Spread the love

பயங்கரவாதத் தாக்குதல் எனச் சந்தேகம்

லண்டனிலுள்ள றெடிங்க் என்னுமிடத்தில் பயங்கரவாதி ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி மூன்று அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர், மேலும் மூவர் காயமடைந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக 25 வயதுடைய லிபிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தேம்ஸ்வலி பொலிசார் அறிவித்துள்ளனர்.

றெடிங்கிலுள்ள ஃபோர்பெரி கார்டின்ஸ் என்னும் இடத்தில் பொது வெளியில் கூடியிருந்த சில இளைஞர்கள் மீது திடீரென்று பாய்ந்த சந்தேகநபர் கத்தியால் தாக்க ஆரம்பித்தார் என, இச்சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்த சாட்சியொருவர் தெரிவித்ததாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

இச் சம்பவத்தின் பின்னால் பயங்கரவாதம் இருக்கலாம் எனப் பொலிசார் சந்தேகிப்பதாகவும், அதே வேளை சந்தேக நபர் உளநலக் கோளாறினால் பாதிக்கப்பட்டவரா என அறிய விசாரணைகள் தொடர்வதாகவும் அறியப்படுகிறது.

சனி மாலை 7 மணி போல் நடைபெற்ற இச் சம்பவத்தின்போது சந்தேக நபர், பல சுலோகங்களை உச்சரித்துக்கொண்டிருந்ததாகச் சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

சமபவம் நடைபெறுவதற்கு சற்று முன்னர் இனவாத எதிர்ப்பு (BLM) ஊர்வலமொன்று இந்த இடத்தில் நடைபெற்று முடிந்திருந்தது. பின்னர் அந்த பூங்கா பொழுதுபோக்காளர்களால் நிரம்பி வழிந்ததென்றும், காலநிலை மிகவும் சாதகமாக இருந்ததால் பலர் குழுக்களாகக் கூடி ஆராவரத்தோடு மகிழ்ந்திருந்தனர் எனவும் சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

சமபவம் நடைபெற்ற இடத்துக்கு 2 மைல் தூரத்தில் இருந்த கவுன்சில் ஃபிளாட் ஒன்றில் சந்தேகநபர் வசித்து வந்ததாகவும், அது சிறையிலிருந்து வெளிவரும் கைதிகளைத் தற்காலிகமாகத் தங்கவைக்கும் இடமென்றும் சாட்சி ஒருவரை மேற்க்கோள் காட்டி தி இண்டிப்பெண்டண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கத்திகள் போன்ற சிறு ஆயுதங்களால் பொதுமக்கள் மீது தாக்குதல்களைச் செய்யுமாறு ஐசிஸ் உலகம் முழுவதிலுமுள்ள தனது ஆதரவாளர்களைக் கேட்டு வருகிறது. கொறோணாவைரஸ் ஊரடங்கினால் பலர் அதிக நேரம் இணையத்தளங்களில் நேரம் செலவழிப்பதும் இப்படியான சம்பவங்களுக்கு உந்துதலாக அமையலாம் என பாதுகாப்புத்துறை நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 | இலங்கை இன்னும் ஆபத்தான நாடு - பிரித்தானியா