NewsWorld

ரொஹின்ங்யா முஸ்லிம்களின் படுகொலைகளைத் தூண்டியமைக்காக முகநூல் மீது $150 பில்லியன் நட்டஈடு கோரி வழக்குஇனப்படுகொலைக்கும், இடப் பெயர்வுக்கும் முகநூலின் தவறான செய்திகளும் காரணம்

வன்முறைகளைத் தூண்டும் வகையான தகவல்களை முகநூல் கட்டுப்படுத்தாமையால் தான் மியன்மாரின் சிறுபான்மை இனமான றொஹிங்யா முஸ்லிம்களின் மீதான பெரும்பான்மையினரின் தாக்குதல்கள் உச்சம் பெற்றன எனக் கூறி, முகநூல் மீது $150 பில்லியன் நட்ட ஈடு கோரி அவர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

Image: Screen Scrape from Al Jazeera

கலிபோர்ணியா நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இவ் வழக்கில், முகநூல் (தற்போது மெற்றா) நிறுவனத்தின் மென்பொருள், தவறான தகவல்களைத் தெரிந்துகொண்டே அனுமதித்தது எனவும், இதனால் நிஜமான வன்முறை உருவாகுவதற்கு நிறுவனம் காரணமாகவிருந்தது எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

துவேசம், பிரிவினை, பொய்த் தகவல்கள் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் வளர்ச்சி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு இந் நிறுவனம் ஒரு றோபோ போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது எனவும் இதன் விளைவாகப் பல்லாயிரக்கணக்கான றொஹிங்யா மக்களது வாழ்வு பாழடிக்கப்பட்டிருக்கிறது எனவும் இவ்வழக்குப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. வினால் இனப்படுகொலை என வர்ணிக்கப்பட்ட றொஹிங்யா மக்கள் மீதான இவ்வன்முறைகள், 2017 இல் இராணுவத்தின் உதவியோடு பெரும்பான்மையின மக்களால் மேற்கொள்ளப்பட்டது. பல வெளிநாடுகள், ஐ.நா. போன்ற உலக அமைப்புகள் அழுத்தம் கொடுத்தும்கூட, அப்போது ஆட்சியிலிருந்தவரும், சமாதானத்துகான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சூன் சூ சி இவ் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த விரும்பவில்லை. இதனால் பல்லாயிரக் கணக்கான சிறுபான்மையின மக்கள் எல்லையைத் தாண்டி அண்டை நாடான வங்காளதேசத்திற்கு ஏதிலிகளாகக் குடிபெயர்ந்தனர்.மியன்மாரில் எஞ்சியிருக்கும் றொஹிங்யா இனமக்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. இவர்கள் அரசாங்கத்தினால் மிகவும் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். கடந்த பெப்ரவரி மாதம் இராணுவ சதி மூலம் ஆங் சான் சூ சியிடமிருந்து இராணுவம் ஆட்சியைப் பறித்துக்கொண்டதுடன் அவரை 4 வருடங்கள் சிறைக்குள் தள்ளியுமிருக்கிறது.

தவறான தகவல்களைப் பொதுவெளியில் பரவக் காரணமான முகநூல் போன்ற சமூக வலைத் தளங்கள் இன, மத, மொழி சார்ந்த வெறுப்புணர்வுகளை இலகுவாகப் பரப்புவதால் சமூகங்களிடையே அமைதியின்மையையும், துவேச உணர்வுகளையும், வன்முறைகளையும் தோற்றுவிக்கின்றன. இதை அரசியல்வாதிகளும், சர்வாதிகார ஆட்சிபீடங்களிலுள்ளவர்களும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

வன்முறையைத் தூண்டும் வகையிலான தகவல்களைக் கட்டுப்படுத்தவென மியன்மார் மொழி பேசும் பலரை பணிக்கு அமர்த்துவதென முகநூல் முன்னர் தெரிவித்திருந்தது. ஆனாலும் எதிர்பார்த்த அளவு மாற்றங்களை அது செய்யவில்லை என மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. தவறான இத் தகவல்கள் பற்றி முகநூல் நிறுவனத்துக்குப் பல தடவைகள் சுட்டிக்காட்டியபோதும் அவைபற்றி நிறுவனம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பொய்களும், விஷமப் பிரச்சாரங்களும் பரவுவதை அனுமதிப்பதால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளின் தேர்தல்கள்கூட திசைமாற்றப்படுகின்றன.

இவ்வகையான பொய்த் தகவல் பரிமாற்றத்தால் நிறுவனம் பல பில்லியன் பாவனையாளரை இழக்கிறது எனத் தெரிந்திருந்தும் நிறுவனம் இலாபத்தையும் வளர்ச்சியையும் மட்டுமே கருத்தில் கொள்கிறது என முன்னாள் முகநூல் நிறுவனத்தின் பணியாளர் ஃபிரான்செஸ் ஹோகென் அமெரிக்க காங்கிரஸில் வாக்குமூலமளித்திருந்தார். ஆனாலும் முகநூல் பாவனையாளர் ஒருவர் இடும் தவறான கருத்திற்காக முகநூல் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரமுடியாது என என அமெரிக்க சட்டம் கூறுகிறது. ஆனால் இந்த றொஹிங்யாவின் வழக்கு விடயத்தில் குற்றம் இழைக்கப்பட்ட இடம் மியன்மார் ஆகையால் அங்குள்ள சட்டம் முகநூல் நிறுவனத்தைப் பாதுகாக்க முடியாது என வழக்கைத் தொடர்ந்தவர்கள் கருதுகிறார்கள்.தேர்தல்கள், கோவிட் பெருந்தொற்று ஆகிய விடயங்கள் உட்படப் பல தவறான தகவல்கள் பரப்படுவதைக் கட்டுப்படுத்தும்படி அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் முகநூலுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதனால் முகநூல் நிறுவனம் தற்போது உள்ளூர் செய்தி ஸ்தாபனங்களுடன் கூட்டுச் சேர்ந்து அந்தந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் முகநூல் பதிவுகளைக் கண்காணித்து தவறானவை பற்றி அறியத் தருமம்படி கேட்டு வருவதாகவும் பிரான்ஸில் ஃபிரான்ஸ் பிரெஸ் ஏஜென்சியுடன் இணைந்து பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளது.

அப்படியிருந்தும் வெறுப்புக்களைத் தூண்டும் வகையிலான பதிவுகள் தொடர்ந்தும் முகநூலில் பிரசுரமாகின்றன என மனித உரிமை அமைப்புகள் கூறிவருகின்றன.

$70 பில்லியன் வருட வருமானத்தையும், 1.8 பில்லியன் பாவனையாளர்களையும் கொண்ட முகநூல் நிறுவனத்தின் பெறுமதி $800 பில்லியன்களாகும்.

ரொஹிங்யாக்களின் இவ்வழக்கு குறித்து முகநூல் நிறுவனம் இதுவரை எதுவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.