News & AnalysisTechnology & ScienceWorld

ரெஸ்லா – ஒரு கொலை இயந்திரமா?

தானியக்க ஓட்டிமுறையினால் தொடரும் விபத்துக்கள்

சிவதாசன்

தானியக்க வாகன ராச்சியத்தில் மாகாராஜனாக உலாவரும் ரெஸ்லாவின் மஹா பிம்பம் விரைவில் உடைக்கப்படுப்படுமா? ரெஸ்லா நிறுவனத்துக்கும் அதன் முதன்மை நிர்வாகி இலான் மஸ்க்கிற்கும் போதாத காலம் என்பது போலவே நடைபெறும் சம்பவங்கள் தெரிவிக்கின்றன.

2019 இல் விபத்துக்குள்ளாகிய ரெஸ்லா வாகனத்தின் தரவுப் பெட்டி சேகரித்து வைத்திருந்த, 6 செக்கண்டுகள் காணொளியின்படி விபத்துக்கு முன்னான கடைசி விநாடிகள் வரை வாகனத்தின் தானியக்க கணனியோ (auto pilot) அல்லது அதன் ஓட்டியோ வாகனத்தின் வேகத்தைத் தணிக்க முயற்சி எதையும் எடுக்கவில்லை என விசாரணையாளர் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 2019 இல் கலிபோர்ணியா வேகச்சாலையொன்றில் நடைபெற்ற விபத்தொன்றின்போது ரெஸ்லா மாடல் 3 வாகனமொன்று முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனமொன்றில் மோதியதால் அவ்வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த இருவரில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். இச் சம்பவத்தின்போது ரெஸ்லா வாகனம் தானியக்க கட்டுப்பாட்டில் இருந்தது எனவும் அப்போது அதன் வேகம் மணிக்கு 60 மைல்கள் (ஏறத்தள 100 கி.மீ.) எனவும் கூறப்பட்டது.

முன்னால் சென்ற வாகனத்தில் (ஃபோர்ட் பிக்கப் ட்றக்), ஒரு உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டுவிட்டு தந்தை மல்டோனாடோவும் அவரது 15 வயதுடைய மகன் ஜோவானியும் பயணம் செய்துகொண்டிருந்தனர். சிறுவன் ஜோவானி மார்புப் பட்டி அணியாததால் மோதலின் உந்துதலால் தூக்கி வீசப்பட்டதில் மரணமடையவேண்டி ஏற்பட்டது. ஒரே வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த, ரெஸ்லா மாடல் 3 ஐ விடக் கனதியான றக் வண்டியிலிருந்து ஒருவர் தூக்கி வீசப்படுவதற்கு எவ்வளவு உந்துவிசை தேவைப்பட்டிருக்கும்?

இவ் விபத்து ரெஸ்லா தொழிற்சாலையில் இருந்து 4 மைல்கள் தூரத்தில் நடைபெற்றிருந்தது. தானியக்க ஓட்ட முறையில் இயங்கிய ரெஸ்லா வாகனங்களின் பல விபத்துக்களில் இதுவும் ஒன்று.

இவ்வகையான தானியக்க விபத்துக்கள் ரெஸ்லா நிறுவன வாகனங்களுக்கு மட்டும் நிகழ்கிறது என்பதல்ல. ரெஸ்லா நிறுவனம்(இலான் மஸ்க்) சவால் விடும் வீரப் பிரதாபங்கள் அன் நிறுவனத்தின் மீதான அதிக அக்கறையைப் பாவனையாளர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் அவரது சவால்களுக்குச் சவாலாக இவ்விபத்துக்கள் பார்க்கப்படுகின்றன என்பதுமே கவனிக்கப்பட வேண்டியவை.

இப்படியான சந்தர்ப்பங்களில், பல தடவைகள், இன் நிறுவனம் புறக் காரணிகளைக் காரணம் காட்டித் தொழில்நுட்பத்தில் எவ்வித குறைகளும் இல்லை என்பதுபோலக் கதைகளை முடித்து விடுவர். அநேகமான முன்னணி நிறுவனங்கள், பணத்தை அள்ளி இறைத்து, தமது பாவனையாளர்கள், எதிர்கால வாடிக்கையாளர்கள் மனங்களில் அச்சம் எழாது பார்த்துக்கொள்வது வழக்கம்; இது ஒரு வகையான சந்தைப்படுத்தும் உளவியல் (marketing psychology). ஆனால் இந்த தடவை ரெஸ்லா வாகனத்தின் தொழில்நுட்பமே அதn குறைகளைக் காட்டிக் கொடுத்துவிட்டது. அல்லது குறைகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஏறத்தாள நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதுதான் வித்தியாசம். இதனால் இதர வாகனத் தயாரிப்பாளர்களும் தானியக்க கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பம் பற்றி மீள் பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன.

  ரெஸ்லா விபத்தில் மரணமான மல்டொனாடோ குடும்பம். (Image credit: Jim Wilson / The New York Times)

அமெரிக்க தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகம் தற்போது இருபதுக்கும் மேற்பட்ட தானியக்கம் தொடர்பான விபத்துக்களை விசாரித்துக்கொண்டிருக்கிறது. 2016 முதல், குறைந்தது மூன்று ரெஸ்லா வாகன சாரதிகள் விபத்துக்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இம் மூன்று விபத்துக்களின்போதும் தானியக்க ஓட்டி முறை பிரயோகிக்கப்பட்டிருந்தது மட்டுமல்ல மூன்று தடவைகளிலும் முன்னால் இருந்த / சென்ற பொருட்களை இவ் வாகனங்கள் உரிய கால அவகாசத்துள் அடையாளம் காணத் தவறியிருந்தன. இரண்டு சந்தர்ப்பங்களில் முன்னால் குறுக்கே சென்றுகொண்டிருந்த பாரவண்டிகளை அடையாளம் காணவில்லை. மற்ற சந்தர்ப்பத்தில் முன்னாலிருந்த காங்கிரீட் தடுப்பபை வாகனம் அடையாளம் காணத் தவறியிருந்தது.

கடந்த மாதம் மத்திய போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி 2016 இலிருந்து தானியக்க ஓட்டி சம்பந்தப்பட்ட விபத்துக்களில் இதுவரை 10 பேர் வரை கொல்லப்பட்டுளனர் எனத் தெரிகிறது. இவற்றையெல்லாம் வைத்துக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் விரைவில் ரெஸ்லா நிறுவனம் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான சாத்தியங்களும் உண்டு.

இப்படியான பல சம்பவங்கள் ரெஸ்லா மீதான சந்தேகப் பார்வையின் அதிகரிப்பிற்குக் காரணமாக இருக்கின்றன. மாதம் 30,000 மாடல் 3 வாகனங்கள் விற்பனையாகும் சீனாவில் சமீபத்தில் அதன் பாவனையாளர்களின் ஆர்ப்பாட்டத்தை நிறுவனம் எதிர்கொள்ள வேண்டி வந்தது. Cruise Control எனப்படும் வேகக் கட்டுப்பாட்டு முறை பிரயோகிக்கப்படும்போது வாகனம் திடீரென அதி வேகத்தில் பாய முற்படுவதே இவ்வார்ப்பாட்டக்காரர்கள் முன வைத்த பிரச்சினை. இதுவே தான் கலிபோர்ணிய விபத்துக்கும் காரணமாக இருந்திருக்கலாம். எனவே ரெஸ்லா வாகனத்தில் தானியக்கக் கட்டுப்பாட்டு விடயத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதும் அது உயிராபத்தை விளைவிக்கக் கூடியது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

முற்று முழுதானா, பாதுகாப்பான தானியக்க ஓட்டி முறையை அறிமுகப்படுத்த இன்னும் பல வருடங்கள் தேவைப்படுமென இதர தானியக்க வாகனத் தயாரிப்பாளர்கள் கூறிவரும் நிலையில் ரெஸ்லாவின் அதிபர் மட்டும், முற்று முழுதான தானியக்க ஓட்டி முறை விரைவில் ரெஸ்லா வாகனங்களில் கிடைக்குமென அறிவித்து வருவது, மக்களின் உயிர்களில் அக்கறை கொள்ளாது அவர் தனது வியாபார அபிவிருத்தியிலும் தன பண்டங்களைச் சந்தைப்படுத்துவதிலுமே குறியாக உள்ளார் என்பதையே காட்டுகிறது.

தானியக்க ஓட்டி முறை (Auto Pilot)

தானியக்க ஓட்டி முறை என்பது வாகனத்தைத் தன்பாட்டுக்கு இயங்க விடுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பமல்ல. அது விபத்துக்களைத் தவிர்க்கவும், குறைக்கவும் சாரதிக்கு உதவியாக இருக்கவென வாகனத்தில் இணைக்கப்பட்ட காமிராக்கள், முகர்வுக் கருவிகள் (sensors) ஆகியவற்றின் மேலதிக தொகுதி என வரைவு கொள்ளலாம்.

பெரும்பாலான தருணங்களில் மனித ஓட்டிகள் எடுக்கும் தீர்மானங்கள் தவறானவையாகவும், தாமதமானவையாகவும், அவசரப்பட்டவையானவையாகவும் இருப்பதுண்டு. மது, மாது, மருந்து, இதர கவனயீர்ப்புகள், அயர்வு போன்ர பல, அவர்களது செயல்திறமையில் குறைபாடுகளை உண்டுபண்ணுவதற்கான சாத்தியங்கள் அதிகமுண்டு. அமெரிக்காவில் வருடமொன்றுக்கு 40,000 மரணங்கள் வாகன விபத்தினால் ஏற்படுகின்றன. இயந்திரங்கள், கணனிகள் இப்படியான உணர்வுநிலை அவஸ்தைக்களுக்குள் செல்வதில்லை. வாகனம் ஓட்டப்படும்போது கண்னிகள் முகநூல் பார்ப்பதில்லை. தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துவதில்லை. தெருவோரப் பதாகைகளில் இருக்கும் கவர்ச்சியான விளம்பரங்களில் நாட்டம் கொள்வதில்லை. எனவே அவை எடுக்கும் தீர்மானம் பொதுவாகப் பிழைப்பதில்லை.

ஆனால் இத் தீர்மானங்களை எடுக்க அக்கணனிக்குப் பல புறத்தகவல்கள் தேவைப்படுகின்றன. இவற்றை வழங்குவது முகர்வுக் கருவிகள் (sensors) கமாராக்கள் போன்றவை. அவை தரும் தகவல்களை நம்பியே கணனி தந் தீர்மானத்தை எடுக்கிறது. இக் கருவிகள் பொய்யான தகவல்களைக் கொடுக்க முடியுமா? சாத்தியங்கள் உண்டு. இக் கருவிகளையே ஏமாற்ற வல்ல மேலதிக புறக்காரணிகளும் உண்டு. Disturbance variables எனப் பொறியியலில் கூறப்படும் மர்ம விசைகள் எல்லாவற்றையும் ஒரு டிசைனர் அறிந்திருப்பார் என்று கூறமுடியாது. எனவே ஒரு தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி trial and error என்ற பரீட்சார்த்த முறைகளினூடாகவே கூர்ப்படைகிறது. இதநால் தான் முழுமையான தானியக்க ஓட்டி முறையை அறிமுகப்படுத்தப் பலவருடங்கள் எடுக்கும் என இதர வாகனத் தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.

கைத்தொழிற் புரட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே தானியக்க தொழில்நுட்பம் எம்மிடையே இருந்து வருகிறது. ஆனால் மனிதரது உயிர்களுடன் அவை ஒருபோதுமே நேரடியாகக் குறுக்கிட்டதில்லை, இலான் மஸ்க் போன்றோர் வரும் வரை.

விபத்துக் கொடுப்பனவு காரணமாக தானியக்க வாகனங்களை ஓட்டும் வாகன சாரதிகளின் காப்புறுதிக் கட்டணம் மிக மோசமாக அதிகரிக்கப்படும்போது இவ்வாகனங்களின் விற்பனையில் சரிவு ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் பல வாகனத் தயாரிப்பாளர்கள் தானியக்க ஓட்டி முறையிலிருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள் எநப்படுகிறது.

ரெஸ்லா விடயத்தில் தானியக்க ஓட்டிமுறை மட்டும் பிரச்சினையான ஒன்றல்ல. அதன்பாவனையாளர்களின் குரல்களை அடக்கும் வகையில் ரெஸ்லாவைப் புகழ்ந்து சங்கூதும் (ஊதியத்துக்காக) ‘பாவனையாளர்கள்’ சந்தையில் அதிகம். ரெஸ்லா தன் உருவத்தைவிடப் பன்மடங்கு பூதாகரமான பிம்பத்தைக் கட்டியெழுப்பியிருக்கிறது. மஸ்க்கின் வான் பயணம் போன்ற இதர துணிகரமான தொழில்நுட்ப முயற்சிகள் அவரது இந்த பிம்பக் கட்டுமானத்துக்கு உதவி புரிந்துள்ளன.

இதைவிட இளைய தலைமுறையினரையும் அதி பணக்காரரையும் கவரும் விதத்தில் ‘அப்பிள்’ ரக சந்தைபடுத்தலை (branding) ரெஸ்லா கையாள்கிறது. இளங்கன்று பயமறியாது என்பதுபோல எலான் மஸ்க்கின் சாகச மனப்பான்மைக்கு ஈடுகொடுத்து பல இளைய தலைமுறையினர் ஒரு வகையான பக்தி பரவசத்தோடு உருக்கொண்டு ஆடுகின்றனர். வேகச்சாலைகளில் அவர்களது ரெஸ்லா சாகசங்கள் பற்றிய பல காணொளிகளும் வந்துள்ளன. ஒரு பெரியண்ணராக இருந்து மஸ்க் அவர்களது சாகசங்களைக் கைதட்டி வரவேற்கிறார். ரெஸ்லா விபத்துக்களின் புள்ளி விபரங்கள் ஏறிக்கொண்டிருக்கின்றன. ஜோவானிகளை இழந்த பெற்றோர்கள் மனமெரிந்துகொண்டிருக்கிறார்கள்.

எரிபொருள் வியாபார மாஃபியாக்களின் கழுத்து நெரிப்பினால் வெளியில் தலைகாட்ட முடியாமலிருந்த மின்வாகனத் தொழில்நுட்பத்தைத் துணிச்சலுடன் வெளிக்கொணர்ந்தமைக்காக எலான் மஸ்க் வரலாற்றில் இடம் பெறவேண்டியவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவரை வெற்றிகரமாக மடக்கிவிட பல கழுகுகள் பார்த்துக்கொண்டிருக்கலாம். தானியக்க ஓட்டி முறைத் தொழில்நுட்பம் அதற்கான கதவுகளைத் திறந்துவிட்டுவிடக்கூடாது என்பதுவே என்போன்ற சாதாரண மனிதரின் ஆதங்கம்.