Uncategorized

றொஹிங்யா இனப்படுகொலை | குற்றவியல் நீதிமன்றத்திற்குத் தயாராகும் ஒங் சான் சூ சீ

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது
ICC approves probe into Myanmar's alleged crimes against Rohingya
துரத்தப்பட்டு இரண்டாவது வருடத்தை வங்காள தேசத்தில் கொக்ஸ் பஜாரில் நினைவுகூரும் றொஹிங்யா அகதிகள் – படம்: ரஹ்மான் / ராய்ட்டர்ஸ்

மியான்மாரில் (பர்மா) ரொஹிங்யா சிறுபான்மையினருக்கு எதிராக இனவழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அந் நாட்டின் அரசு மற்றும் இராணுவத்தினர் மீது மனித உரிமை அமைப்புகள் நீணடகாலமாகக் குற்றஞ்சாட்டி வந்தன. அந்நாட்டின் தலைவர் ஓங் சான் சூ சி இக்குற்றங்களை மறுத்தது மட்டுமல்லாது அதுபற்றிய விசாரணைகளை மேற்கொள்ளவும் மறுத்து வருகிறார். அகிம்சை முறையில் ஜனநாயகத்தை மீட்கப் போராடியவர் எனக்கூறி இவருக்கு 1991 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இன்று (வியாழன், நவம்பர் 14, 2019) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் 2017 இல் மியான்மார் அதன் சிறுபான்மையினரான றொஹிங்க்யா முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களின் போது, மனிதகுலத்துக்கெதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது என்பதை அங்கீகரித்த்துடன் அது தொடர்பான முழு விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்கள்.

நேற்று ஆர்ஜன்ரீனாவில் றொஹிங்யா முஸ்லிம்ளின் இனப்படுகொலைக் குற்ற வழக்கொன்றும் மியன்மார் தலைவர் ஒங் சான் சு சி மீது பதியப்பட்டுள்ளது.

மியான்மாரிலிருந்து பலவந்தமாக விரட்டப்பட்ட 740,000 க்கும் அதிகமான றொஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்தில் வசதிகளற்ற முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மீது ஏவப்பட்ட வன்முறை இனப்படுகொலைக்குச் சமமாகும் என ஐ.நா. விசாரணைக்குழு தீர்ப்பளித்துள்ளது.

உலகில் இழைக்கப்படும் மிகக் கொடுமையான குற்றங்களை விசாரிப்பதற்கென 2002 இல் நிறுவப்பட்ட ஹேக் கைத் தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மியன்மார் தொடர்பாக விசாரணைகளைத் தொடங்குமாறு அதன் வழக்குத் தொடுநருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதே வேளை கம்பியா வும் 57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு சார்பில் மியன்மார் மீது இனப்படுகொலைக்கான வழக்கொன்றை நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice (ICJ)) தொடுத்துள்ளது. அடையாளப்படுத்தத்தக்க இனம், மதம் என்ற அடிப்படையில் றொஹிங்யா மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை, நாடுகடத்தல், துன்புறுத்தல் ஆகிய குற்றங்கள் இழைக்கப்பட்டன என அவ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

றொஹிங்யா மாக்கள் மீது இனப்படுகொலையோ அல்லது இனச்சுத்திகரிப்போ நிகழ்த்தப்படவில்லை என மியன்மார் பல காலமாகச் சொல்லிவருகிறது.

மியன்மார் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு அங்கத்தவராக இல்லாது போனாலும், துரத்தப்பட்ட அகதிகள் தங்கியிருக்கும் வங்களாதேசம் அங்கத்தவராக இருக்கின்ற படியால் இவ் விசாரணையை மேற்கொள்வதற்கு அதற்கு அதிகாரமுண்டு என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூறியுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்குத் தொடுநர் ஃபற்றூ பென்சூடா மியான்மார் மீதான ஆரம்ப விசாரணைகளை செப்டம்பர் 2018 இல் ஆரம்பித்திருந்தாராயினும் இந்த வருடம் ஜூலையில் முழுமையான விசாரணை ஒன்றைத் தொடன்குவற்கு விண்ணப்பித்திருந்தார். இந்த வாரம் அவ் விசாரணைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கம்பியாவினால் தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணைகள் வரும் டிசம்பரில் ஆரம்பமாகவுள்ளது. நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் பொதுவாக நாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்சினைகள் போன்றவற்றையே விசாரித்து வந்தாலும் தற்போது தான் இனப்படுகொலை, பயங்கரவாதம் போன்ற விடயங்களில் ஐ.நா. விதிமுறைகள் (UN Conventions) மீறப்படுவதை விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

அதே வேளை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நாடுகள் மீதல்லாது தனிப்பட்டவர்கள் சம்பந்தப்படும் குற்றவியல் நடவடிக்கைகளை மட்டுமே விசாரித்து அவர்களைக் கைது செய்வதற்கான பிடியாணைகளை வழங்கும். அந்த வகையில் மியன்மாரின் இராணுவத் தலைவர்கள் குறிவைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு.

ஓங் சான் சு சி விடயத்தில், மியன்மாரின் உயர் அதிகாரிகளில் ஒருவர் என்ற வகையில், றொஹிங்யா மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறைகள் மனிதத்துக்கு எதிரானவை எனக்கூறி ஆர்ஜென்ரீனாவில் புதன் கிழமை வழக்குத் தொடரப்பட்டுள்ளது. உலகளாவிய அதிகார வரம்பு தத்துவத்தின் கீழ் (principle of universal jurisdiction) லத்தின் அமெரிக்க மனித உரிமைகள் அமைப்புகள் இவ் வழக்கைத் தொடர்ந்துள்ளன.

இவ் வழக்கில் பெரும்பான்மை இனமொன்றினால் சிறுபான்மை இனமொன்றின் இருப்பு அச்சுறுத்தப்படுகின்றது எனவும் அதற்குக் காரணமான மின் ஓங்க் ஹிளெயிங் உட்பட்ட இராணுவத் தலைவர்களும், ஓங் சான் சு சி உட்பட்ட சிவிலியன் தலைவர்களும் நீதியை எதிர்கொள்ள வேண்டுமெனவும் கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய அதிகார வரம்பு தத்துவத்தின் கீழ், ஆர்ஜென்ரீன நீதிமன்றங்கள் பல வழக்குகளை ஏற்கெனவே நடத்தியிருக்கின்றன. அவற்றில் ஸ்பெயினில் சர்வாதிகாரி ஃபிரான்சிஸ்கோ ஃபிராங்கோவின் ஆட்சி, சீனாவின் ஃபலுன் கொங் அமைப்பு ஆகியன விசாரிக்கப்பட்டிருந்தன.

Rohingya men kneel as members of Myanmar's security forces stand guard in Inn Din village in September 2017 [Reuters]
செப்டம்பர் 2017 இல் இன் டின் கிராமத்தில் இராணுவத்தினரால் முழங்காலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் றொஹிங்யா முஸ்லிம்கள் – படம்: ராய்ட்டர்ஸ்
‘இனப்படுகொலை’

2017 இல் மியான்மார் இராணுவத்தினால் றொஹிங்யா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் ‘இனப்படுகொலை’ என ஐ.நா. விசாரணைக்குழு அடையாளப்படுத்தி ஐ.நா. பாதுகாப்புச் சபை (UN Security Council) இவ் விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (International Criminal Court (ICC)) விசாரணையொன்றுக்காகப் பரிந்துரைக்கும்படி கேட்டிருந்தது. ஆனால் அதற்குத் தேவையே இல்லாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தானாகவே விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.

இம் மூன்று வழக்குகள் தொடர்பாகவும் மியன்மார் இதுவரை அறிக்கையெதையும் வெளியிடவில்லை. தனது உள்ளக விசாரணைக் குழு, சொல்லப்படும் குற்றங்களை விசாரிக்கும் தகைமையைக் கொண்டிருக்கிறது என மியன்மார் அரசு முன்னர் இக் கோரிக்கையை நிராகரித்திருந்தது.

மியன்மாரின் பெரும்பான்மையினர் 2017 இல் நடைபெற்ற இராணுவ அட்டூழியங்களுக்குப் பெரும்பாலும் ஆதரவு தருவதாலும், முஸ்லிம் சிறுபான்மையினர் மியன்மாரின் குடியுரிமை கொண்டவர்களல்ல என அவர்கள் கருதுவதாலும் இராணுவ, சிவில் தலைமைகள் தொடர்ந்தும் கடும் போக்கையே கைக்கொண்டு வருகின்றனர்.