Real Estate

ரொறோண்டோ தொடர்மாடிக் குடியிருப்பு விற்பனையில் பாரிய வீழ்ச்சி!


கோவிட்-19 இன் தாக்கம் உலகெங்கும் வீட்டுச் சந்தைகளில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. 2009 இல் அறியப்பட்ட்ட உலகளாவிய பொருளாதார மந்தநிலையைப் போன்று இன்றைய நிலைமை இருக்கின்றது என ரொறோண்டோ வீட்டுச் சந்தை பற்றிய ஆய்வுகளைச் செய்துவரும் Urbanation Inc. என்ற நிறுவனம் தெரிவிக்கிறது.

ரொறோண்டோ பெரும்பாகத்தில் புதிய தொடர்மாடிக் குடியிருப்புகளின் (condominiums) விற்பனை, 2020 இன் இரண்டாம் காலாண்டில் மிக மோசமாகச் சரிவடைந்திருக்கிறது என இவ்வாய்வு தெரிவிக்கிறது.


ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், ரொறோண்டோ பெரும்பாகத்தில் மொத்தம் 1,385 குடியிருப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த வருடம் இதே காலாண்டு விற்பனைகளோடு ஒப்பிடுகையில் 85% குறைவானதாகும்.

விற்பனையில் வீழ்ச்சி காணப்பட்டாலும், புதிய குடியிருப்புக்களின் விலைகள், சராசரியாக, அதிகரித்துள்ளன. 2020, முதல் காலாண்டில் ஒரு சதுர அடி $864 இற்கு விற்பனையானது. தற்போது அதன் விலை ஒரு சதுர அடி $867 இற்கு விற்பனையாகிறது.

2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது விற்பனை, 2020 இன் ஆரம்பத்தில் சந்தையில் விற்பனைக்கு வந்த குடியிருப்புகள் குறைவாகவிருந்தபடியால், விலைகள் 2% அதிகரித்திருந்தன.

2020 இன் இரண்டாம் காலாண்டில் 6 புதிய தொடர்மாடிக் கட்டிடங்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு 1,176 குடியிருப்புகள் விற்பனைக்கு விடப்பட்டன. 2019 இல், இதே காலப்பகுதியில் 40 புதிய கட்டிடங்களும், 11,415 குடியிருப்புகளும் சந்தைக்கு வந்திருந்தன. அடுத்த 6 மாதங்களில் ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்ட 14,000 குடியிருப்புக்கள் கையளிக்கப்படவுள்ளன.