Art & LiteratureCanadian Tamil Congress

ரொறோண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை: ஆரம்ப துறைத் தலைவராக பேராசிரியர் சித்தார்த்தன் மெளனகுரு நியமனம்!

ரொறோண்டோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தமிழ்த் துறையின் ஆரம்பத் தலைவராக பேராசிரியர் சித்தார்த்தன் மெளனகுரு அவர்கள் நியமனம் பெற்றுள்ளார். அவர் தனது பதவியை மே 2024 முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க இருக்கிறார்.

இந் நியமனம் பற்றி அவர் கூறுகையில் ” இப் பதவிக்கு என்னை நியமித்தமை குறித்து நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இப் பல்கலைக்கழகத்திலுள்ள புலமையாளர்கள் தமிழ்க் கற்கைக்கென உறுதியான அத்திவாரமொன்றைப் போட்டுத் தந்துள்ளனர். இத் துறையின் தலைவராக இருந்து நான் இவ்வத்திவாரத்தின் மீது தரமான தமிழ்த்துறையொன்றை நிர்மாணிப்பதோடு துறையிடை ( interdecipline) அணுகுமுறை மூலம் தமிழாராய்ச்சி, புலமைத்துவம் போன்றவற்றை மேலும் விரிவாக்கும் பொருட்டுப் பணியாற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழாராய்ச்சி, புலமைத்துவம் ஆகியவற்றுக்கான உலக மையமாக ரொறோண்டோ பலகலைக்கழக ஸ்காபரோ வளாகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உலகத் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தமிழ் மொழி, தமிழ் வரலாறு ஆகியவற்றில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது மட்டுமல்லாது அதன் வளமான கலாச்சாரத்தைப் பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைகளிடம் கையளித்துச் செல்வதுவும் இத்துறை நிர்மாணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

பேராசிரியர் மெளனகுரு அவர்கள் தற்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தென்னாசியக் கற்கைகள் பிரிவில் சமூகவியல் மற்றும் மானுடவியல் திணைக்களத்தின் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். உலகம் வாழ் தமிழ்ச் சமூகங்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மானுடவியல், வரலாறு, தத்துவம் போன்ற பல்வேறு துறை ஆராய்ச்சிகள் பற்றிய நிபுணத்துவததைக் கொண்டிருக்கும் பேரா. மெளனகுரு எதிர்காலத்திற்காக மணமுடித்தல்: போரின் நிழலில் நாடுகடந்த இலங்கைத் தமிழர் திருமணங்கள் (Marrying for a Future: Transnational Sri Lankan Tamil Marriages in the Shadow of War) என்னும் நூலொன்றை 2019 இல் வெளியிட்டிருந்தார். உலகெங்கும் சிதறடிக்கப்பட்ட தமிழ்ச் சமூகங்களின் கூறுகளிடையே திருமணங்கள் எப்படி உறவப் பாலங்களை ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றி இந்நூல் ஆராய்கிறது. கூட்டு அணுகுமுறை மூலம் தமிழ்ப் புலமைத்துவம், கற்பித்தல், ஆராய்ச்சி என்பவற்றை வளர்த்தெடுக்க முடியுமென அவர் நம்புகிறார்.

“உள்ளெடுப்பு, பன்முகத்தன்மை போன்ற நெறிமுறைகளைப் பிரயோகித்து உலகம் வாழ் தமிழ்ச்சமூகங்களிலிருக்கும் புலமைகளைக் கனடாவிற்குக் கொண்டுவருவதன் மூலம் தமிழ்ப் புலமைகளையும் ஆராய்ச்சிகளையும் நிலைநிறுத்தி, ஊக்குவித்து வெற்றிபெறச் செய்யவேண்டுமென்பதே எனது குறி” எனக்கூறும் பேரா. மெளனகுரு, ஒத்துழைத்தல், பரிசோதித்தல், விவாதங்களை உருவாக்குதல் போன்றவை மூலம் தமிழ் கற்கைகளைப் பல்வேறு திசைகள் நோக்கி விஸ்தரிக்கும் ஒரு மையமாக ரொறோண்டோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகம் உருவெடுக்கும் எனக் கூறுகிறார்.

உலகில் அறியப்பட்டதெனக் கருதும் ஏழு செவ்வியல் மொழிகளில் 2000 வருடங்கள் பழமை வாய்ந்த, மொழியியல் மற்றும் இலக்கிய வரலாற்றைக் கொண்ட மொழிகளில் தமிழும் ஒன்று. 80 மில்லியன்களுக்கு மேலானவர்கள் தமிழைப் பேசுபவர்கள். உலகில் அடிக்கடி பேசப்படும் மொழிகளில் தமிழும் ஒன்றாகும்.

கனடிய தமிழர் பேரவை மற்றும் தமிழ் இருக்கை நிறுவனம் ஆகியவற்றின் முயற்சியால் 2018 இல் ஆரம்பிக்கப்பட்ட நிதிசேர் நடவடிக்கையின் காரணமாக பல புரவலர்களின் உதவியுடன் சுமார் $3 மில்லியன் டாலர்கள் சேர்க்கப்பட்டு தமிழ் இருக்கை ஆரம்பிக்கப்பட்டது. “தமிழ்க் கற்கைகளுக்கான ஆரம்ப துறைத்தலைவராக பேராசிரியர் மெளனகுரு அவர்கள் தெரிவானதையிட்டு நாம் சிலிர்ப்படைகிறோம்” என தமிழ் இருக்கை நிர்மாணத்திற்கான குழுவின் தலைவரும் கனடிய தமிழர் பேரவையின் முன்னாள் தலைவரும் ஆலோசகருமான திரு சிவன் இளங்கோ தெரிவித்துள்ளார்.

“தமிழ் கற்கைகளுக்காக ஒரு இருக்கையை நிறுவுவதென நாம் சிந்தித்தபோது கனடாவின் பெருமதிப்புள்ளதும் தமிழ்ச் சமூகம் பெருமளவில் கல்வி கற்கும் பல்கலைக்கழகமுமான ரொறோண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபரோ வளாகமே எமது மனதில் முதலில் குறுக்கிட்டது. இனிவரும் காலங்களில் அங்கு உலகத் தரம் வாய்ந்த தமிழ் ஆராய்ச்சிகளும் புலமைத்துவமும் முகிழ்க்கப்போகின்றன என்பது உற்சாகம் தரும் விடயமாகும்” என சிவன் இளங்கோ மேலும் தெரிவித்தார்.

“தென்னாசியாவுக்கு வெளியே மிகப்பெரும் தமிழ் சமூகத்தினரைக் கொண்டிருக்கும் நாடு கனடாவாகும். இவர்களில் பெருமளவினர் ரொறோண்டோ பெரும்பாகத்தில் வசிக்கின்றனர். ஸ்காபரோ மற்றும் ரொறோண்டோ பெரும்பாகத்தில் வசிக்கும் சாதாரண தமிழ் மக்களில் சுமார் 3,800 பேரின் பங்களிப்பினால் மட்டும் இப்பெருநிதி திரட்டப்பட்டது. இதில் கனடா, அமெரிக்கா மட்டுமல்லாது பிரான்ஸ், அவுஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான பணம் திரட்டப்பட்டிருக்கிறது. தமிழ்க் கற்கைகளுக்கு உலகம் முழுவதும் எத்தகைய ஆதரவு இருக்கிறது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. இவவறிவிப்பு எங்கள் வளாகத்திற்கு கிடைத்த மிக முக்கியமான சந்தர்ப்பமாகும். இவ்வறிவிப்பை நாமும் எமது தமிழ் மாணவ சமூகமும் பெருமகிழ்வுடன் கொண்டாடுகிறோம் ” என ஸ்காபரோ வளாகத்தின் அபிவிருத்தி மற்றும் பழைய மாணவர் உறவுகளுக்கான நிறைவேற்றுப் பணிப்பாளரான லிசா லெமன் கூறுகிறார்.

இவ்வறிவிப்பை ஆங்கிலத்தில் பார்க்க https://utsc.utoronto.ca/news-events/our-community/inaugural-chair-tamil-studies-looks-establish-u-t-scarborough-global-hub-tamil என்ற தொடுப்பை அழுத்தவும்.