Science & Technology

றோபோட்டுகளுக்கு இரையாகப் போகும் மனித இனம்

ரெஸ்லா வாகனத் தயாரிப்பு ஆலையில் ஒரு மென்பொருள் பொறியாளரை இயந்திரத் தொழிலாளி (robot) ஒன்று நசித்துக் கொலைசெய்ய முயற்சித்தது என்ற செய்தி மெதுவாகக் கசிந்து வந்திருக்கிறது. 2021 இல் நடைபெற்ற இச்சம்பவத்தை நிறுவனம் மறைக்க முற்பட்டதாகவும் ஆனாலும் உண்மை காயங்களுடன் தப்பி வந்து இரகசியத்தை உடைத்துவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

ரெஸ்லாவின் அதி நவீன, மிகப்பெரும் தயாரிப்பு ஆலை ஒஸ்ரின், ரெக்சாஸில் இருக்கிறது. ரெஸ்லா வாகனத்திற்கான பெரும்பாலான உதிரிகள் இங்குதான் செய்யப்படுகின்றன. எரிபொருள் வாகனங்களைப் போலல்லாது மின் வாகனங்களில் உதிரிகள் மிகவும் குறைவு. இதற்காக பெரும்பாலான உதிரிகளை ஒரே பாகமாக வார்த்து (chasis / frame) அதில் இதர சொற்பமான உதிரிகளைப் பொருத்தும் வித்தையை ரெஸ்லாவே முதலில் அறிமுகம் செய்தது. இப்படியான வார்ப்பு வேலைகளைப் பெரும்பாலும் றோபோட்டுகளே செய்கின்றன. இவ் றோபோட்டுகளை உருவாக்கிய மென்பொருள் பொறியாளரே சமீபத்தில் ஒரு றோபோட்டிடம் மாட்டுப்பட்டவர். இப்பொறியாளரின் உடலை அது தன் கரங்களினால் இறுக்கிப் பிடித்ததால் பாரிய இரத்த இழப்புடன் அவர் தப்பிவிட்டதாகத் தெரிகிறது.

றோபோட்டுகளினால் மனிதர்கள் தாக்கப்பட்டது இதுதான் முதல் தடவையல்ல. உலகின் முதலாவது றோபோட் கொலை மிச்சிகனிலுள்ள ஃபோர்ட் வாகனத் தொழிற்சாலையில் ஜனவரி 25, 1979 இல் இடம்பெற்றிருந்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஜப்பானிலுள்ள அகாஷி என்னுமிடத்தில் ஒரு தொழிற்சாலையில் பராமரிப்புத் தொழிலாளி ஒருவர் ரோபோட் ஒன்றினால் கொல்லப்பட்டிருந்தார்.

ரெஸ்லா ஆலையில் ‘இயந்திரக் கோளாறு’ காரணமாகப் பல றோபோட்டுகள் செயலிழந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவற்றில் ஒன்று எதிர்பாராதவாறு இப்பொறியாளரின் கைகை இறுக்கிப்பிடித்துக்கொண்டதாகவும் அவர் கடும் முயற்சியால் தன்னை விடுவித்துக்கொண்டதாகவும் சாட்சிகள் தெரிவித்ததாக ஒரு செய்தி ஸ்தாபனம் தெரிவித்திருக்கிறது. றோபோட்டின் அசுரப் பிடியிலிருந்து அவர் தப்பிவிட்டாலும் அவரது கையிலும் உடம்பிலும் தசை கிழிந்து இரத்தப்பெருக்கு ஏற்பட்டதால் நிலம் முழுவதும் இரத்தமயமாக இருந்தது என இச்சாட்சிகள் கூறியுள்ளனர்.

ஆனால் இப்பாரிய விபத்து பற்றி ரெஸ்லா நிறுவனத்தின் ‘விபத்து அறிக்கை’ யில் (injury report) அது ஒரு சிறு விபத்து எனவும் காயமடைந்தவருக்கு ஓய்வு கூடத் தேவைப்ப்டவில்லை எனவும் பதியப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாது இச்சம்பவத்தைப்பற்றி ரெஸ்லா நிறுவனம் இதுவரை பகிரங்கமாக எதையும் தெரிவிக்கவில்லை.

ரெஸ்லா நிறுவனத்தில் இதுபோன்ற பல தொழில்நுட்பக் குறைபாடுகள் காணப்படுகின்றன எனவும், ரெஸ்லா வாகனங்களிலும் இப்படியான பல தொழில்நுட்ப விபத்துகள் ஏற்பட்டுள்ளன எனவும் இவ்விடயங்கள் வெளியே வராது நிறுவனம் பார்த்துக்கொள்கிறது என்றும் பரவலான கருத்துக்கள் உள்ளன. பங்குச் சந்தையில் ரெஸ்லாவின் பங்கு விலைகள் சரியாது பார்த்துக்கொள்வதற்காக தேர்ந்தெடுத்த சில ரெஸ்லா பாவனையாளர் மூலம் சமூக ஊடகங்களில் இவ்வாகனங்களைப் பற்றி நிறையவே புழுகுகளை எழுதி தவறுகளை மறைக்கும்படி கூறி அவர்களுக்கு மறைமுக சன்மானங்களை நிறுவனம் வழங்குகிறது என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு. இதற்காகவே முதலாளி மஸ்க் ருவிட்டர் செய்தி ஸ்தாபனத்தை வாங்கினார் எனவும் கூறப்படுகிறது.

ரெஸ்லா ஆலையில் ‘விபத்துக்களின்’ காரணமாகப் பல உயிரிழப்புகள் நிக்ழந்துள்ளன எனவும் செப்டம்பர் 2021 இல் ஒரு கட்டிட நிர்மாணத் தொழிலாளியின் மரணம் உடபடப் பல விபத்துகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன எனவும் பாதிக்கப்பட்ட ஒரு தொழிலாளியைப் பிரதிநித்துவப்படுத்தும் ஹன்னா அலெக்சாண்டர் என்ற வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கலிபோர்ணியா மாநிலத்தில் தொழிலாளர்களுக்குச் சார்பான பல்வேறு சட்டங்கள் காரணமாக அங்குள்ள ரெஸ்லா ஆலையில் இப்படியான விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் கிடைக்கின்றன எனவும் ரெக்சாஸ் மாநிலத்தில் தொழிலாளருக்குச் சாதகமான சட்டங்கள் இல்லை எனவும் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். Photo by Alex Knight on Unsplash