Real EstateUS & Canada

ரொறோண்டோ | வீட்டு விலை சரிகிறதா?


மாயமான்

கோவிட்-19 தொற்று உலகப் பொருளாதாரத்தைப் புரட்டி எடுக்கும் இவ் வேளையில், ரொறோண்டோவில் வீட்டு விலை மட்டும், தான் இந்தக் கிரகத்தில் இல்லை என்பது போல் வீறு நடை போடுகிறது.

ஆகஸ்ட் 2020 இல் ரொறோண்டோ பெரும்பாகத்தில் (ரொறோண்டோவும் சுற்றுப்புறமும்) 10,775 வீடுகள் விற்பனையாகியுள்ளன. 2029 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, இது 40.3% அதிகம். ரொறோண்டோவின் வீடு விற்பனைத் துறையைக் கண்காணித்துவரும் நிறுவனமான Toronto Real Estate Board மூலம் பெறப்பட்ட தரவுகள் இவை. பிரத்தியேகமாக விற்கப்படும் வீடுகள் இவற்றில் அடங்கா.

ஆனால் கோவிட்-19 தாக்கத்தால் வீட்டுச் சந்தை சுமார் 10% அளவிலாவது சரிவதற்கு வாய்ப்புக்களுண்டு எனக் கடந்த சில மாதங்களாகச் சில நிபுணர்களும், வங்கிகள் போன்ற நிறுவனங்களும் கூறி வருகின்றன. வீடுகளை வாங்குபவர்களும் விற்பவர்களும் இந் நிபுணர்களின் ஆலோசனைகளைக் கருத்திலெடுப்பதாகத் தெரியவில்லை. வீட்டு விலைகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கின்றது. “Sold over asking” பதாகைகள் முகவர்களின் படங்களை விடப் பெரிதாக, வீட்டு முற்றங்களில் ஊஞ்சலாடிக்கொண்டிருகின்றன.

என்ன நடக்கிறது?

கோவிட்-19 தலை காட்ட ஆரம்பித்தபோது, சந்தையில் அதிகம் வீடுகள் விற்பனைக்கு வரவில்லை. வழக்கமான “சினோ உருகட்டும், வீட்டைத் திருத்திப் போட்டு விற்கப் போடுவம்” என்று பஞ்சியில் சோம்பல் முறித்த வீட்டுக்காரருக்கு முகவர்கள் கொடுத்த அலுப்பினாலும், முகவர் விடாப்பிடியாகக் குத்திய “Coming Soon” பதாகைகளாலும், சில வீடுகள், ‘சினோ உருகமுன்னரேயே’ தலையைக் காட்டின. ஆனால் இரண்டொரு நாட்களில் அங்கெல்லாம் “Coming Soon’ அகற்றப்பட்டு ‘Sold Over Asking’ பதாகைகள் அசைந்தாடின.கோவிட் பொருளாதாரத்தை மெதுவாகத் தின்ன ஆரம்பித்தது. சிலரது வீடுகளில் குசினி மேசைகளும், சோபாக்களும் பலரது அலுவலகங்களாக மாறியது. சிலருக்கு வேலைகள் தற்காலிகமாகப் பறிபோனது. பரோபகார அரசாங்கம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அள்ளிக் கொடுத்தது. செப்டம்பர் 13 வரை $78 பில்லியன் தொகையைக் கனடியர்களுக்கு மத்திய அரசு, கோவிட் நிவாரண நிதியாக அள்ளிக் கொடுத்திருக்கிறது. வீட்டுச் சொந்தக்காரர்கள் தங்கள் அடமானக் கடன்களை மீளச் செலுத்துவதைப் பின்போடலாம் என்று அவர்களது சுமைகளைத் தற்காலிகமாக இறக்கி வைத்தது. இப்படியாக, 760,000 கனடியர்களின் தலைகளிலிருந்து இறக்கி வைத்த தொகை $1 பில்லியன். (இவையெல்லாவற்றையும் மீண்டும் அவர்கள் தலைகளிலேயே வட்டியும் முதலுமாக வங்கிகள் தூக்கி வைக்கப் போகின்றன என்பது பிறிதொரு விடயம்)

கோவிட் தொற்றின் நிர்ப்பந்தத்தினால் முடக்கப்பட்டிருந்த நகரம் சோம்பல் முறிக்க அனுமதிக்கப்பட்டபோது, வீட்டு விலைகள் திரும்பவும் வானை நோக்கி உயர்ந்தன. ஜூன், ஜூலை (2020) மாதங்களில் ரொறோண்டோ பெரும்பாகத்தையும் தாண்டி, கிராமத்து வீடுகள், இளைப்பாறும் வாடிகள் எனக் கோவிட்டை விட மிக வேகமாக விற்பனை துரித கதியில் பரவியது.

என்ன காரணம்? நிபுணர்கள் இன்னும் முடிகளைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள். பல கருத்துக்களை அவர்கள் முன்வைக்கிறார்கள்.

அரசாங்கமும், நிபுணர்களும், நிறுவனங்களும் எதிர்பார்த்த அளவுக்கு, கோவிட்டினால், பொருளாதார ரீதியாக ‘மக்கள்’ பெரிதாக நொந்து போகவில்லை.

நோய்த் தொற்றிலிருந்து குடும்பத்தைப் பாதுகாக்க கிராமங்களில் தனி வீடுகளில் ‘விட்டு வீதியாகக்’ கால்களை நீட்டி, நாலு ஆடு கோழியை வளர்த்து நிம்மதியாக வாழலாம்’ என்ற வாழ்வியல் மாற்றம்.

இனி வருங்காலத்தில் அலுவகம் என்ற ஒன்றே இருக்க வாய்ப்பில்லை. பலரும் வீடுகளில் இருந்தே வேலை செய்யலாம். எனவே ‘தூரக் கிராமங்களில் மலிவாக வீடுகளை வாங்குவம்’ என்ற தீர்க்க தரிசனம்.விரைவில் வேலைவாய்ப்புகள் அருகப் போகின்றன எனவே வருமானம் உள்ளபோதே அடமானத்தை எடுத்துவிடவேண்டும் என்ற அவசரத்தில் (முகவர்களின் ஆலோசனைகளுடன் கூடவே) வீடுகளை வாங்கி வாடகைக்கு விடுதல்.

அமெரிக்காவினால் துரத்தப்பட்ட ‘புதிய குடியேறிகளின்’ வருகை.

என்ன காரணமாக இருந்தாலும், செப்டம்பர் முடிவில் மர்மம் துலங்கக்கூடுமென நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலிக அடமானச் சுமையிறக்கம், கோவிட் நிவாரணம் போன்ற சலுகைகள் முடிவுக்கு வரும்போது பலர் மகிழ்ச்சியாக அனுபவித்த ‘விடுமுறை’ முடிவுக்கு வந்துவிடும். பலர் திரும்பிப் போகும்போது அவர்கள் பணிபுரிந்த வேலைத் தலங்களின் முன்னால் ‘For Sale / Lease’ பாதாகைகள் தொங்கலாம்.

மிகவும் கடுமையான பொருளாதாரப் பாதிப்பு வருவதற்கான பல சமிக்ஞைகள் தோன்றவாரம்பித்துள்ளன. பல தசாப்தங்களாக இயங்கிவந்த வியாபார நிலையங்கள் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. குறிப்பாகப் பல தமிழர்கள் பணிபுரியும் உணவகத் துறையில் இப் பாதிப்பு மிகவும் வீரியமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

நிபுணர்களின் எதிர்பார்ப்பு – பலர் அடமானம் செலுத்த முடியாமல்போக, வங்கிகள் வீடுகளை ‘distress sale / power of sale’ என விற்பனைக்குப் போடுவார்கள் என்பதே.

“Balanced market” எனப்படும், சந்தையில் விற்பனைக்கு இருக்கும் வீடுகளும், விற்கப்படும் வீடுகளும் சமமாக இருக்கும் நிலை உண்டாவதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன என்கிறார்கள். கொண்டோமினியம் எனப்படும் தொடர்மாடிக் குடியிருப்புக்கள் ஏற்கெனவே இந்த நிலைக்கு வந்துவிட்டன. ரொறோண்டோ வீடு விற்பனைச் சபையின் (TREB) மாதாந்த அறிக்கயின்படி, 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் நாற் கூறில் (Q2), 2019 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, தொடர்மாடிக் குடியிருப்பு விற்பனை (எண்ணிக்கை) 52.8% த்தால் சரிந்திருக்கிறது. அதெ வேளை சராசரி விலை 5.1% த்தால் அதிகரித்திருக்கிறது. குடியிருப்புகள் வாடகைக்கு விடப்படும் எண்ணிக்கை, இதே காலப் பகுதியில், 24.8% த்தால் சரிந்திருக்கிறது. தனி வீடுகளின் விற்பனை, இதே காலப் பகுதியில், 40.3%த்தால் அதிகரித்திருக்கிறது.எதிர்காலம்

நடந்து முடிந்ததை இலகுவில் புள்ளி விபரமாக்கிவிடலாம். ஆனால் சந்தையை எதிர்வு கூறுவது அவ்வளவு இலகுவானதல்ல. அதற்கு, நாட்டின் பொருளாதாரம், வேலை வாய்ப்பு, நிதிக்கொள்கை போன்ற பல காரணங்கள் ஏக காலத்தில் ஆராயப்பட வேண்டும். கனடாவின் நிதிக்கொள்கை, இப் பல காரணங்களையும் அணுகி, வீட்டுச் சந்தையை, ஓரளவு சமநிலைப்படுத்தப்பட்ட இயங்குநிலையில் வைத்திருந்தது. ஆனால் கோவிட் இவை எல்லாவற்றையும் குழப்ப நிலைக்குள் தள்ளி விட்டது.

இதர மேற்குலக நாடுகளைப் போலவே, வீட்டுச் சந்தை, கனடாவின் பொருளாதார, வேலை வாய்ப்பு, நிதிக்கொள்கை (வட்டி வீதம்) போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கி வருகிறது. கோவிட்டின் பாதிப்பால் நாட்டின் பொருளாதாரமும், வேலை வாய்ப்புகளும் நிச்சயமாகச் சரிவதற்கான வாய்ப்புகள் நிறையவுண்டு. அதற்கான சமிக்ஞைகளும் வரத் தொடங்கிவிட்டன. மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பு (GDP growth), 2040 வரை 1.7% மாக இருக்கும். கோவிட் பரவலும் மிகவும் வீரியமாக இருக்குமானால், மேலும் பல நடமாட்ட முடக்கங்களை அரசு நிர்ப்பந்திக்கும். இதனால் பலரது வேலை வாய்ப்புகள் நிரந்தரமாக இழந்துபோவதற்கான சந்தர்ப்பங்களுண்டு.

இக் காரணங்களை முன்வைத்து, வங்கிகள், நிதி நிறுவனங்கள், கனடா வீடு, அடமானக் கூட்டுத்தாபனம் போன்ற பல நிறுவனங்கள், வீட்டுச் சந்தையில் சரிவு ஏற்படுமெநவே எதிர்வு கூறுகின்றன.