ரொறோண்டோ மருத்துவமனைகளில் கோவிட் தொற்று!
பேவியூ / லோறன்ஸ் சந்திப்பில் இருக்கும் ரொறோண்டோவில் பிரபலமான சன்னிபுரூக் மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சைப் பிரிவொன்றில் கோவிட்-19 நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அம் மருத்துவமனை அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளியன்று அம் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் 5 பேருக்கு நோய்த் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆரம்பத்தில் இவர்களில் ஒருவருக்கொருவர் தொடர்புடைய மூவர் மீது மேற்கொண்ட வழக்கமான சோதனைகளின்போது நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அம் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவமனை மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டபோது மேலும் இருவருக்குத் தொற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் அனைவருமே எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் இருந்தார்கள் எனவும் ஒருவர் விரைவிலேயே வீடு திரும்பக்கூடியதாகவிருந்தது எனவும், உடனடியாக நோய்க்கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதால் இதர நோயாளிகளுக்கு நோய்த் தொற்று ஏற்படவில்லை எனவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அவசரகாலச் சிகிச்சைகள், இதர மருத்துவ சேவைகளை சன்னிபுரூக் மருத்துவமனை தொடர்ந்தும் வழங்கிவந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, ரொறோண்டோவிலுள்ள மேலும் 6 மருத்துவமனைகளில் கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்காபரோ ஹெல்த் நெட்வேர்க் எனப்படும் ஸ்காபரோவிலுள்ள மருத்துவமனைகளின் அமைப்பு அதன் மருத்துவமனைகளில் ஒன்றான ஸ்காபரோ பொது மருத்துவமனையின் ஒரு பிரிவில் 6 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை உறுதி செய்துள்ளது.
யூனிவேர்சிட்டி ஹெல்த் நெட்வேர்க் என்னும் அமைப்பின் கீழியங்கும் பிரிவுகளில் 4 பேருக்குத் தொற்றுள்ளதை உறுதி செய்துள்ளது.
இதைவிடவும், ரொறோண்டோ நகர மத்தியில் அமைந்திருக்கும் செயிண்ட் மைக்கேல் மருத்துவமனை, செயிண்ட் ஜோசெப் மருத்துவமனை, ரொறோண்டோ வெஸ்ரேர்ண் மருத்துவமனை, போதை மற்றும் உளநல மருத்துவ மையம் (CAMH) ஆகியவற்றிலும் கோவிட் தொற்று உறுத்திப்படுத்தப்படுள்ளதாகத் தெரியவருகிறது.
இத் தொற்றுக்கள் மேற்கூறப்பட்ட மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகளுக்காகச் செல்லவிருக்கும் நோயாளிகளை அச்சுறுத்தக்கூடாது எனவும், தொற்றுக் காணப்பட்ட அனைத்து மருத்துவமனைகளும் பரிந்துரைக்கப்பட்ட கிருமியழிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனவென்றும் ரொறோண்டோ வைத்திய அதிகாரிகளும், நகரபிதா ஜோன் ரோறியும் தெரிவித்துள்ளார்கள்.