ரெஸ்லா: திருட்டு அம்பலம்?
மாயமான்
ரெஸ்லாவுக்கு இப்போது காலம் சரியில்லை என்பது தெரிகிறது. அதி வேக வளர்ச்சி, அதி வேக வீழ்ச்சி என்பது இயற்கை விதி. ரெஸ்லாவும் இப்போது பழைய வாகனமாகிவிட்டதால் அதுவும் இச்சாக்கடைக்குள் வீழ்ந்துவிட்டது. பரிதாபப்பட எதுவுமில்லை.
2020 இல் ரெஸ்லாவின் தானியங்கி ராக்சிகள் தெருக்களை நிரப்பும் என அதன் அதிபர் மஸ்க் விட்ட வாணம் இடை நடுவில் வெடித்துச் சிதறிவிட்டது. பரபரப்பாக மாலை போட்டு வரவேற்கப்பட்ட சைபர் ட்றக் குப்பைத் தொட்டிக்குச் சமமாக மதிக்கப்படுகிறது. முதலாவது செவ்வாய்க்கிரகவாசியாக ட்றம்பை அனுப்பினால் மஸ்க் மீண்டெழ வாய்ப்புண்டு.
சமீபத்தில் ரெஸ்லாவைப் பற்றி ஒரு செய்தி வந்தது. ஏனைய செய்திகளை விட இது உண்மையிலேயே பரபரப்பான செய்தி தான். ட்றம்பின் வெற்றி விழாவின்போது மஸ்க் உணர்ச்சி வசப்பட்டு கையை உயர்த்தி நாஜி சல்யூட் அடித்ததைத் தொடர்ந்து அவரைப் பற்றியும் அவரது நிறுவனங்கள், பண்டங்கள் பற்றியும் கெட்ட செய்திகளே அதிகம் முன்னணி ஊடகங்களில் வருகின்றன. இதன் பின்னால் யார் இருக்கலாம் என்பதை இங்கு துப்புத் துலக்கத் தேவையில்லை. இப்பின்னணியில் சமீபத்தில் வந்த இந்த ‘பரபரப்பான’ செய்தியின் உண்மைத் தன்மையையும் விசாரித்து அறியவேண்டியுள்ளது.
பழைய வாகன விற்பனையாளர்கள் / நிறுவனங்கள் தாம் விற்கும் வாகனங்களின் ‘ஓட்டமானியை’ (Odometer) பின்னால் முறுக்கி அவற்றின் மைல் / கி.மீ. எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பித்து வாங்குபவர்களை ஏமாற்றி விற்றுவிடும் பழக்கம் உலகப் பிரசித்தமானது. இந்த கெட்ட பழக்கம் ரெஸ்லா நிறுவனத்திற்கும் தொற்றிக்கொண்டது தான் கவலைக்குரிய விடயம்.
‘ரெஸ்லா ஓடோமீட்டர்கேட்’ என அழைக்கப்படும் இக்குழப்படி தொடர்பாக சமீபத்தில் கலிபோர்ணியாவில் ஒரு வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இதன்படி, ரெஸ்லா நிறுவனம் தனது கணனி மூலமாக உள்நுழைந்து வாகனத்தின் திரையில் காட்டப்படும் ‘ஓடோமீட்டரின்’ இலக்கங்களைத் திருட்டுத்தனமாக அதிகரிக்கிறது எனவும் இதனால் குறிக்கப்பட்ட வாகனத்தின் warannty நிராகரிக்கப்படுகிறது எனவும் ரெஸ்லா நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பலர் ஒன்றிணைந்து குழுவாக இவ்வழக்கைப் பதிவு செய்துள்ளனர். உதாரணமாக புதிய வாகனங்களை வாங்கும்போது 100,000 கி.மீ. ஓடுவதற்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட உதிரிப்பாகம் பழுதடைந்தோ அல்லது உடைந்தோ போனால் அதை அந்த வாகனத்தின் தயாரிப்பாளர் அல்லது விற்பனையாளர் இலவசமாகத் திருத்தித் தரவேண்டுமென்பது இந்த warranty சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது. மேற்குறிப்பிட்ட வழக்கில் ரெஸ்லா வாகனம் குறிப்பிட்ட ஓட்டமானி இலக்கத்தை அடையும் முன்னரே அவ்விலக்கங்கள் கணனி வழியாக முறுக்கப்பட்டு அதிகரிக்கப்படுகின்றது எனவும் இதன் மூலம் warranty நிராகரிக்கப்படுவதால் தயாரிப்பு / விற்பனை நிறுவனங்கள் பெருந்தொகையான பணத்தை சேமிக்க முடிகிறது எனவும் இவ்வழக்கில் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான தொழில் நுட்பப் பிரயோகங்களில் கணனியின் பாவனை அதிகரித்து வருகிறது. ரெஸ்லா போன்ற நிறுவனங்கள் தமது வாகனங்களின் உதிரிகளின் பாவனை மற்றும் தேய்வனவு போன்றவற்றை சாரதியின் பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து அவதானிப்பதன் மூலம் அறிந்து கொள்வதுடன் அவற்றைச் சேகரித்து வைத்து ஒரு உதிரிப்பாகத்தின் உடைவுக்கு அல்லது தேய்வனவுக்கு வாகனமல்ல அதன் சாரதியே காரணம் எனத் தீர்மானித்து அதற்கேற்ப ஓட்டமானியின் இலக்கத்தைக் கணனி மூலம் எதிர்வுகூறி உண்மையான இலக்கத்தைவிட கணனி கூறும் இலக்கமே சரி எனத் தீர்மானித்து நிறுவனம் warranty யை நிராகரித்து விடுகிறது என்பதே குற்றச்சாட்டு. அது மட்டுமல்லாது வாகன உரிமையாளர் தனது வாகனத்தை விற்க முடிவு செய்தால் இந்த ஓட்டமானியின் இலக்கத்தைக் கொண்டே விலையும் தீர்மானிக்கப்படுவதால் உரிமையாளர் நட்டப்படுவதற்கு காரணமாகிறது.
இவ்வழக்கைத் தொடுத்த நைறீ ஹிண்டன் Electrek இணையத்தளத்திற்கு கூறியதன்படி, டிசம்பர் 2022 இல் அவர் 2020 இல் தயாரிக்கப்பட்ட ரெஸ்லா மொடல் Y வாகனத்தின் ஓட்டமானி 36,772 மைல்களைக் காட்டியது. அப்போது அவ்வாகனத்தின் basic limited warranty 50,000 மைல்கள் என உத்தரவாதம் தரப்பட்டது. அவ்வாகனத்தை அவர் பாவிக்கத் தொடங்கியபோது அதன் ஓட்டமானி அவர் ஓடுவதை விட மிக வேகமாக அதிகரிப்பதை அவர் அவதானித்தார். அவர் நாளொன்றுக்கு 20 மைல்கள் ஓடியபோதும் வாகனத்தின் ஓட்டமானி நாளொன்றுக்கு 72 மைல்கள் ஓடியதாகப் பதிவு செய்தது. இதனால் அவர் எதிர்பார்த்ததை விட மிக விரைவாக அவரது warranty தீர்ந்துபோக நேரிட்டது. இதனைத் தொடர்ந்து வந்த வாகனத் திருத்ததிற்கு அவர் $10,000 செலவு செய்ய வேண்டி ஏற்பட்டது. Warranty விரைவாகத் தீர்ந்து போகாமல் இருந்திருப்பின் அவர் இச்செலவைத் தவிர்த்திருக்க வாய்ப்புண்டு. ஹிண்டன் ஒரு Data Analyst ஆகப் பணியாற்றும் ஒருவர் என்பதால் அவரது கூற்று நம்பகத்தன்மையுடையது என இவ்விணையத்தளம் கூறுகிறது. அது மட்டுமல்லாது ஹிண்டன் தனது அனுபவத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டபோது வேறு பல ரெஸ்லா உரிமையாளர்களும் இதே விதமான தமது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒரு குழு அமைக்கப்பட்டு ரெஸ்லா நிறுவனத்தின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
ரெஸ்லா மட்டுமல்ல முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களும் பாவனையாளர்களது சமூக, செயற்பாட்டு, வாழ்வியல் பழக்க வழக்கங்களைச் சேகரிப்பது வழக்கம். பாவனையாளர்களின் ஒப்புதலை இந்நிறுவனங்கள் முற்கூட்டியே பெற்று விடுவதால் இச்செயற்பாடுகளுக்கு எதிராக நாம் வழக்குத் தொடர முடியாது. முகநூல் போன்ற நிறுவனங்களிடமிருந்து ஒருவர் பெறும் இலவச பயனுக்கு இது விலையாக அமைகிறது என்பது அவற்றின் வாதம். ஆனால் ரெஸ்லா போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது பண்டங்களை மென்மேலும் மெருகூட்டுவதற்கென சாரதிகளின் பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ள தொழில்நுட்பத்தைப் பாவிக்கின்றன. குழிகளுள்ள தெருவில் ஓட்டுவதற்கும் கார்ப்பட் தெருவில் ஓட்டுவதற்கும் இருக்கக்கூடிய வித்தியாசத்தை இத்தொழில் நுட்பம் தரவாகச் சேமித்து வைக்குமானால் அதன் பிரகாரம் உதிரிகளின் பாவனை எல்லையை அதனால் கணித்துக்கொள்ள முடியும்.
ரெஸ்லா மட்டுமல்ல வீட்டில் இருக்கும் ரெலிவிசன் போன்ற சாதனங்கள் மூலமும் மனிதரது பழக்க வழக்கங்களை அறிந்து சேகரிக்கும் வழமை பல வருடங்களுக்கு முன்னரே வந்துவிட்டது. நீங்களாக Off செய்யாவிட்டால் ஸ்மார்ட் ரெலிவிசன் திரையில் மறைந்திருக்கும் கமெரா உங்களை அவதானித்து தகவல்களைச் சேகரிக்கப் பழக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒரு சோளப்பொரிப் பிரியரானால் அடுத்த கணமே திரையில் சோளப்பொரியின் விளம்பரம் பளிச்சிடுமளவுக்குச் சென்றுவிட்டது தொழில் நுட்பம்.
ரெஸ்லா மீதான வழக்கு நீதிமன்றத்தால் எடுக்கப்பட்டால் மேலும் தகவல்கள் தெரியவரும் என்கிறது ‘எலெக்ட்றெக்’. அதுவரை ரெஸ்லா உரிமையாளர்கள் உங்கள் ஓட்டமானிகளை அவதானித்து வாருங்கள். குழிகள் அதிகமுள்ள தெருக்களும் வெட்டி ஓடும் இளைய சாரதிகளும் ஓட்டமானிகளை அதிவிரைவாக முடுக்கி விடலாம். (Image Credit:Photo by Milan Csizmadia on Unsplash)
