US & Canada

ரொறோண்டோ நகர முதல்வர் ஜோன் ரோறி திடீர் பதவி விலகல்!

31 வயது பணியாளருடனான காதலுறவு காரணம்

ரொறோண்டோ மாநகரசபை முதல்வர் ஜோன் ரோறி தனது பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக நேற்று (பெப் 10) இரவு 8:30 மணி போல் அவசரமாகக் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அறிவித்திருக்கிறார். 31 வயதுடைய பணியாளர் ஒருவருக்கும் அவருக்குமிடையே காதலுறவு இருந்ததென்பதை நகரின் பிரபல பத்திரிகையான ரொறோண்டோ ஸ்டார் பத்திரிகை வெளிக்கொண்ர்ந்ததையடுத்து அவர் தனது பதவி விலகலை அறிவித்திருக்கிறார்.

“ரொறோண்டோ நகர மக்களுக்கும் எனது குடும்பத்தினருக்கும் இதயபூர்வமான மனவருத்தத்தைத் தெரிவிப்பதுடன் எல்லோரிடமிருந்து பகிரங்கமாக மன்னிப்பையும் கோருகிறேன்” என அவர் இச் சந்திப்பின்போது தெரிவித்தார்.

மே 28, 1954 இல் பிறந்த ஜோன் ஹொவார்ட் ரோறி ரொறோண்டோ நகரின் 65 ஆவது முதல்வர்; 2014 முதல் 2023 வரை அவரது பதவிக்காலம் இருந்திருக்கிறது. இதற்கு முதல் ஒன்ராறியோ மாநில கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் (2004-2009), மாநிலத்தின் உத்தியோகபூர்வ எதிர்கட்ட்சித் தலைவராகவும் (2005-2007) இருந்திருக்கிறார். ரொறோண்டோ ஒஸ்கூட் சட்டக்கல்லூரியில் படித்து 1978 இல் பட்டம் பெற்ரிருந்தவர். 1978 இலேயே அவரது மனைவி பார்பரா ஹக்கெட்டை மணம் முடித்தவர். இவருக்கு மூன்று ஆண்கள் ஒரு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இரண்டு தவணைகள் மட்டுமே சேவை செய்வேன் எனக்கூறி ந்கரமுதல்வர் பதவியை ஏற்றிருந்தாலும் பின்னர் மூன்றாவது தடவையும் போட்டி போட்டுத் தெரிவாகினார்.

கனடிய தமிழ்ச் சமூகத்தோடு நெருங்கிய உறவைப் பேணிவந்த ஜோன் ரோறி, அவர்களுக்கென முதன் முதலாக ஒதுக்கப்பட்ட ஒலி, ஒளிபரப்பு நிலையத்தைப் பெற்றுத் தருவதில் பெரும்பங்கு ஆற்றியவர்.

ரொறோண்டோ நகரத்தின் முன்னாள் துணை முதல்வராக இருந்த மைக்கேல் தொம்சனும் பாலியல் குற்றச்சாட்டுக் காரணமாக சென்ற வருடம் பதவியிலிருந்து விலகியிருந்தார்.

ஜோன் ரோறியின் சேவைக்காலத்தில் நகரமக்கள் பொதுவாகத் திருப்தியுடைவர்களாக இருப்பதாகவே அவதானிக்கப்படுகிறது. பொதுப் போக்குவரத்து, வீடற்றோர் விடயங்களில் அவர் சில திட்டங்களை முன்வைத்து உழைத்துவந்தார். இவற்றில் இன்னும் பூரண வெற்றிகளை அவர் பெறவில்லையாயினும் மக்கள் அவருக்கு காலாவகாசத்தை வழங்கிவந்தனர். நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றி முடிக்கும்போது ” நகரத்துக்கு சில நல்ல விடயங்களைச் செய்திருக்கிறேன் என்று நான் நம்புகிறேன்” எனக்கூறியிருந்தார். ஊடகவியலாளரின் கேள்விகள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.

ரொறோண்டோ ஸ்டார் பத்திரிகையின் வழக்கறிஞரது தகவல் கிடைத்து 25 நிமிடங்களுக்குள் பதவி விலகல் முடிவு எடுக்கப்பட்டு ஊடகவியலாளர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஜோன் ரோறியின் பதவி வெற்றிடத்தைத் தற்போதைய துணை முதல்வர் ஜெனிஃபெர் மக்கெல்வி தற்காலிகமாக நிரப்புவார் எனவும் விரைவில் இப்பதவிக்கான தேர்தல்கள் நடைபெறுமெனவும் கூறப்படுகிறது.