றிச்சார்ட் டி சொய்சா – மறுக்கப்பட்ட மா மனிதம்
மாயமான்
[கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகையில், பெப்ரவரி 22, 2021 அன்று விதாங்க பெரேரா அவர்கள் எழுதிய கட்டுரையை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டது]
றிச்சார்ட் டி சொய்சாவை, தற்போதைய தமிழ்ச் சந்ததிகளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அரைத் தமிழராக இருந்தமையால் தமிழ் உணர்வாளர்களின் மனதில் இடம்பிடிக்காமல் போனதற்கும் காரணமாகவிருக்கலாம். வனுஷி சீதாஞ்சலி- வால்ட்டர்ஸ் நியூசீலந்து பாராளுமன்றத்தில் ‘ஆயு போவன் – வணக்கம்’ எனப் பேச ஆரம்பித்தபோது உள்ளம் உருகியவர்களுக்கு, அவர் றிச்சார்ட்டின் உறவினர் என்று தெரிந்திருக்கவும் நியாயமில்லை.
றிச்சார்ட் டி சொய்சாவை நான் சிங்கள / தமிழ் நாயகனாக உருமாற்றிக் கும்பிட முன்வரவில்லை. மனிதத்தின் சிறந்த ஒரு அவதாரமாகவே அவரை வழிபட விரும்புகிறேன். அவர் நம்பியவற்றுக்காக வாழ்ந்த ஒருவர். அதற்காகவே அவரது உயிரும் பறிக்கப்பட்டது. குறுகிய வயதில் கொல்லப்படும்போது – அவருக்கு 32 வயது.
பெப்ரவரி 18, 1990 இல் அவர் கொல்லப்பட்டிருந்தார். வழக்கம்போல அரச இயந்திரம் அதற்கும் காரணமாகவிருந்தது. தற்போது “நாயம் பேசும்” பல கனவான்கள் இந்த இயந்திரத்துக்கு எண்ணை ஊற்றியவர்கள். இந்த இயந்திரம் இன்னும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. றிச்சார்ட்டிற்குப் பிறகு, அதன் உற்பத்திக் கூடையில் பல ஊடகக்காரர்கள் எலும்புகளாக வெளிப்பட்டார்கள். தராக்கி சிவராம், நிர்மலராஜன், லசந்தா விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலிகொட எனப் பலர். இந்த இயந்திரத்திடம் மாட்டுப்படாமல் வெளிநாட்டுக்கு ஓடி இன்னமும் வாய் திறக்க அஞ்சியிருப்பவர்கள் மேலும் பலர். இயந்திரம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது.
றிச்சார்ட் டி சொய்சா
றிச்சார்ட் டி சொய்சா ஒரு வகையில் ஒரு குழந்தை மேதாவி. அரங்க நாடகம், ஆங்கிலக் கவிதைகள், அரசியல் கட்டுரைகள், விமர்சனங்கள், பல்வகை ஊடகப் பங்களிப்புகள், மனித உரிமைச் செயற்பாடுகள் முதல் – சாதாரண மனிதனுக்காக இரங்குவது வரை, தனது 32 வயதுக்குள் அவர் பலதைச் சாதித்திருந்தார் என்பது, அவரின் மேதாவித் தனத்தை உறுதிசெய்யப் போதுமானது.
கொழும்பிருந்த இரு பிரபல குடும்பங்களின் வழித் தோன்றல் றிச்சர்ட் டி சொய்சா. அவர்களின் நட்பு வட்டத்தில் அரச பிரபலங்களும், அதிகார வர்க்கமும் அடங்கியிருந்தது.
1980 களின் பிற்பகுதியில் தெற்கு இலங்கையில் ஜே.வி.பி. யின் இராண்டாவது வருகையும், எழுச்சியும், மறைவும் நடந்து முடிந்தன. இதன்போது நம் தமிழ் இளையோரைப் போலச் சமுதாய ஈடேற்றத்துக்கென்று போராடப் புறப்பட்ட பல சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். தெருவில் அரைகுறையாய் எரிக்கப்பட்டுக்கிடந்த அவர்களின் சடலங்கள் தமிழர்களின் இதயங்களைத் தொடும் அளவுக்கு காட்சிப்படுத்தப்படவில்லை (இதே நிலை தான் பின்னாளில் தமிழர்கள் விடயத்திலும் நடந்தது என்பது வேறு விடயம்).
இவற்றைக் கண்டு, பார்த்து வருந்திய கவிஞன் றிச்சார்ட் எழுதித் தள்ளினான். அப்போது ஆட்சியில் இருந்த பிரேமதாசா அரசு, தற்போதயை அரசைப் போலவே போதுமான கொலைகாரர்களை உயர் பதவிகளில் வைத்திருந்தது. அத்துலத் முதலி, ரஞ்சன் விஜேரத்னா போன்றோர் அவர்களில் சிலர். இயந்திரம் இரவு பகலாக இயங்கியது. பல்லாயிரக் கணக்கானோர் அதற்குப் பலியாகினர். அப்போதுதான் ‘மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான மஹிந்த ராஜபக்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் பெட்டிகள் படுக்கைகளுடன் போய், ஜெனிவா மனித உரிமைகள் அலுவலக வாசலில் நின்று நீதி மணியை அடித்துக்கொண்டனர். “இது உள்நாட்டு விவகாரம், இதில் வெளிநாடுகள் தலையிட அனுமதிக்க முடியாது” என்ற விடயத்தை அப்போது சொல்வதற்காக அவர்கள் ஜெனிவாவுக்குச் சென்றதாக இருந்திருக்காது என நம்பலாம்.
கொலை
றிச்சார்ட் கொலை செய்யப்பட்ட அன்று சில குண்டர்கள் அவரை அவரது வீட்டிலிருந்து கடத்திச் சென்றார்கள். இக் குண்டர்கள் அப்போது சிறப்புப் பொலிஸ் பிரிவு அதிகாரியாகவிருந்த றொணி குணசிங்காவின் கீழ் செயற்பட்டார்கள் எனக் கூறப்பட்டது. அரச தொடர்புகள் காரணமாக அவரது கொலை நகரம், நாடு முழுவதும் அப்போது பேசுபொருளாக மாறியது.
றிச்சார்ட்டின் கொலை இயந்திரத்தின் பசியைக் குறைத்திருக்க வேண்டும். அதன் பிறகு இளையோர் மாயமாக மறைவது சற்றுத் தளர்ந்தது. தனது மரணத்தின் மூலம் அக் கவிஞன் வீதிகளில் தடைக்கற்களை வீசி விட்டான்.
வதந்திகள்
றிச்சார்ட் டி சொய்சாவின் கொலை பல மர்மக் கதைகளுக்கு வித்திட்டது. அவரது கொலைக்கான காரணம் பற்றிய, அல்லது செய்தவர்கள் பற்றிய விபரங்கள் மறைக்கப்பட்டன. இலங்கையில் அப்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல விடயங்கள் றிச்சார்ட்டின் கைகளுக்குக் கிடைத் திருந்ததாகவும், அதை அவர் பகிரங்கப்படுத்தக் காத்திருந்ததாகவும் அதுவே அவரது கொலைக்குக் காரணமாகிவிட்டதாகவும் சிலர் பேசிக்கொண்டார்கள்.
வெறிற்றாஸ் வானொலி
இக் காலத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து ஒலிபரப்பாகிய வெறிற்றாஸ் என்னும் வானொலி நிலையம் உலகெங்கும் நடைபெறும் அட்டூழியங்களை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்கு வகித்துக்கொண்டிருந்தது. இங்கு கடமையாற்றும்போதுதான் அருட் தந்தை ஜெகத் கஸ்பார் ஈழத் தமிழர் போராட்டம் பற்றிய செய்திகளையும் உலகுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். றிச்சார்ட்டின் கொலை நடைபெறுவதற்கு முன்னர் அவருக்கு வெறிற்றாஸ் வானொலி நிலையத்தில் வேலை கிடைத்திருப்பதாகவும், அதன் மூலம் அவர் தன்னிடமிருந்த இலங்கை அரசு பற்றிய தகவல்களை வெளியிடப் போகிறார் என்ற அச்சமும் அரச இயந்திரத்துக்கு அவர் பலியாகிப் போனதற்குக் காரணமெனவும் கூறப்பட்டது.
பிரேமதாச
அதே வேளை, அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவைப் பற்றிய, “மே கவுத, மொனவத கரன்னே” என்ற தலைப்பிட்ட நாடகமொன்றை றிச்சார்ட் எழுதித் தயாரித்திருந்ததாகவும் அதில் அவர் பிரேமதாசவை மிகவும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருந்ததாகவும் அதனால் அந்நாடகமே அவருக்கு யமனாக மாறியதாகவும் சிலர் சொல்கிறார்கள்.
லலித் அத்துலத் முதலி
பிரேமதாச ஆட்சியில் உலாவிய இன்னுமொரு கொடியவர் லலித் அத்துலத் முதலி என்பது தமிழர் பலருக்கும் மிகத் தெரிந்த விடயம். யாழ். நூலக எரிப்பின் தந்தையாக வரலாற்றில் எழுதப்பட்ட இவர் தென்னிலங்கையிலும் சமமான அழிவுகளுக்குக் காரணமானவர்.
றிச்சார்ட்டின் கொலையின் பின்னால் அத்துலத் முதலியின் கரங்கள் உண்டென, சட்டத் தரணியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான பிறின்ஸ் குணசேகர எழுதிய “ஒரு இழந்த தலைமுறை: பிரச்சினையில் இலங்கை: சொல்லாத கதை” (A Lost Generation: Sri Lanka in Crisis: The Untold Story) என்ற நூலில் விபரமாகக் குறிப்பிடுகிறார். தனது தகவல்களுக்கு ஆதார மூலமாக, அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரத்னவிடந் தனக்கிருந்த நேரடித் தொடர்பைக் குறிப்பிடுகிறார்.
ஜனக மல்லிமாராச்சி
சில வருடங்களுக்கு முன்னர் வெளியான “ரது அங்குரு” என்ற, ஜனக மல்லிமாராச்சி அவர்களின் நினைவுக் குறிப்பில், றிச்சார்ட் டி சொய்சாவின் கொலைக்குச் சில நாட்களுக்கு முன்னர் அவரைத் தான் சந்தித்தமை பற்றிக் கூறுகிறார். அப்போது இருவரும் சிறீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பணி புரிந்துவந்தார்கள் எனவும், 1989 முடிவில், தென்னிலங்கையில் நடைபெற்றுவரும் இளைஞர்கள் கொலை பற்றி அவர் மிகுந்த கவலை கொண்டிருந்ததாகவும். அக் கொலைகள் நாட்டின் பெருமழிவிற்குக் காரணமாவதால் அதை நிறுத்தவேண்டுமென அவர் ஆதங்கப்பட்டதாகவும் மல்லிமாராச்சி கூறுகிறார்.
மல்லிமாராச்சியின் தந்தையார் அப்போது அரசாங்கத்தில் ஒரு அமைச்சராகவிருந்தார். ஜனகவின் சகோதரர் ஜயந்த என்பவர் (இவரைப் பின்னர் ஜே.வி.பி. யினர் கொன்றுவிட்டதாகச் சந்தேகிக்கப்பட்டது) அப்போது பிரதேச சபை அரசியலில் மிக முக்கிய புள்ளியாக இருந்தவர். தந்தை மல்லவாராச்சி, பிரேமதாச அரசில் கூட்டுறவு அமைச்சராக இருந்தார். 1994 அக்டோபர் தொட்டலங்கா குண்டு வெடிப்பில் இவரும் கொல்லப்பட்டிருந்தார்.
மனோராணி சரவணமுத்து
மனோராணி சரவணமுத்து றிச்சார்ட் டி சொய்சாவின் தாயாவார். இலங்கையின் வடக்கில் நீதிகேட்டுப் போராடிவரும் ஆயிரக்கணக்கான தாய்மார்களைப் போலவவே மனோராணியும், அவர் 2004 இல் இறக்கும்வரை, தனது மகனின் கொலைக்காக நீதிகேட்டுப் போராடி வந்தார்.
றிச்சார்ட் டி சொய்சாவின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களெனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள், கொடுக்கப்பட்ட ஆதாரங்களில் காணப்பட்ட வேறுபாடுகள் காரணமாக 2005 இல் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவரான றொணி குணசிங்க, மே 1, 1993 இல் ஆர்மர் வீதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பிரேமதாசவுடன் சேர்த்துக் கொல்லப்பட்டிருந்தார்.
ஒரு இளைஞராகவும், கலை இலக்கிய, அரசியல், மனித உரிமைகள் செயற்பாட்டாளராகவும் றிச்சார்ட் டி சொய்சா தன் குறு வாழ்நாளில் மகத்தான சாதனைகளுக்குக் காரணமானவர். தன்னுயிரைக் கொடுத்து அவர் தென்னிலங்கைப் படுகொலைகளை நிறுத்தியிருந்தார் என்பது பெருமைப்படும் விடயமானாலும் அந்த இயந்திரம் எங்கேயும் போய்விடவில்லை. பராமரிக்கப்பட்டு மீண்டும் அது சேவையில் ஈடுபடுத்தப்பட்டு லசாந்தா விக்கிரமதுங்க, தராக்கி சிவராம் எனத் தன் பலியெடுப்பைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அவரை நினைவுகூர்வது வரலாற்றை ஞாபகப்படுத்துவதாகும்.
