ரொறோண்டோ காவற்துறையின் நிறத்துவேச செயற்பாடுகளுக்காக மன்னிப்புக் கேட்டார் தலைமை அதிகாரி

கனடாவின் அதி கூடிய எண்ணிக்கையைக் கொண்ட, ரொறோண்டோ மாநகர காவற்துறையின், தலைமை அதிகாரியான ஜேம்ஸ் றேமெர், நேற்று (15) ரொறோண்டோ மாநகரத்தில் வாழும் கறுப்பு, சுதேசிய மக்கள் மற்றும் வெள்ளையரல்லாத இனக்குழுமங்களிடம், இதுவரை காலமும் தமது திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்ட நிறத்துவேச செயற்பாடுகளுக்காகப் பகிரங்க மன்னிப்பைக் கோரியிருக்கிறார்.

ரொறோண்டோ காவற்துறைச் சேவை (Toronto Police Service (TPS)) என அழைக்கப்படும் இத் திணைக்களத்தில் பணிபுரியும் காவற்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் 2020 முதல் இனரீதியாகத் தரம்பிரிக்கப்பட்டுப் பகுப்பாய்வு செய்யப்பட்டபோது கறுப்பின மக்கள், ஒப்பீட்டளவில் வெள்ளையரை விட 1.6 மடங்கு அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவது தெரியவந்ததையடுத்து இத் தலைமையதிகாரி தனது திணைக்களத்தின் சார்பில் இம் மன்னிப்பைக் கோரியுள்ளார்.

ரொறோண்டோ காவற்துறையினரால் சந்தேகத்தின் பேரில் தேடுதலுக்கு உள்ளாக்கப்படும், கைது செய்யப்படும், கொல்லப்படும், நிர்வாணமாக்கிப் பரிசோதிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பெரும்பாலும் கறுப்பின மக்களே உள்ளாக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு மிக நீண்ட காலமாக கறுப்பின மக்களின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு அடுத்த படியாக சுதேசிய மக்கள் இப்படியான செயற்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவது அறியப்பட்ட ஒன்று. இருப்பினும் இவற்றை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான இனரீதியான புள்ளிவிபரங்களைச் சேகரிக்க, மனித உரிமைகள் காரணத்தைக்காட்டி, அரசுகள் அனுமதி வழங்கியிருக்கவில்லை. பாதிக்கப்பட்டோரின் அழுத்தங்கள் காரணமாக 2020 இல் இப் புள்ளிவிபரச் சேகரிப்புக்கு ரொறோண்டோ மாநகர அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இப் புள்ளிவிபரங்களின் பிரகாரம் 2020 இல் மட்டும், வெல்ளையர்களுடன் ஒப்பிடும்போது, கறுப்பின மக்கள் 1.6 மடங்கு அதிகம் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ரொறோண்டோ சனத்தொகையில் கறுப்பின மக்களின் விகிதாசாரம் 10% ஆகவிருந்தும் காவற்துறை நடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட்ட கறுப்பின மக்கள் 22% என இப் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதே வேளை, சேகரிக்கப்பட்ட புள்ளிவிபரப்படி, லத்தீனோ மக்கள் 1.5 மடங்கும் மத்திய கிழக்கு பிரதேச மக்கள் 1.2 மடங்கும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது அறியப்பட்டுள்ளது.

ரொறோண்டோ காவற்துறையினரால் சிறுபான்மையின மக்களைப் ‘பிடிப்பதற்கு’ சட்டரீதியாகப் பாவிக்கப்படும் நடைமுறை ‘கார்டிங்’ (carding) எனப்படுகிறது. அதாவது ஒரு குழு கறுப்பின இளைஞர்கள் வாகனமொன்றில் பயணம் செய்யும்போது அவர்களைக் காரணமேதுமின்றி நிறுத்தி விசாரித்து, கைதுசெய்வதற்கான அதிகாரத்தை இக் கார்டிங்க் காவற்துறைக்கு வழங்குகிறது. மிகநீண்ட காலமாக நடைமுறையிலிருந்துவரும் இந்நடைமுறை சிறுபான்மை இன மக்களுக்குத் தீங்கு விளைவிக்கிறது என்பதால் அதைத் தடைசெய்யக்கோரிப் பல அமைப்புகளும், தலைவர்களும் கேட்டு வந்தாலும் காவற்துறைத் திணைக்களமும், மாநகர அரசுகளும் இதற்கு இணங்கவில்லை. தற்போதைய தலைமையதிகாரிக்கு முன்னர் பதவியிலிருந்த தலைமையதிகாரி ஒரு கறுப்பராகவிருந்தும் அவர்கூட இந்நடைமுறையை ஒழிப்பதை எதிர்த்து வந்தார். இக் கார்டிங் செயற்பாட்டின்மூலம் பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை இளைஞர்கள் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதே போல சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படும் சிறுபான்மையினப் பெண்கள் பலரும், முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டுப் பரிசோதனை செய்யப்படுகிறார்கள். 2020 இல், ரொறோண்டோவில் மட்டும் இப்படியான நிர்வாணப் பரிசோதனைகள் 700 க்குமேல் கறுப்பினப் பெண்கள்மேல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இந் நிலையில் ரொறோண்டோ காவற்துறையின் தலைமை அதிகாரி சிறுபான்மை மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இருப்பினும் சிறுபான்மை இனங்களின் தலைவர்களும் அமைப்புகளும், இது போதாது, காவற்துறையின் எண்ணிக்கையையும், அதற்கு வழங்கப்படும் செலவையும் வெகுவாகக் குறைக்கவேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இப்படியான இனத்துவேச அடிப்படையில் காவற்துறையினர் செயற்படுவது கனடா மட்டுமல்ல அமெரிக்காவிலும் பல உலக நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒன்று.