Columnsமாயமான்

‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்


மாயமான்

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.

இச் சம்பவம் நடைபெறக் காரணமான பா.உறுப்பினர்கள் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் பங்குபற்றிய கூட்டத்தை ஒழுங்குசெய்தவர்களும் சுமந்திரனுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்களும் இதனால் ஏற்பட்ட தலை குனிவிற்குப் பொறுப்பானவர்கள்.

அமைப்பாளர்களால் பொதுக்கூட்டம் என அறிவிக்கப்பட்ட இந்நிகழ்வில் சுமார் 200 பேர் பங்குபற்றியிருந்தார்கள். படப்பிடிப்பாளர்கள், வீடியோ பதிவாளர்கள், ஆதரவாளர், எதிர்ப்பாளர் எனப் பலர் தரப்பினரும் பங்குபற்றி, அமைதியாக ஆரம்பித்து பொலிசாரால் அமர்க்களமாக முடித்துவைக்கப்பட்ட இவ்வைபவம் வருட முடிவிற்கு முத்தாய்ப்பு வைக்கும் ஒன்று என்பதோடு தமிழர் வரலாற்றில் முக்கியமான பதிவும்கூட.

இவ்வார்ப்பாட்டம் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிரான போராட்டமே தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதல்ல என்பது வெட்ட வெளிச்சம். அதற்கு இரண்டு உறுதியான சான்றுகள் – ஒன்று சாணக்கியன் பேசும்போது எறும்பு இருமினாலும் கேட்டிருக்க முடியும், அந்தளவுக்கு அமைதி. கைதட்டி வரவேற்பும் கூட. ஒரு வகையில் அதுவும் intentional, by design, ஆகவிருக்கலாம்.

இத்தனைக்கும், சாணக்கியன் பேச்சின் ஆரம்பத்திலேயே, மண்டபத்துக்குள் தாம் வந்தபோது உரத்த குரல்களோடு வெளியே நின்று ‘வரவேற்ற’ ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சாணக்கியமாகச் சிராவியிருந்தார். ஆனால் கூட்டம் அதைப் புரிந்துகொள்ளவில்லையோ அல்லது இலக்கு அவரில்லை என்பதற்காகப் பேசாமலிருந்ததோ தெரியவில்லை. அவரது பேச்சு சாமர்த்தியமாகவும், பொருள் பொதிந்ததாகவும், சுருக்கமாகவும், ஞானம் பெற்ற, முதிர்ந்த அரசியல்வாதியினதுமானதுமாக இருந்தது. வயது குறைவானவரானாலும் நன்றாக அடிபட்டவராக இருக்கும்போலவிருக்கிறது. 2009இல், தனது 19 ஆவது வயதில் அவுஸ்திரேலியாவில் தெருவில் இறங்கிப் போராடியவருக்கும், தற்போது பாராளுமன்றத்தில் ‘நாய்’ என அழைக்கும் சிங்களவருக்குத் திருப்பி அவரது மொழியிலேயே ஆத்திரமாகப் பதிலளிக்கத் தெரிந்தவருக்கும் விழுப்புண்கள் அதிகமாக இருந்திருக்கச் சாத்தியமுண்டு. வெளியே அவரை வரவேற்றவர்களை எள்ளி நகையாடிய அவரது பாங்கு, தமிழ் அரசியல் வானில் a star is born என்ற உணர்வை ஏற்படுத்தியது.சுமந்திரன் பேச ஆரம்பித்தபோது சபையில் ரைபிள்கள் load பண்ணும் சத்தம் கேடகத் தொடங்கியது. ‘சக்கை’ அடைப்பவர்கள் பிசியாகியிருந்தனர். இப்படியான களம்பல கண்ட சுமந்திரனுக்கு அது தெரிந்திருக்க வேண்டும், அவரது பார்வைக்கும் பேச்சுக்கும் ஒத்திசைவு இல்லாதது அதைக் காட்டிக் கொடுத்தது. இருந்தாலும் அவரது பேச்சுப் பாணியில் எந்தவித மாற்றமும் இருக்கவில்லை.

தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் நாகநாதன், அமிர்தலிங்கத்துக்குப் பிறகு வந்த ‘வளையா(தள)பதி’ சுமந்திரன். ஆனால் முன்னைய இரண்டு பேரையும்விட சுமந்திரன் தனக்கே எதிரி என்ற அந்தஸ்தையும் வைத்திருப்பவர். சபையைத் திருப்திப்படுத்துவதற்காகப் பேசுபவரல்ல. ஒரு வகை arrogance அவரது பிறவிக்குணம். அவரது so what குணாதிசயம் அவருக்கு தமிழரிடையே எதிரிகளைத் தோற்றுவித்திருக்கும் அளவுக்கு சிங்களவரிடையே நண்பர்களையும் உருவாக்கியிருக்கிறது என்பதுமுண்மை. இது வித்துவத்தால் வந்த செருக்காகவும் இருக்கலாம், மரபணுவால் வந்ததாகவும் இருக்கலாம். This is me, take it or leave it தான் அவரது குணாம்சம். அதனால் அவருக்குச் சென்ற இடமெல்லாம் (தமிழர் மத்தியில்) சிராய்ப்பு இருந்துகொண்டுதான் இருக்கும்.

சுமந்திரன் பேச ஆரம்பித்துச் சுமார் பத்து நிமிடங்களில் முதலாவது சக்கை வெடி வெடித்தது. சுமந்திரனின் பார்வை ‘இது பனங்காட்டு நரி’ என்பதுபோல் இருந்தது. வாய் பேசுவதை நிறுத்தவில்லை. “கேள்வி ஏதும் இருக்கா என்று தலைவர் கேட்கும்போது படு நிசப்தமாக இருக்கும் ஒரு தமிழர் சபையில், ஒருவர் நெளிந்துகொண்டு எழும்பிக் கேட்கும் அந்த முதலாவது கேள்வி எப்படி சில விநாடிகளில் முழுச்சபையும் எழுந்து நின்று ஏக காலத்தில் கேள்வி கேட்க வைக்கிறதோ’ அதே moment தான் இங்கும். சகல திசைகளிலுமிருந்து ரைபிள்களும், பீரங்கிகளும் வெடித்தன. போதாததற்கு முன்வரிசையில் நின்ற காமிராக் காரர்கள் சிலரும், தங்கள் cap களைத் திருப்பிக்கொண்டு ‘நானும் ரவுடி’ நிலைக்குத் தங்களைப் promote பண்ணிக் கொண்டார்கள். இத் தருணத்தில் இது ஒரு well coordinated ambush என்ற உணர்வைத் தந்தது.

நிலைமை stage 2,3 என்று metastatic நிலையை எட்டியதும் சம்பவ இடத்துக்குத் தாமதமாக வந்து ‘ஸ்கிரீச்’ சத்ததுடன் நிற்கும் தமிழ்நாட்டுப் பொலிஸ் போலல்லாது ரொறோண்டோ பொலிஸ் அமைதியாக வந்து அகிம்சைவழிப் போராட்டத்தை மேற்கொண்டார்கள். அந்த வகையில் சிங்களப் பொலிசார் வித்தியாசமானவர்கள் – முதல் நாளே வந்து ‘காம்ப்’ அடித்து விடுவார்கள். பிறகென்ன ‘பாதுகாப்பு’ கருதி கூட்டம் பரபரப்போடு முடித்து வைக்கப்பட்டது. ரொறோண்டொவில், ஜனவரி 6 அமெரிக்க ‘capital hill moment’ இரத்தமின்றிச் சத்தத்தோடு மட்டும் முடித்து வைக்கப்பட்டது. சுமந்திரன் படையைக் களத்தைவிட்டு அப்புறப்படுத்திய வெற்றிக் களிப்போடு போராட்டக்காரர்கள் மேடையில் ‘வேலை செய்யாத’ மைக்கிரோஃபோனை வைத்து முழங்கித் தள்ளினார்கள். அத் தருணம் அவர்களுக்கானது; கொண்டாடினார்கள்.

கேள்வி இப்போது, நடந்து முடிந்தது ஆனையிறவுச் சமரா அல்லது நெப்போலியனின் வெலிங்க்டன் சமரா என்பது. அது யார் உங்களுக்குக் கதை சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. நடந்து முடிந்த ரொறோண்டோ சமரின் காணொளிகள் பல சமூக வலைத் தளங்களிலும், தென்னிலங்கை சிங்கள, ஆங்கில ஊடகங்களிலும் சிறிதும் பெரிதுமாக ரவுண்டுகள் வருகிறது. யாரும் தத்தமது ஊகங்களையும், அபிப்பிராயங்களையும் ஏற்படுத்திக்கொள்ளலாம்.

போராட்டக் காரர்கள் யாரென்பது அநேகமாக உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவுஸ்திரேலியா, இலண்டன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டங்களின் template இங்கும் பாவிக்கப்பட்டிருக்கிறது. எந்த நாட்டு அமைப்பு காசு கூடச் சேர்க்கிறது என்ற போட்டியைப் போல்தான் இதுவும். எந்த நாட்டில் ‘சுமந்திரனெதிர்ப்பு’ சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது என்ற போட்டியில், நான் நினைக்கிறேன் ரொறோண்டோ வென்றிருக்கிறது. ரொறோண்டோ சமரின் பின்னர் அதன் அமைப்பாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியிருந்தார்கள் என்றொரு உறுதிப்படுத்தப்படாத செய்தியொன்றும் வந்திருந்தது.வெற்றி யாருக்கு?

ஆர்ப்பாட்டக் குழு

சுமந்திரன் குழுவின் அமெரிக்க வருகை பற்றிச் செய்திகள் வரத் தொடங்கியதும் சமூக வலைத்தளங்களில் சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் ஆரம்பித்துவிட்டது. கண்டங்களைத் தாண்டி கட்டளைகள் பறந்தன. ‘இக்குழு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வருகிறது’ என முகமூடி மனிதர்கள் பலர் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருந்தனர். இலங்கை உள்ளிட்ட உலகம் முழுவதிலும் சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் முடுக்கிவிடப்பட்டிருந்தது. கட்டளைத் தலைமையகம் 24/7 இயங்கியது. கனடாவிலும் ஒரு சில வானொலிகள், வழமையான நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு ஆர்ப்பாட்ட ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருந்தன. இவ்வகையான ஆர்ப்பாட்டங்களில் வழக்கமாகப் பங்குபற்றும் general membership இடைநிலைத் தலைவர்கள் வாசலில் கடமையில் ஈடுபட்டிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது. அந்த வகையில் ஆர்ப்பாட்ட அமைப்பாளர்களுக்கு operation success!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அமெரிக்கா சென்று வரும் போதெல்லாம் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புகள் ரொறோண்டோவில் இறங்கி விளக்கமளித்துச் செல்வது (briefing) வழக்கம். சுமந்திரனது வரவு இப்படிப் பலதடவைகள் நிகழ்ந்திருக்கிறது. சுமந்திரன் உட்படப் பல அரசியல்வாதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – கனடாக் கிளை அழைத்து இரண்டு கூட்டங்களை வைக்கும். ஒன்று தமது உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும். நெருக்கமானவர்கள் அழைக்கப்படுவார்கள். மற்றது பொதுக்கூட்டம். அதற்கு யாரும் சமூகமளிக்கலாம். இப்படியான பொதுக்கூட்டமொன்றில் தான் சனிக்கிழமை ‘ரொறோண்டோச் சமர்’ அரங்கேறியிருந்தது.

ஆனால், கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு சுமந்திரனது எதிர்ப்பாளர்களின் அங்கத்துவம் பல மடங்கு அதிகரித்திருந்தது உண்மை. அதற்கு எதிர்க்கட்சிக்காரரைவிட உட்கட்சிப் போராளிகளே காரணம். சுமந்திரனது சில நடவடிக்கைகளும் அவ்வப்போது இத் தீயை அணையாமல் வைத்திருப்பது வழக்கம். இருப்பினும் தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்குப் பிறகு இலங்கை கண்ட பாரிய தமிழர் அறப்போரான, ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ ஊர்வலத்தின் வெற்றி மாவையைப் புறந்தள்ளிவிட்டுச் சுமந்திரனை ஒ ரு தலைவர் ஸ்தானத்தை நோக்கித் தள்ளியிருப்பது உண்மை. அது அவருக்கும் தெரிந்ததனால் கொஞ்சம் கர்வம் அதிகரித்ததும் உண்மை. முதலாம் நாளே பிசுபிசுத்துப்போகவிருந்த P2P போராட்டத்தை, ஒரு சிலிண்டரில் சேடமிழுத்துக்கொண்டிருந்த போராட்டத்தை, மறுநாள் நாலு சிலிண்டரிலும் ஓடவைத்து வெற்றியீட்டித் தந்த இளம் தளபதி சாணக்கியனை அருகில் வைத்துக்கொள்வதால் சுமந்திரனது வெற்றி பல மடங்குகளால் அதிகரித்தது. அதேயளவுக்கு அவருக்கு கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியேயும் எதிரிகளும் அதிகரித்தனர்.

இந்த வேளை, வெளிநாட்டு ராஜதந்திரிகள் சுமந்திரனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஏனைய தமிழ் அரசியல்வாதிகளுக்குக் கொடுப்பதில்லை என்பதும் ஒரு பொறாமை கலந்த எதிர்ப்பை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்தது. இதனால் தான் இந்தத் தடவை சுமந்திரன் குழுவின் வருகை இலங்கை சார்பாக அமைந்தது எனப் பரிதாபமான வலைப்பதிவுகளை எதிர்ப்பாளர்கள் பரப்பியிருந்தனர். எனவே சுமந்திரன் வருகை பலத்த எதிர்ப்பைச் சந்திக்கப்போகிறது அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருந்தது. சுமந்திரன் இப்படியான எதிர்ப்புகளைக் கண்டு களிப்பவர் என்ற வைகையில் அவர் இக்கூட்டத்திற்கு மறுப்பைத் தெரிவிக்காமல் வந்தது எதிர்பார்க்கக்கூடியது. ஆனால் உள்ளூர் கூட்ட ஒழுங்கமைப்பாளர்கள் நிலைமையின் உக்கிரத்தைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர் என்பதே எனது கணிப்பு. அந்த வகையில் கூட்ட அமைப்பாளர்களுக்கு இது ஒரு தோல்வி.சுமந்திரன் தரப்பு

விருந்தினர்களான சுமந்திரன், சாணக்கியன் ஆகியோருக்கு ரொறோண்டோ சமரில் வெற்றி தோல்வி இல்லை. ஆனால் இலங்கையில் அவர்கள் மேற்கொண்டுவரும் தமிழர்களது இனப்பிரச்சினைத் தீர்வுக்கான போராட்டத்தில் அவர்களுக்கு படு வெற்றியென்பது இலங்கையின் ஊடகங்களும் சிங்கள அரசியல்வாதிகளும் இச் சமர் பற்றித் தெரிவித்துவரும் கருத்துக்களால் தெரிகிறது. அங்கு திரும்பிச் சென்றதும் “பார்த்தீர்களா, புலம் பெயர்ந்த தமிழர்கள் எவ்வளவு பலமானவர்கள். இன்னும் அவர்கள் தனிநாட்டுக் கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை. எங்களைப்போல moderates இனது கோரிக்கைகளுக்கு நீங்கள் செவிமடுக்க வேண்டும்” என்று good cop – bad cop அணுகுமுறையைக் கடைப்பிடிக்க இது வழிவகுத்திருக்கிறது. அந்த வகையில் அரசியல் தீர்வுக்கான தமிழர் போராட்டத் தரப்புக்கு இது ஒரு வெற்றி.

அப்பாவித் தமிழர் சமூகம்

இப்போராட்டத்தை அமைதியாக பதாகைகளுடன் வெளியே நின்று, அது ஆயிரக்கணக்கானோராகவும் இருந்திருக்கலாம், நாகரிகமாகத் தெரிவிக்காமல் ‘Capital hill style’ இல் ambush செய்த காரணத்தால் ‘விடுதலைப் புலிகள்’ மீண்டும் தலையெடுக்க முயற்சிக்கிறார்கள் எனவே நாம் வடக்கு கிழக்கில் இருந்து இப்போதைக்கு இராணுவத்தை அகற்ற முடியாது. பொதுமக்கள் நிலங்களிலிருந்து இப்போதைக்கு நாங்கள் விலகப் போவதில்லை” என ஐ.நா. போன்ற உலக நிறுவனங்களின் மேடைகளில் சிங்களத் தரப்பு ஓங்கி ஒலிக்க இதுபோன்ற சம்பவங்கள் வழிவகுக்குமென்ற வகையில், ஒட்டுமொத்த தமிழர் போராட்டத்துக்கும் விழுந்த ஒரு பெரிய அடி என்ற வகையில் தமிழர் மீண்டுமொரு தடவை தோற்றுப் போயிருக்கிறார்கள்.

ரொறோண்டோ சமரில் பார்த்த ஒரு நெருடலான விடயம். கூட்டம் பரபரப்பாக முடித்துவைக்கப்படும்போது கூட்ட அமைப்பாளரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடாக்கிளைத் தலைவரான திரு நக்கீரன் ஐயாவுடன் தர்க்கம் பண்ணிய ஒன்று “இந்தக் கிழடுகள் என்றாரம்பித்த்து எதையோ சொன்னது. விழ மறுக்கும் ஒரு காகோலையைப் பார்த்து விழத்தயாராக இருக்கும் இன்னுமொரு காகோலை சிரித்ததை முதல் தடவை நான் பார்த்தேன். நக்கீரன் ஐயாவிடம் ஆயிரம் குறைகள் இருக்கலாம் ஆனால் அவர்மீது குறைசொல்பவர்கள் அனைத்துப் பேரும் ஒட்டுமொத்தமாகப் போராட்டத்துக்கு செய்த பங்களிப்பைவிடத் தட்டத் தனியனாக அதிக பங்களிப்பைச் செய்தவர் அவர். மொத்தமாக …?

‘தேவர் மகன்’ படத்தில் நாசரின் தலையை வெட்டி எறிந்துவிட்டு கமல்ஹாசன் தன் தேவர் குல மக்களை நோக்கி ஒரு வசனம் சொல்வார்…அதையே தான் நானும் இங்கே சொல்வேன்…

நிகழ்ச்சி முழுவதையும் பார்த்து ரசிக்க / ஆத்திரப்பட / சிந்திக்க…

காணொளி – பாகம் 1 (Video Courtesy: TheTamil Journal)
காணொளி – பாகம் 1 (Video Courtesy: TheTamil Journal)

https://www.facebook.com/KrishnaLiveTelecast/videos/936092323686260/