ரொறோண்டோ பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சோண்டேர்ஸ் பதவி விலகல் வரவேற்கத்தக்கது

ரொறோண்டோ பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சோண்டேர்ஸ் பதவி விலகல் வரவேற்கத்தக்கது

Spread the love

கருத்து

ரொறோண்டோ ஜூன் 08, 2020: ரொறோண்டோ பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சோண்டெர்ஸ் ஜூலை 31முதல் தன் பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்திருக்கிறார்.

பதவி விலகுவதற்கான காரணம் எதையும் அவர் கூறவில்லை. கடந்த வருடம், அவரது பதவிக்காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் ஏப்ரல் 2021 வரை அவர் பதவியில் இருந்திருக்கலாம். ஆனாலும் அவர் ஜூலை 31 வரை மட்டுமே பதவியிலிருப்பேன் என ரொறோண்டோ மாநகரசபைக்கு அறிவித்திருக்கிறார். அவருக்கு ஆரோக்கிய ரீதியாக எப்பிரச்சினையும் இல்லை என அறியப்படுகிறது.

மார்க் சோண்டெர்ஸ் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்தவர். 2015 இல் இவர் ரொறோண்டோ பொலிஸ் சேவைகள் பிரிவின் தலைமையதிகாரியாக நியமிக்கப்பட்டார். வரலாற்றில் வெள்ளையரல்லாத ஒருவர் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.

ரொறோண்டோ பொலிஸ் சேவைகள்

ரொறோண்டோவில் 50 வீதத்துக்கு மேல் வெள்ளையரல்லாதோர் வாழ்கின்றனர். ஆனால் பொலிஸ் சேவையில் பணிபுரிவோரில் 75% மானோர் வெள்ளையர்கள். இவர்களில் பெரும்பாலோர் ரொறோண்டோவில் வசிப்பதில்லை. பலமான தொழிற்சங்கத்தினால் பிரதிநித்துவப்படுத்தப்படுவதானால் அவர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள், மற்றய தொழில்களைவிடக் கவர்ச்சியாக இருப்பதோடு அதிகாரத்தையும் கூடவே வழங்குகின்றது. இதனால் இத் தொழில் வெள்ளையர்களது முதல் தேர்வாக அமைவதில் வியப்பில்லை. அதே வேளை, இச் சேவையில் இனவாதம் மிகவும் அதிகமாக இருக்கிற காரணத்தால் வெள்ளையரல்லாதோர் இதில் இணைவதற்குப் பின்வாங்குகிறார்கள் என்ற ஒரு கருத்தும் உண்டு.

ரொறோண்டோ பொலிஸ் சேவைகள் மாநகரசபையின் கீழ் இயங்குகிறது. மாநகரசபையால் நியமிக்கப்படும் பொலிஸ் சேவைகள் சபை இதை நிர்வகிக்கிறது. பொலிஸ் சேவைகளின் (Police Chief) தலைவர் யாரென்பதையும் இந்த சபையே தீர்மானிக்கிறது.ரொறோண்டோ வாசிகளில் 50 வீதத்துக்கு மேலானோர் வெள்ளையர் அல்லாத புதிய குடிவரவினர். அவர்களது வாழ்வியல், கலாச்சாரப் பழக்க வழக்கங்களுக்குப் பரிச்சயமில்லாததால் பொலிஸ் அதிகாரிகளுக்கும் புதிய குடிவரவாளரான ரொறோண்டோ வாசிகளுக்குமிடையில் சுமுகமான உறவு இருப்பதில்லை. இதனால் இளைய தலைமுறைக் குடிவரவாளர்கள் தேவைக்குமதிகமான அளவில் கைதுசெய்யப்படுவது வழக்கமாகிவிட்டது. இதை உணர்ந்த பொலிஸ் சேவைகள் சிறுபான்மை இனங்களிலிருந்து பொலிஸ் அதிகாரிகளைச் சேர்க்கவேண்டுமெனத் தீர்மானித்தது.

இதன் பலனாக, 2015 இல் மார்க் சோண்டெர்ஸிற்கு தலைமையதிகாரிப் பதவி வழங்கப்பட்டது. பல சிறுபான்மை இனத்தவரும் அதிகாரிகளாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதில் பல தமிழர்களும் அடங்குவர். இதே போன்று, கடந்த வருடம் பீல் பிரதேசத்தில் நிஷான் துரையப்பா என்பவர் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

வெறும் அலங்காரப் பதவி

மார்க் சோண்டெர்ஸுக்கு வழங்கப்பட்ட இப் பதவி சிறுபான்மையினருக்குப் பொலிசார் மீது இருக்கும் அவநம்பிக்கையைத் தீர்ப்பதற்காகக் கொடுக்கப்பட்ட வெறும் அலங்காரப் பதவியே தவிர அது ஒரு அதிகாரப் பகிர்வெனக் கொள்ள முடியாது. அதைப் பகிர்ந்துகொள்ள அதிகார வர்க்கம் ஒருபோதும் தயாரில்லை. வெள்ளை அதிகார வர்க்கம் கீறிய கோட்டைத் தாண்டுவதற்கான வலு மார்க் சோண்டெர்ஸ் மட்டுமல்ல வேறெந்த சிறுபான்மை இனத்தவருக்கும் இருந்துவிடப் போவதில்லை. இதைத் தெரிந்துகொண்டுதான் அவரும் இப்பதவியை ஏற்றிருக்க வேண்டும்.

சிறுபான்மையினர் விடயங்களில் கனடிய பொலிசாரின் பாரபட்சமான அணுகுமுறைகள்

இனச் சிறுபான்மையினர் கனடாவிற்கு வருவதற்கு முன்னரே, கனடிய மத்திய, மாநில பொலிஸ் சேவைகள் கனடிய சுதேசிகள் விடயத்தில் பாரபட்சமான அணுகுமுறைகளைப் பின்பற்றி வருகிறார்கள். நீதித் துறையும் அதற்கு இணங்கிய வகையில் செயற்பட்டு வருகிறது. கனடாவின் சுதேசிகள் மொத்த சனத்தொகையின் 5% மட்டுமே. ஆனால் சிறைச்சாலைக் கைதிகளில் 30% மானோர் சுதேசிகள். வருடந்தோறும் 15 முதல் 25 வரையான சுதேசிகள் பொலிசாரால் கொல்லப்படுகிறார்கள். 2000- 2017 காலப்பகுதியில் ரொறோண்டோ பொலிசாரால் சுடப்பட்டவர்கள் ஏறத்தாழ 50 பேர்.றெஜிஸ் கோர்ஷின்ஸ்கி-பக்கே கொலை

றெஜிஸ் கோர்ஷின்ஸ்கி-பக்கே
றெஜிஸ் கோர்ஷின்ஸ்கி-பக்கே

மே 27, 2020 அன்று 29 வயதுடைய றெஜிஸ்-கோர்ஷின்ஸ்கி-பக்கே, அவரது ஹை பார்க் அப்பார்ட்மெண்டின் 24 வது மாடியிலிருந்து வீழ்ந்து மரணமானாள். ரொறோண்டோ பொலிஸ் அவளை மாடியிலிருந்து தள்ளி வீழ்த்தியது என அவளது தாயார் CP24 ஊடகத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். இச் சம்பவம், ஆச்சரியப்படும் விதத்தில், புதியதொன்றல்ல. அமெரிக்காவில் பொலிசாரினால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொலையின் உலக அலையில் இது எழுப்பிய சரசரப்பு அமுக்கப்பட்டுவிட்டது.

மார்க் சோண்டேர்ஸின் பதவி விலகல்

மார்க் சோண்டேர்ஸ் தான் பதவி விலகுவதற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறவில்லை. இருப்பினும் ஜோர்ஜ் ஃபுளோய்ட், றெஜிஸ் பக்கே கொலைகளின் தாக்கம் ஒரு காரணமாகவிருக்கலாம் என ஆரூடம் கூறப்படுகிறது.

அமெரிக்காவிலும்சரி, கனடாவிலும் சரி, ரொறோண்டோவிலும் சரி, கியூபெக்கிலும் சரி, பொலிசாரில் காணப்படும் பொதுமைகள்: அவர்கள் வெள்ளை அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகள்; சிறுபான்மையினரின் உயிர்கள் அவர்களுக்குப் பெறுமதியானவையல்ல; நீதி மன்றங்களால் அவர்கள் இலகுவாக மன்னிக்கப்படுகிறார்கள்; இவை தொடரப் போபவை.

றெஜிஸ் கோர்ஷின்ஸ்கி-பக்கே விடயம் தொடர்பாக மார்க் சோண்டேர்ஸிடம் ஊடகங்கள் கருத்துக் கேட்டபோது “வழக்கு விசாரணையில் இருப்பதால் என்னால் கருத்து எதுவும் கூறமுடியாது” எனக் கூறியுள்ளார். அது மட்டுமல்லாது இவ் விடயத்தில் ரொறோண்டோ பொலிசாரைப் பாதுகாக்க அவர் மேலும் ஒரு படி போய், மிகவும் கடுமையாக முயன்றுமிருக்கிறார். இவ்விடயத்தில் பொலிசாரின் நடவடிக்கைகளைக் குறைகூறுபவர்கள் பொய் சொல்வதாகக் குற்றம் சுமத்தியிருக்கிறார். அதை அவர் இதய சுத்தியுடன் சொன்னாரா அல்லது அதிகார வர்க்கத்தைப் பாதுகாப்பதற்காகச் சொன்னாரா என்பது தெரியாது.

அப் பதவியில் இருக்கிறார் என்பதற்காக அவர் தனது இனத்தவருக்குச் சார்பான நிலையை எடுக்கவேண்டுமென்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அதையே கவசமாக வைத்துப் பின்னணியில் உண்மைகள் புதைக்கப்படுவதை அவர் மறைக்கும் வகையிலும் நடக்கக்கூடாது.அமெரிக்க ஜோர்ஜ் ஃப்ளோய்ட் கொலை விடயத்தில் வெள்ளை இன பொறுப்பதிகாரிகளினால் பொலிசாருக்கு எதிராக எடுத்த முடிவினளவுக்குக் கூட சோண்டேர்ஸினால் , கருத்தளவிலும்கூட, ஒரு முடிவை எடுக்க முடியவில்லை. இது ஒரு விசுவாசத்தின் வெளிப்பாடா? தெரியவில்லை.

இந்த ஆர்ப்பாட்டங்களில் எனக்குப் பிடித்தது, அது இளைய தலைமுறையை எழுச்சி கொள்ளச் செய்திருப்பதே. இனத்துவேசம் போன்ற விடயங்களில் மற்றைய பொலிஸ் அமைப்புகள் தமது தடப்பதிவுகளை (track records) முன்னேற்ற வேண்டும். ரொறோண்டோ பொலிஸ் சேவைகள் இவ் விடயத்தில் அதிகம் வேலை செய்வதற்கில்லை. ரொறோண்டோ பொலிஸ் ஆற்றிவரும் சேவைகள் பற்றிப் பொதுமக்கள் அறியவரும்போது எங்கள் தரம் இன்னும் எவ்வளவோ உயரத்தில் இருக்கும்.

ஜோர்ஜ் ஃபுளோய்ட் ஆர்ப்பாட்டங்கள் பற்றி மார்க் சோண்டேர்ஸ்

‘கார்டின்க்’ (carding)

ரொறோண்டோவில் எழுந்தமானமாக ஒருவரைப் பொலிசார் பரிசோதிக்கும் நடைமுறையைப் (carding) பல சமூக ஸ்தாபனங்களும், மனித உரிமை அமைப்புக்களும் கடுமையாக விமர்சித்தபோதும் சோண்டேர்ஸ் அதை ஆதரித்தார். இந் நடைமுறை சிறுபான்மையினரைக் கடுமையாகப் பாதிக்கிறது, இதனால் கறுப்பின மக்களே அதிகமாகப் பொலிசாரினால் விசாரிக்கப்படுகிறார்கள் எனத் தெரிந்திருந்தும் மார்க் சோண்டேர்ஸ் அதை ஆதரித்தார். “அது சட்ட பூர்வமானது, சமூகத்தின் பாதுகாப்பை அதிகரிக்கிறது” எனக் கூறியதன் மூலம் அதிகாரத்தின் குரலையே அவர் பிரதிபலித்திருந்தார்.

புரூஸ் மக்காதர்

2017 இல் ரொறோண்டோ தொடர்கொலைச் சம்பவங்களின்போது, ஒரு குறிக்கப்பட்ட பகுதியில் பல ஓரினச் சேர்க்கையாளர் காணாமல் போயிருந்தும், அப் பகுதியில் தொடர் கொலையாளியின் நடமாட்டத்திற்கான ஆதாரம் எதுவுமில்லை என அடம் பிடித்தவர். இதனால் மேலும் பல கொலைகள் இடம்பெற்றன. ஒரு மாதத்தின் பின் தொடர் கொலையாளியான புரூஸ் மக்காதர் கைதுசெய்யப்பட்டார்.Clearview AI

இந்த வருட ஆரம்பத்தில், ரொறோண்டோ பொலிஸ் சேவைகள், பொதுமக்களை அவர்களது சம்மதமின்றிப் அடையாளப்படுத்தும் சட்டவிரோத மென்பொருளான Clearview AI ஐத் தாம் அக்டோபர் 2019 முதல் பாவித்து வருகின்றோம் என்பதை ஒத்துக்கொண்டிருந்தது.

ஒருவரின் முகத்தை நோக்கிக் குவிக்கப்படும் காமிராவின் மூலம் எடுக்கப்படும் படத்தை வைத்துக்கொண்டு அவரது பிரத்தியேக தகவல்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம். விடயம் தெரியவந்ததும் சோண்டர்ஸ் அதன் பாவனையை நிறுத்த உத்தரவிட்டார்.

எனவே, மார்க் சாண்டர்ஸின் பதவி ஒரு அரசியல் யன்னல் அலங்காரம் மட்டும்தான். அதன் பின்னால் அரங்கேறிய அட்டூழியங்களின் மீதான கவனத்தை இந்த அலங்காரம் அபகரித்து வந்தது என்பதே உண்மை. Sadly, Saunders won’t be missed.

-சிவதாசன்
Print Friendly, PDF & Email