போலத் தலிகீழாகப் புரண்டு விட்டது. நல்ல காலம் பற்றரி வெடித்து உயிர்களை மாய்த்துக்கொள்ளவில்லை.
இங்கு என்ன நடந்தது என்பது கடவுள் மஸ்கிற்குத் தான் வெளிச்சம். அனைத்து ரெஸ்லாக்களும் ஏறத்தாழ கூகிள் சேர்ச் எஞ்சின் போலத்தான். இவ்வாகனங்களின் இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களும் (தரவுகள்) உடனுக்குடன் தலமையகத்திற்கு அனுப்பபடுகிறது. வாகனத்தின் பழக்க வழக்கத்தை மட்டுமல்ல சாரதியின் பழக்க வழக்கத்தையும் தலைமைச் செயலகத்தில் இருக்கும் data recorders / event loggers பதிவு செய்கின்றன. இதன் மூலம் இவ்வாகனத்தின் செயலி மென்பொருளை மேலும் செழுமைப்படுத்துவதற்கென தாம் இதைச் செய்வதாக ரெஸ்லா நிறுவனம் சொல்கிறது. அதில் தவறும் இல்லை. அதே வேளை இது ஒரு வழித் தகவற் பரிமாற்றமில்லை. கட்டளைத் தலைமையகம் விரும்பினால் அங்கிருந்து வாகனத்திற்கு கட்டளைகளையும் அனுப்ப முடியும். நவீன விமானங்களில் இப்படியான தகவற் பரிமாற்றத்தினால் (போயிங்) பல விபத்துக்கள் நடந்ததும் அவற்றை அரசாங்கங்களும் நிறுவனங்களும் சேர்ந்து இருட்டடிப்புச் செய்ததும் வெளியில் கசியாத விடயங்கள். ரெஸ்லா வாகனங்களிலும் இது தான் நிலைமை. அலபாமா விபத்தில் எங்கு தவறு நடந்தது என்பது இதுவரையில் மர்மமாகவே இருக்கிறது. இவ்விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் சாரதியின் கூற்றுப்படி சம்பவம் நடைபெற்ற தெருவில் பல நிழல் தரும் மரங்கள் நின்றன எனவும் வாகனம் மிரண்டெழுந்து மூர்க்கமாக மாறுவதற்கு முன்னர் எதிர் திசையில் ஒரு பார வண்டி வந்துகொண்டிருந்ததெனவும் சாரதி தெரிவித்திருக்கிறார்.
ரெஸ்லா வாகனங்கள் தமது இயக்க வழிகாட்டலுக்கு காமெராக்களையே பாவிக்கின்றன. இதே போல ரேடார் மற்றும் ஒலித் தெறிப்புக்களை வைத்து முன்னாலுள்ள பொருட்களின் தூரங்களைக் கணிக்கும் முறைகளும் உண்டு. ஒப்பீட்டள்வில் காமராக்கள் மிகவும் குறைந்த நேரத்தில் தூர / வேகக் கணிப்புக்களைச் செய்வதற்கு உதவுகின்றன என்கிறார்கள். என்ன இருந்தாலும் ரெஸ்லாவின் மென்பொருள் இன்னமும் தவறுகளைக் கொண்டிருக்கிறது எனப்துதான் உண்மை. தனது ஆணவத்தினாலோ அல்லது வணிக வெற்றிக்காகவோ ரெஸ்லா அதிபர் அவசரப்பட்டு இத் தானியக்க றோபோ ரக்ஸிகளைத் தெருக்களுக்கு அனுப்புகிறார் என அக்கறைகொண்டோர் குரலெழுப்புகின்றனர்.
ரெஸ்லாவிற்கு இது புதிய அனுபவமில்லை. எண்ணற்ற மர்மமான விபத்துக்களும் பல உயிரிழப்புக்களும் அதன் கைவசமிருக்கின்றன. ஆனால் கடவுளை எவரும் கேள்வி கேட்க முடியாத நிலை. ரெஸ்லாவின் FSD குறைபாடுகள் பற்றி ரெஸ்லா நிறுவனத்தின் தானியக்கப் பிரிவின் தலைமைப் பொறியியலாளர் அசோக் எல்லுசாமி கூறுகையில் ” முழுமையான தானியக்க முறையைப் பின்பற்ற இன்னும் இரண்டு வருடங்களாவது எடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார். ஆனாலும் மஸ்க் விடாப்பிடியாக ஜூன் மாதத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்.
தொழில்நுட்பக் குறைபாடு
ரெஸ்லா வாகனம் தனது சீரான இயக்கத்திற்கு 8 காமராக்களை உணரிகளாகப் (sensors) பயன்படுத்துகிறது. ஒவ்வொன்றும் 5 மெகா பிக்ஸல் (MP) துல்லியம் கொண்டவை. ஒப்பீட்டளவில் Samsung Galaxy S24 ஸ்மார்ட் ஃபோன் 200 MP துல்லியமானது. வாகனத்திற்கு முன் தோன்றும் ஒரு பொருளுக்கும் அதன் நிழலுக்கும் உள்ள பரிமாண வித்தியாசங்களை உடனடியாக வித்தியாசம் கண்டு கணப் பொழதில் தனது இயக்கக் கட்டுப்பாடுகளைத் தீர்மானிக்க வேண்டும். எடுக்கப்பட்ட தீர்மானம் தவறானதாகில் விபத்தைத் தவிர்க்க ஒன்றில் சாரதி தலையிட வேண்டும் அல்லது கட்டளைத் தலைமையகம் தலையிட வேண்டும். FSD முறையில் இயங்கும் வாகனத்திற்கு இத் தலைமையகக் கட்டளைகள் கைத்தொலைபேசி கோபுரங்கள் மூலமே பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. பல்வேறு காரணங்களுக்காக இக்கோபுர சமிக்ஞைகள் சில வேளைகளில் தாமதமாகின்றன என்பது கைதொலைபேசிப் பாவனையாளர்களுக்குத் தெரிந்த விடயம். இந்நிலையில் நடைபெறவிருக்கும் ஒரு விபத்தைத் தவிர்க்க கட்டளைத் தலைமையகம் அனுப்பிய சமிக்ஞை வாகனத்தை அடைவதில் தாமத்ம் ஏற்பட்டால் நிலைமை என்னவாகும்?
ஒப்பீட்டளவில் கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்ஃபபெட் தயாரித்து பாவனையிலிருக்கும் வேமோ (Weymo) என்னும் FSD வாகனங்கள் காமராக்களை மட்டுமல்லாது ரேடார், லைடார் போன்ற இதர சமிக்ஞைப் பரிவர்த்தனை முறைகளையும் பாவிக்கின்றன. இவற்றின் சமிக்ஞைகள் நேரடியாக வாகனத்திற்கு அனுப்பப்பட்டு அதன் கணனியால் முடிவுகள் எட்டப்படுகின்றன. தேவையானால் மட்டுமே கட்டளைத் தலைமையகம் தவிர்ப்பு நடவடிக்கைகளை ஏவி விடும். இவ்வாகனங்களின் ரேடார், லைடார் தொழில்நுட்பம் முன்னாலுள்ள ஒரு பொருள் உணமையானதா அல்லது வெறும் நிழல் தானா என்பதை முப்பரிமாண முறையில் அளந்து தீர்மானங்களை எடுப்பதால் பல தேவையற்ற நகர்வுகள் தவிர்க்கப்படுகின்றன.
வேமோ போலல்லாது,ரெஸ்லா தனது தரவுகளை (இயக்கம், விபத்துகள், பரீட்சார்த்த முயற்சிகள் போன்ற) அரச கட்டுப்பாட்டு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. 2009 இல் தானியக்க பரிசோதனைகளை ஆரம்பித்த வேமோ தனது அனைத்து தரவுகளையும் அரச கட்டுப்பாட்டு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதால் இரு தரப்பு ஆலோசனைகளையும் உள்வாங்கி அந்நிறுவனம் பொது மக்கள் பாதுகாப்பினை முன்வைத்து தனது தொழில்நுட்ப வடிவமைப்பைக் கூர்மைப்படுத்திக்கொள்கிறது. இதனால் தான் றோபோ ரக்ஸி விடயத்தில் வேமோவால் வெற்றிகரமாக இயங்க முடிகிறது. பல நகரங்களில் இதன் பரீட்சார்த்த ஓட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
*****
1989 இல் ரொறோண்டோவில் ஸ்காபரோ RT (Rapid Transit) என்ற தொடருந்துப் பாதை திறக்கப்பட்டது. ஸ்காபரோ நகர் மையத்திலிருந்து (மக்கோவன்) கென்னெடி சுரங்க ரயில் நிலையம் வரை இந்த RT பயணிகளை ஏற்றி இறக்கியது. அப்போது இத்தொடருந்து வண்டிகள் அனைத்தும் முற்றான, சாரதியற்ற, தானியக்க (Automatic Train Control (ATC)) முறையிலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் 2023 இல் இந்த லைன் அகற்றப்படும் வரை ஒரு போதும் தானியக்க முறையில் இயங்கவேயில்லை. காரணம் 1980 களில் பனி வீழ்ச்சியைக் கண்டறியாத அமெரிக்க மாநிலமொன்றில் வடிவமைக்கப்பட்ட இத் தொழில்நுட்பம் ரொறோண்டோ கால நிலைக்கு அன்னியமாகப் போய்விட்டது. 401 பெருந்தெருவில் வீசப்பட்ட பனியுப்பு ஸ்காபரோ தொடருந்துகளின் எலெக்ட்றோனிக்ஸ் பெட்டிகளில் தஞ்சமடையுமென்பதை கலிஃபோர்ணிய பொறியியலாளர்கள் கற்பனைகூடப் பண்ணியிருக்க மாட்டார்கள். இயந்திர வடிவமைப்பில் unknown / disturbance variables எனக்கூறப்படும் எதிர்பாராத காரணிகள் எதிர்பாராத பொழுதுகளில் தாக்குதலைத் தொடுக்க வல்லன. மனிதனை விட இயற்கை எப்போதுமே ஒரு படி முன்னே தான் போகும்.
*****
ரெஸ்லா அதிபர் மஸ்க் சர்வ வல்லமை படைத்தவர். ரெஸ்லாவின் விபத்துக்களால் மரணமடைந்த / பாதிக்கப்பட்ட பலரது தகவல்கள் / தரவுகளை அவர் வெளியில் விடுவாரேயானால் ஜூன் மாதம் அவரது றோபோ ரக்ஸி ஒஸ்ரின் நகரத்தில் ஓட வாய்ப்பே இருக்காது. ஆனால் அதிகாரம் அவரது கைகளில் இருக்கிறது. பணமும், ஈகோவும் அவரை அவசரப்படுத்துகின்றன. கலிஃபோர்ணியாவில் அரச கெடுபிடிகள் அதிகம் என்பதால் தான் அவர் ரெக்ஸாஸுக்கு தனது தலைமையகத்தை மாற்றிக்கொண்டார். ஒஸ்ரின் தெருக்களில் மனித உயிர்கள் கொல்லப்படும்போது ரெக்ஸாஸும் விழித்துக்கொள்ளும்.
அமெரிக்க நந்தவனத்தில் ஆண்டிகளின் தொல்லை அதிகமாகி வருகிறது..பாவம் நிக்கோலா ரெஸ்லா.( Image Credit: Cybertruck Owners Club / Futurism)
