Real EstateUS & Canada

திருத்தம்: ரொறோண்டோ வெற்றுடமை (vacancy status) அறிவிப்பு – காலக்கெடு நீடிப்பு

பெப்ரவரி 3 காலக்கெடு மாத இறுதிவரை நீடிக்கப்படும் என நகர முதல்வர் ஜோன் ரோறி அறிவித்துள்ளார்

அறிவிக்காத வீட்டுரிமையாளருக்கான தண்டம் $250 -$10,000!

வீட்டில் குடியிருந்தாலும் அதைக் கட்டாயம் அறிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவ்வீடு வெற்றுடமை எனத் தீர்மானிக்கப்பட்டு அதற்கான வரி அறவிடப்படும்

ரொறோண்டோ நகரில் வீடுகளை வைத்திருப்பவர்கள் அவற்றின் குடியிருப்பு நிலைமை பற்றி (occupancy status) வருடா வருடம் மாநகரசபைக்கு அறிவிக்கவேண்டும் எனவும் அக்குடியிருப்புகள் வெறுமையாக இருக்கும் பட்சத்தில் அதற்கான வரியொன்றை (Vacancy Tax) நகராட்சிக்கு வழங்கவேண்டுமெனவும் மாநகரசபை கடந்த வருடம் சட்டமொன்றை இயற்றியிருந்தது. இதன் பிரகாரம் வீட்டில் குடியிருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன அதன் நிலைமையை அவர்கள் அறிவிக்க வேண்டும்.இச்சட்டத்தின் பிரகாரம் ரொறோண்டோவில் வீடுகளை வைத்திருப்பவர்கள் தமது வீடுகளின் குடியிர்ப்பு நிலைமை பற்றி நகராட்சிக்கு அறிவிக்கும் காலக்கெடு இன்றுடன் (பெப்ரவரி 2) முடிகிறது. அறிவிக்கத் தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இதுபற்றிய தகவல்கள் ரொறோண்டோ வீட்டுரிமையாளர்களுக்கு ஏற்கெனவே நகரசபையால் அனுப்பப்பட்டிருந்தன. அவ்வறிவித்தல் கிடைக்காதவர்கள் இத்தொடுப்பின் மூலம் நகரசபையின் இணையத்தளத்திற்குச் சென்று தமது விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து கொள்ளலாம்

இவ்வறிவிப்பை வீட்டுரிமையாளரோ அல்லது அவர்களுக்குப் பதியாக வேறெவரோ செய்துகொள்ள முடியும். இவ்வறிவிப்பை இணையத்தளம் மூலம் செய்துகொள்ள முடியும். வீடு வெறுமையாக இருந்தால் அதற்கான வரியையும் இணையத்தின் மூலம் செய்துகொள்ள முடியும்.

வெற்று வீட்டு வரிக்கணிப்பு

ரொறோண்டோ மாந்கரசபைக்குள் அடங்கும் அனைத்து வீடுகளுக்கும் அவற்றின் பெறுமதி பற்றிய தகவகல்கள் (Current Value Assessment (CVA) வருடா வருடம் அனுப்பப்படுகின்றது. இப்பெறுமதியை வைத்துத் தான் நகரசபை அவ்வீட்டுக்குரிய வருடாந்த ஆதன வரியைக் கணிப்பிடுகின்றது. இத்தகவல்கள் சில வேளைகளில் MPAC Value Assessment என்று நீல நிறத்தில் அச்சிட்ட தபாலுறைகளில் தனியாகவும் அனுப்பப்படலாம். இதில் அவ்வீடுகளின் பெறுமதி எவ்வாஅளவு என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் உங்கள் வீட்டின் பெறுமதி $1,000,000 (ஒரு மில்லியன்) என்றிருந்தால் அதன் 1% ($10,000 – பத்தாயிரம் டாலர்கள்) அபராதமாகச் செலுத்தவேண்டும். கடந்த வருடம் வீடு வெறுமனாக இருந்திருந்தால் அதற்கான வரியை இந்த வருடம் செலுத்த வேண்டும்.

எப்படி அறிவிப்பது?

(1). இவ்வறிவிப்பைச் செய்பவர் 21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும்.

(2). வீட்டின் பெறுமதி மதிப்புப் பத்திர இலக்கம் (Assessment Roll Number) தயாராக வைத்திருக்க வேண்டும் (இது உங்கள் ஆதனவரிப் பற்றுச்சீட்டில் (Property Tax Statement) உண்டு)

(3). உங்கள் வாடிக்கையாளர் இலக்கம் (Customer Number) தயாராக இருக்கவேண்டும். இதையும் உங்கள் ஆதனவரிப் பற்றுச்சீட்டில் இருந்து பெறமுடியும்.

(4). இவற்றை எடுத்து வைத்துக்கொண்டு பின்வரும் இணையத்தளத்தின் அறிவிப்புப் பக்கத்திற்குச் சென்று அதில் காணப்படும் பத்திரத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். கடிதமூலம் விண்ணப்பிப்பதற்கான படிவத்தை பின்வரும் தொடுப்பிலிருந்து தரவிறக்கிக் கொள்ளமுடியும். கடித மூலம் அனுப்பப்படும் விண்ணப்பம் பெப்ரவரி 2 இற்கு முதல் நகராட்சிக்குக் கிடைத்திருக்க வேண்டும்.

உரிமையாளர்கள் குடியிருக்காத வீடுகளைச் சிலவேளைகளில் நகரசபை தகவற் சோதனை (audit) ஏற்படலாம். இப்படி சோதனை செய்யும் பட்சத்தில் வீட்டுரிமையாளர்கள் அவ்ற்றின் வாடகைக் குடியிருப்பாளர்கள் பற்றிய் தகவல்களைக் கொடுக்கும்படி கேட்கப்படலாம்.

6 மாதங்கள் அல்லது மேலாக வெறுமையாக வீடுகள் இருந்திருந்தால் உரிமையாளர்கள் அதற்கான வெற்றுடமை வரியைத் தண்டமாகச் செலுத்த வேண்டும். சில வீடுகள் இவ்வெற்றுடமை விதிகளிலிருந்து விலக்குப் பெறுகின்றன. அவற்றுக்கான தகவல்களை இங்கு பெற்றுக்கொள்ளலாம். வெற்றுடமை வரி செலுத்தவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டகளுக்கு மார்ச் / ஏப்ரல் மாதங்களில் வரி அறவீட்டு அறிவித்தல்கள் அனுப்பப்படும். மே மாதம் 1ம் திகதிக்குள் அவ்வரியைச் செலுத்த வேண்டும்.

வீட்டில் குடியிருந்தாலும் அதைக் கட்டாயம் அறிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவ்வீடு வெற்றுடமை எனத் தீர்மானிக்கப்பட்டு அதற்கான வரி அறவிடப்படும். நகராட்சிக்கு இவ்வறிவித்தலிச் செய்யாதவர்கள் அல்லது தவறான அறிவித்தலைச் செய்பவர்கள் $250 முதல் $10,000 வரை தண்டம் செலுத்தவேண்டி ஏற்படலாம். (veedu.com). (Image Credit: City of Toronto)