News & AnalysisSri Lanka

றிசாட் பதியுதீன் மீண்டும் ஆளும் கட்சிக்கு?


செய்தி அலசல்

பிந்திய செய்தி (அக். 02):

றிஷாட் பதியுதீனின் சகோதரர், றியாஜ், ஐந்து மாதங்களின் பின் விடுதலை – ஆதாரம் போதாமை காரணம்!

வவுனியா மாவட்டச் செயலகப் பிரிவிற்குள் புதியதொரு அவைக்கள மண்டபமொன்று (auditorium) இன்று , இராஜாங்க அமைச்சர் சமால் ராஜபக்ச அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இவ் வைபவத்திற்கு முன்னாள் அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் அழைக்கப்பட்டதுமின்றி, அமைச்சர் சமாலினால் அவர் மிகவும் குதூகலமாகக் கைகுலுக்கி வரவேற்கப்பட்டது, அவர் மீண்டும் கட்சி மாறத் தயாராகிறாரா எனப் பலரது மனங்களிலும் சந்தேகங்களை எழுப்பி வருகிறது.

வன்னி மீள்குடியேற்றம, புனர்கட்டுமானப் பணிகளுக்குப் பொறுப்பான பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன நிகழ்வில் பங்குபற்றியவர்களுடன் உரையாடும்போது, “பதியுதீன் அமைச்சராகவிருந்தபோது, இனப் பாகுபாடு காட்டாது, இவ் விடயத்தில் தனக்கு அதியுச்ச ஆதரவைத் தந்திருந்தார்” எனப் புகழாரம் வழங்கினார்.

ஊடகவியலாளருடன் பேசும்போது, 20வது திருத்தம் பற்றித் தனது கட்சி எந்தவித நிலைப்பாட்டையும் இன்னும் எடுக்கவில்லை எனவும், அதிலுள்ள உட்பிரிவுகள் தொடர்பாக அது உடன்படவோ அல்லது மறுக்கவோ முடியுமென்றும் பதியுதீன் தெரிவித்தார். ஆளும் கட்சியில் இணைவது தொடர்பாக அவர்கள் தன்னிடம் கோரிக்கை எதையும் முன்வைத்ததோ அல்லது அதைப்பற்றி கலந்துரையாடியதோ கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.



20வது திருத்தம் இறுதி வாக்கெடுப்புக்கு வரும்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் ஆளும் கட்சியில் இருந்தாலும், “தேவையானால் எதிர்க்கட்சியிலிருந்து உறுப்பினர்கள் தாவுவதற்குத் தயாராகவிருக்கிறார்கள்” என்று மஹிந்த ராஜபக்ச முன்னர் தெரிவித்திருந்தார்.

பதியுதீன் கட்சி தாவுவதால் இரண்டு தரப்புக்குமே நன்மைகளுண்டு. சட்டப் பிரச்சினையில் மாட்டித் தொந்தரவு செய்துவந்த ராஜபக்சக்களிடமிருந்து விடுதலை பெற்றுத் தன் தனிக்காடான வவுனியாவில் மீண்டும் அதிகாரம் செலுத்த அவருக்கு வழி பிறக்கும். கமால் குணரட்ண போன்றவர்களின் சிங்கள குடியேற்றப்பரம்பலை சர்வதேசங்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, பதியுதீனை வைத்து முடித்துவிடலாம். தமிழருக்குத் தெரியாத ‘அண்டர் த றேடார் அரசியல் கலை’ என்பது இது தான்.

-மாயமான்