ரொறோண்டோ | மதுப்பிரியர்களுக்கு நற் செய்தி! – LCBO இனிமேல் வீட்டு வாசலுக்கே விநியோகம் செய்யும்
ரொறோண்டோ பகுதியில் வாழும் மதுப் பிரியர்களுக்கோர் நற்செய்தி. ஒன்ராறியோவின் ஏகபோக மதுவிற்பனை நிலையமான LCBO இனிமேல் குடி(காரர்)மனைகளுக்கு பைண்டுகளாகவோ அல்லது வைன் கிண்ணங்களிலோ நேரடியாக விநியோகிக்கத் திட்டமிடுகிறது. இதற்காக ‘ஸ்கிப் த டிஷெஸ்’ (Skip The Dishes) எனும் விநியோக நிறுவனத்துடன் கூட்டுச் சேர்கிறது.
நேற்று (வெள்ளி) ‘ஸ்கிப் த டிஷெஸ்’ வெளியிட்ட அறிக்கையில் தாம் செய்துவரும் உணவு விநியோகத்துடன் வைன், அல்கொஹோல் போன்ற பண்டங்களையும் இணைத்துக்கொள்ள ஒன்ராறியோ மதுபானக் கட்டுபாட்டு நிர்வாகத்தின் விற்பனை நிலையங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஓர்டர் செய்ய விரும்பும் மதுப்பிரியர்கள், இன்று முதல் ரொறோண்டோவிலுள்ள 15 LCBO நிலையங்களிலிருந்து ஸ்கிப் த டிஷெஸ் மூலம் விரும்பிய மதுபானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எதிர்வரும் பண்டிகை காலத்தில் கடை முடக்கம் காரணமாக மக்கள் தமது கொண்டாட்டங்களை வெளியிடங்களில் வைத்துக்கொள்ள முடியாது. வீடுகளில் முடங்கிக் கிடக்கும் அவர்களது கொண்டாட்டங்களை இலகுவான அனுபங்களாக்க இந்த இரு நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன.
இதே போன்றொரு திட்டத்தை ஒன்ராறியோவின் ‘பியர் கடை’ யும் (The Beer Store), ”ஸ்கிப் த டிஷெஸ்’ உடன் செய்திருந்ததெனவும் ஆனால், ஏற்கெனவே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களது நன்மையை முன்னிட்டு அது தனது திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது எனவும் அறியப்படுகிறது.
விரும்புபவர்கள் ‘ஸ்கிப் த டிஷெஸ்’ இணையத்தளத்துக்குச் சென்று, 300 வகையான வைன்கள், பியர், அல்கொஹோல் போன்றவற்றை ஓர்டர் செய்துகொள்ளலாம். அத்தோடு,பரிசுப் பெட்டிகள், பைகள், ஐஸ் போன்றவற்றையும் ஓர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். செவ்வாய் முதல் ஞாயிறு வரை, காலை 10:00 மணிக்கு ஆரம்பிக்கும் இவ் விநியோகம் மாலை மதுபான நிலையம் மூடுவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் வரை நடைபெறும் என ‘ஸ்கிப் த டிஷெஸ்’ அறிவித்திருக்கிறது.