றம்புக்கண கொலை: அமைச்சர் அமுனுகம உத்தரவிட்டாரா?
ரம்புக்கண ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கொலை தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளின்போது துப்பாக்கிச் சூட்டை ஏவிய கேகாலை பொலிஸ் பிரிவிவைச் சேர்ந்தபொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்னவும் மேலுமிரு பொலிஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இத் துப்பாக்கிச் சூட்டிற்கான உத்தரவை போக்குவரத்து மற்றும் தொழில்துறைகள் அமைச்சர் திலும் அமுனுகம அவர்களே பிறப்பித்திருந்தார் எனவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீர்த்திரட்ண பிரதமர் ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரியின் உறவினர் எனவும் ராஜபக்ச குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர் எனவும் கூறப்படுகிறது. 12 மணித்தியாலங்களாகத் தொடர்ந்து முடக்கப்பட்டிருந்த ரயில் பாதையைத் திறப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் அமுனுகம உத்தரவிட்டார் எனவும் “எனக்கு உத்தரவைத் தந்தால் எனக்குத் தெரிந்த வழியில் நான் அதைத் திறப்பேன்” என கீர்த்திரத்ன அமைச்சருக்குக் கூறியதாகவும் அதன் பின்னரே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது எனவும் இத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரின் உத்தரவு கிடைத்ததும் அருகே தரிக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு பொலிஸ்காரர் ஒருவர் தீமூட்டியதைத் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத் துப்பாக்கிச் சூட்டின்போது ஒருவர் கொல்லப்பட்டும் 11 பேர் காயமடைந்தும் இருந்தனர். காயமடைந்தவர்களில் மூவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து ஜனாதிபதி அமைச்சர் அமுனுகமவை அழைத்துகடுமையாகத் திட்டித் தீர்த்ததாகவும் இத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீர்த்திரட்ணாவுக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரிவு முறைப்பாடு
இதே வேளை ரம்புக்கண கொலைச் சம்பவம் தொடர்பாக நேற்று (21) விசாரணைகளை ஆரம்பித்த கேகாலை மாஜிஸ்திரேட் வாசன நவரட்ண 19 ம் திகதி நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பான அறிக்கையொன்றை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்கும்படி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சமபவ தினமன்று எரிக்கப்பட்ட முச்சக்கர வண்டி தொடர்பாக மாஜிஸ்திரேட் முன்னிலையில் சாட்சியமளித்த் ஒருவர் அதி ஒரு பொலிஸ்காரர் எரித்ததை தான் கண்ணால் கண்டதாகவும் அச் சம்பவத்தைப் பலர் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
“ஒரு பொலிஸ் அதிகாரியும், விசேட செயலணி அதிகாரியும் அவ்விடத்துக்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து மேலும் மூவர் அவர்களைப் பிந்தொடர்ந்து வந்தனர். அவர்களில் மெல்லிய , உயரமான ஒருவர் முச்சக்கர வண்டிக்குத் தீமூட்டினார்” எனவும் அவர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் சாட்சியமளித்தார்.
லக்சனின் கொலை தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்திரத்னாவைக் கைதுசெய்வதற்குப் போதுமான ஆதராங்கள் உள்ளனவென குற்ற விசாரணைப் பொலிசார் அறிக்கையொன்றை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
இதே வேளை நேற்று சமபவ இடத்தைப் பரிசோதனை செய்ய மாஜிஸ்திரேட் நேரடியாகச் சென்றபோது இன்னுமொரு சாட்சி, கொல்லப்பட்ட சாமிந்த லக்ஷனைப் பொலிஸ்காரர் ஒருவர் துரத்திச் சென்றார் எனவும் பின்னர் அங்கு தரிக்கப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுப்பதற்கு லக்ஷன் திரும்பி வரும்போது பொலிஸ்காரர் அவரைச் சுட்டார் எனவும் தெரிவித்துள்ளார். இப் பொலிஸ்காரரைத் தன்னால் அடையாளம் காட்டமுடியுமெனினும் தனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கும் காரணத்தால் அச்சத்தின் காரணமாகத் தன்னால் அதைச் செய்ய முடியாதுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட சாமிந்த லக்ஷன் சமீபத்தில் தலையில் அறுவைச் சிகிச்சை செய்திருந்த காரணத்தால் அவர் ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்ளவில்லை எனவும் ஆனால் தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அச் சாட்சி மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அமுனுகம வன்முறைக்குப் புதியவரல்ல. தேவையேற்படின் ஜனாதிபதி ஹிட்லர் போன்று செயற்படத்தான் வேண்டும் என அவர் முன்னர் தெரிவித்திருந்தது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.