அறிவித்தல்கள்

ரொறோண்டோ தமிழர் தெருவிழா – 2024

கனடிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நிகழும் உலகின் மிகப்பிரம்மாண்ட தமிழர் தெருத்திருவிழாவான தமிழர் தெருவிழா இந்த ஆண்டு ஒரு தசாப்தகால கொண்டாட்டமாக மார்க்கம் வீதியை ஆகஸ்ட் மாதம் 24ஆம் 25ஆம் திகதிகளில் அலங்கரிக்க உள்ளது. 2015 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த கொண்டாட்டம் காலப்போக்கில் தமிழர்களின் தனி அடையாளமாகவே மாறிப்போனது. கடந்த ஆண்டு வரலாறு காணாத மக்கள் கூட்டத்தால் நிறைந்த தமிழர் தெருவிழாவில் அண்ணளவாக 275,000 பேர் ஆர்வமாக கலந்துகொண்டனர். இந்த ஆண்டு தமிழர் தெருவிழா 300,000ற்கும் அதிகமான மக்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மொழி சார்ந்த பெருமையும் தனித்துவமும் உலகின் மிக நீண்ட கால கலை பண்பாட்டு நாகரீக வரலாறும் கொண்ட எம்மவர்களின் கலை கலாச்சாரம் உணவுப்பழக்கங்களை ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த நாட்டில் உள்ள அனைவரும் அறியும் வண்ணம் ஊர் கூடி கொண்டாடும் இந்த தமிழர் தெருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் புதுமையான சிறப்பான பல அம்சங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் பத்தாவது ஆண்டாக நிகழவிருக்கும் இவ்வாண்டு கொண்டாட்டத்தில் நம்மவர் பெருமை கூறும் பல அம்சங்கள் இடம்பெற உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானது தாயகத்தில் உள்ள எமது உறவுகளின் சிறுதொழில் உற்பத்திகளை ஊக்குவிக்கவும் சந்தைப்படுத்த உதவவும் என ஒரு காட்சியறை உருவாக்கப்படவுள்ளது.


இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பிராந்தியங்கள் சிறுதொழில் உற்பத்திகளில் சிறந்த உற்பத்தியாளர்களைக்கொண்ட வளமிக்க பிராந்தியங்கள் என்றாலும் யுத்தத்தின் பின்னர் அவர்களின் உற்பத்தி திறனிலும் சந்தைப்படுத்தலிலும் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றன. இந்த உற்பத்திப்பொருட்களை சர்வதேச சந்தையில் எடுத்துச்செல்லும் முகமாக இலங்கையில் வடக்கு தொழில்துறை சம்மேளனத்துடன் இணைந்து இந்த உள்ளூர் உற்பத்திகள் காட்சியறையை தமிழர் திருவிழாவில் உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது வடக்கு தொழில்துறை சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர். ஆரோக்கியமான கூட்டுமுயற்சியில் ஈடுபட விரும்புபவர்கள் தமிழர் தெருவிழாவில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

தமிழர்களாக நாங்கள் பெருமைப்பட்டுக்கொள்ள பல வரலாற்று நிகழ்வுகள் உண்டு. அவற்றில் பலவற்றை நம் இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கடப்பாட்டையும் தமிழர் தெருவிழா தன் நிகழ்ச்சி நிரல்களில் ஆண்டாண்டாக தொடர்ந்து வருகின்றது.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் கப்பல் கட்டுமானத்தில் சிறந்த இடமாக திகழ்ந்தது. நம் முன்னோர்கள் திறமையான கப்பலோட்டிகள் என்பதோடு அவர்கள் தாமாகவே பாய்மரப் படகுகளை உருவாக்கினர். இந்த கட்டுமான அழகு மேற்கத்தேய கடலோடிகளையும் ஈர்த்தது. இந்த வரலாற்றுக்கு சான்றாக இருக்கும் ஒரு பெயர் தான் அன்னபூரணி அம்மாள் கப்பல். 1937 ஆம் ஆண்டு, ஐந்து வீரத் தமிழ் கடலோடிகள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவுக்கு தாம் உருவாக்கிய பாய்மரக்கப்பலில் பயணம் செய்தனர். எந்த நவீன உபகரணங்களும் இல்லாமல், அவர்கள் ஒரு எளிய பாய்மரக் கப்பலில் உலகின் மிக ஆபத்தான அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்தனர். 10 ஆவது ஆண்டு தமிழர் தெருவிழாவில் இந்த அன்னபூரணி அம்மாள் கப்பலின் நெடிய வரலாற்றுப்பயணமும் அதன் 27 வருட கால செயற்பாடுகளும் காட்சியப்படுத்தப்பட உள்ளது. இதில் மிக முக்கியமாக அன்னபூரணி அம்மாள் பாய்மாரைக்கப்பல் மாதிரி ஒன்றும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. வரலாறுகளை மறக்கும் எந்த இனமும் தன்னை தகவமைத்துக்கொள்ள முடியாது. நாம் அனைத்து துறைகளிலும் அனைத்து வகையிலும் சிறந்தவர்களாகவே இருந்து இருக்கின்றோம் என்பதை மீண்டும் ஒருமுறை தமிழர் தெருவிழா பறைசாற்றவுள்ளது.

இவற்றை விடவும் இந்த ஆண்டு பின்னணிப்பாடகர் ஸ்ரீனிவாஸ் உற்பட சரிகமபா புகழ் மாதுலானி, ஜீவன், தாயக பாடகர் கந்தப்பு ஜெயந்தன் இவர்களோடு கனடிய பாடகர்கள், கலைஞர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய கலை, இசைக்கொண்டாட்டங்களும் அரங்கேறவுள்ளன. நம் கலை மிக விரிந்தது. பறை, சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கும்மி, பொய்க்கால் குதிரை, பரதநாட்டியம், நாட்டுக்கூத்து என ஆரம்பித்து நவீன கலை நடன அம்சங்களும் தமிழர் தெருவிழாவில் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவை மட்டுமல்லாது கனடாவில் உள்ள தமிழர்களின் வியாபார சாவடிகள், உணவுச்சாலைகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட சாவடிகளையும் இவ்வாண்டு தெருவிழாவில் எதிர்பார்க்க முடியும். குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் மறக்க முடியாத அனுபவத்தை பெறுவதற்கான விளையாட்டு திடலும் தமிழ்ரதெருவிழாவில் ஒரு அம்சமாக அமையவுள்ளது.

உலகின் ஆதிக்குடிகளான தமிழர்கள் காதலும், வீரமும், கொண்டாட்டமும் கொண்ட நீண்ட நெடிய வரலாற்றை கொண்டவர்கள். உலகிற்கு பலவகைகளில் கலையையும் பண்பாட்டையும் கொடுத்தவர்கள். தமிழர் தெருவிழா தமிழர்களின் பெருமையாக இவ்வாண்டும் சிறந்த கோடைகால கொண்டாட்டமாக இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. நம் மொழி நடந்து வந்த பாதையில் ஒருமுறை நடந்து பார்க்க அனைவரையும் தமிழர் திருவிழா அழைக்கின்றது.