News & AnalysisSri Lanka

றிஷாட் பதியுதீனின் வீட்டுப் பணிப்பெண் எரிகாயங்களுடன் மரணம்

விசாரணை தொடர்கிறது

தலவாக்கொல்லை, தயாகம தோட்டத்தைச் சேர்ந்த ஹிஷாலினி என்னும் பெயருடைய 16 வயதுடைய பணிப்பெண் ஒருவர் எரிகாயங்களுடன் ஜூலை 3 ம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காதமையால் ஜூலை 15 அன்று மரணமடைந்துள்ளார்.

ஹிஷாலினியின் மரண அறிவித்தல் பிரசுரம் (படம்: @kavinthans)

இவர் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் பொரளை வீட்டில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து வந்தார் எனவும் பணிக்கெடுக்கும்போது அவருக்கு 15 வயது மட்டுமே எனவும் பொலிஸ் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

பொலிசாருக்கு அளிக்கப்பட்ட வாக்குமூலத்தின்படி சில மாதங்களுக்கு முன்னரே ஹிஷாலினியை அவரது பெற்றோர் பதியுதீன் வீட்டுக்குப் பணிக்கெனக் கொண்டுவந்திருந்தார்கள் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் அவர் கடந்த அக்டோபர் 2020 இல். 15 வயதாகவிருக்கும்போது, பணிக்கெனக் கொண்டுவரப்பட்டிருந்தார் எனத் தற்போது தெரியவந்துள்ளது.

இலங்கை வேலையாட்கள் வயதுச் சட்டத்தின்படி 15 வயதுடையை சிறுவரைப் பணிகளுக்கு வைத்துக்கொள்ள முடியாது.

இதன் காரணமாக, ஹிஷாலினியின் தாயாரிடம் இரண்டாவது தடவையாக வாக்குமூலத்தைப் பொலிசார் பெறவிருக்கின்றனர் எனப் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொரளை பொலிஸ் பிரிவும் தென் கொழும்பு குழந்தைகள், பெண்கள் அலுவலகமும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.