Sports

ரென்னிஸ்-அவுஸ்திரேலிய ஓப்பிண் | நோவாக் ஜோகோவிச்வின் அவுஸ்திரேலிய அனுமதி மறுப்பு, விரைவில் நாடுகடத்தப்படலாம்?

ஜனவரி 17 இல் ஆரம்பமாகவிருக்கும் அவுஸ்திரேலிய ஓப்பிண் கிராண்ட் ஸ்லாம் சுற்றுப்போட்டியில் கலந்துகொள்வதற்கு, கடந்த 9 அவுஸ்திரேலிய ஓப்பிண் போட்டிகளில் வெற்றியீட்டி சம்பியானாகவும் உலகின் முதலாமிடத்திலும் இருக்கும் நோவாக் ஜோகோவிச்சுக்கு இந்த தடவை அனுமதி கிடைக்காது எனக் கூறப்படுகிறது. இந்த தடவை போட்டியில் பங்குபற்றி அவர் வெற்றி பெறுவாரானால் அது அவரது 10 ஆவது தடவை சம்பியனாகும் சந்தர்ப்பத்தையும், அதே வேளை அது ஒரு உலக சாதனையாகவும் அமைந்திருக்கும்.அவருக்கு அனுமதி மறுக்கப்படுவதற்குக் காரணம் அவர் கோவிட்டுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை எடுக்க மறுத்துவருவதுடன் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அவர் பெற்றுக்கொண்ட மருத்துவரீதியான விலக்கு (medical excemption) ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் அறிவித்தமையுமே எனக் கூறப்படுகிறது.

தடுப்பு மருந்தை அவர் எடுத்தாரா இல்லையா என்பதுபற்றி அவர் இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை எனினும் அவுஸ்திரேலிய குடிவரவு விதிகளுக்கமைய அவர் உள்நுழையும்போது இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றமைக்கான அத்தாட்சிப் பத்திரத்தைச் சமர்ப்பிக்காமல் அதற்குப் பதிலாக தான் தடுப்பு மருந்தை எடுக்கத் தேவையில்லை என்பதற்கான விதிவிலக்குப் பெற்றதற்கான மருத்துவப் பத்திரத்தைச் சமர்ப்பித்திருந்தார் எனவும் அறியப்படுகிறது. இருப்பினும் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல என குடிவரவுத் திணைக்களம் அவருக்கு வழங்கப்பட்ட அனுமதியை மீளப்பெற்றுவிட்டது. இதற்கு எதிராக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்குப் பதிந்துள்ளார்கள் எனவும் அதில் வெற்றிபெறாவிட்டால் அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படலாமெனவும் கூறப்படுகிறது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் “சட்டம் எப்போதும் சட்டம் தான். அதை ஒருவருக்காக மாற்ற முடியாது. அவர் வைத்திருப்பதாகக் கூறப்படும் மருத்துவப் பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒன்றல்ல. அவர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்தால் அவர் உள்ளே வர அனுமதிக்கப்படுவார்” எனக் கூறியிருக்கிறார்.

கோவிட் கட்டுப்பாட்டு விடயங்களில் அவுஸ்திரேலியா மிகவும் இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றிவரும் நாடாகும். இதற்காகப் பல தியாகங்களை அவுஸ்திரேலிய மக்கள் செய்துவரும் நிலையில் யோகோவிச்சின் தடுப்பு மருந்து தொடர்பான நிலைப்பாடு பல பொதுமக்களை ஆத்திரமூட்டியுள்ளது. இதனால் அவரை உடனடியாக நாடுகடத்தும்படியான கோரிக்கைகள் நாடுதழுவிய ரீதியில் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஜூன் 2020 இல் ஜோகோவிச் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்தார் எனவும் அதற்குப் பின்னர் அவர் மீளவும் தொற்றுக்குள்ளாகியமை பற்றி அறியமுடியவில்லை எனவும் ஆனால் அவரது முகநூல் பதிவுகளில் அவர் தனது தடுப்பு மருந்துக்கு எதிரான நிலைப்பாட்டைப் பலதடவைகள் தெரிவித்து வந்துள்ளார் எனவும் அறியப்படுகிறது.

அவுஸ்திரேலிய ஓப்பிண் சுற்றுப்போட்டிக்காக புதனன்று (05) மெல்போர்ணை வந்தடைந்த ஜோகோவிச் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அங்கேயே தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அதே வேளை அவரது வழக்கறிஞர்கள் அவரது சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் தெரியவருகிறது.இதே வேளை அவுஸ்திரேலிய சுற்றுப்போட்டியின் ஒழுங்கமைப்பாளர்கள் இது குறித்துத் தெரிவித்தபோது இரண்டு வித்தியாசமான குழுவினர் ஜோகொவிச்சின் விதிவிலக்கு பற்றி ஆராய்ந்து அனுமதியளித்த பின்னரே அவரை அங்கு வரவழைத்ததாகத் தெரிவித்துள்ளது. நட்சத்திர அந்தஸ்துள்ள விளையாட்டு வீரர்களைப் பணம் கொடுத்து அழைப்பது இப்படியான ஒழுங்கமைப்பாளர்களால் வழமையாக மேற்கொள்ளப்படும் ஒரு விடயம். அதன் மூலமே அவர்கள் ரசிகர்கள் மூலமும் விளம்பரதாரர்கள் மூலமும் அதிக பணத்தைச் சம்பாதிக்க முடியும். ஜோகோவிச் போன்றோர் போட்டியில் பங்குபற்றாவிட்டல் பல விளம்பர நிறுவனக்களுடன் அமைப்பாளர் செய்யும் ஒப்பந்தங்கள் மீறப்பட்டதாகிவிடும். எனவே அவரது அனுமதியைப் பெறுவதற்காக அமைப்பாளர்கள் இயலுமானவரை முயற்சிப்பார்கள் எனவே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் தற்போது இது நாட்டில் ஒரு அரசியல் பிரச்சினையாக மாறிவிட்ட நிலையில் இப் போட்டியைப் பகிஷ்கரிக்கும்படியான குரல்கள் வலுத்து வருகின்றன. வேறு வழியின்றி பிரதமர் ஸ்கொட் மொறிசனும் மக்களது நிலையை அனுசரித்துப் போகவேண்டியிருக்கிறது எனக் கூறப்படுகிறது.