ரொறோண்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு 1 கோடி இந்திய ரூபாய்கள் நிதி உதவி!


கனடாவில் தமிழர்கள் செறிந்து வாழும் மாகாணமாகிய ஒன்ராறியோவில் அமைந்திருக்கும் உலகப் புகழ்பெற்ற ரொறோண்டோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளைத் தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் கொண்ட குழுவொன்று மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இதே போன்றதொரு இருக்கை ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. அதை அமைப்பதில் முன்னின்றுழைத்த பலர் ரொறோண்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையை அமைப்பதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

ரொறோண்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையை நிறுவதற்கான ஆரம்ப நிதித் தேவை சுமார் 3 மில்லியன் கனடிய டாலர்கள் எனவும் அதில் கணிசமான தொகை ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட அல்லது உறுதி வழங்கப்பட்ட நிலையில் இருக்கிறது. தற்போது தமிழ்நாடு அரசு ஒரு கோடி இந்திய ரூபாய்களை அன்பளிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. தமிழ் இருக்கையை அமைப்பதற்காகக் கனடாவில் முன்னின்றுழைக்கும் கனடியத் தமிழர் பேரவைக்கு, பெப்ரவரி 22, 2021 அன்று தமிழக அரசு தனது அன்பளிப்பு பற்றிய உறுதிக்கடிதத்தை அனுப்பியுள்ளது.

தமிழக அரசின் இப் பேருதவிக்காக, முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி, தமிழ்மொழி, கலாச்சாரம், தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு கே.பாண்டியராஜன் மற்றும் தமிழ்நாடு அரசில் அங்கம் வகிப்போர் உட்பட அனைவருக்கும் கனடியத் தமிழர் பேரவை நன்றி தெரிவித்துக் கடிதம் அனுப்பியுள்ளது.

கனடியத் தமிழர் பேரவையின் கடிதத்தைப் பார்வையிட கீழுள்ள தொடுப்பை அழுத்தவும்.