ரெக்ஸாஸ் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 19 குழந்தைகள் உட்பட 21 பேர் கொலை

18 வயது துப்பாக்கிதாரியும் கொல்லப்பட்டார்

இன்று (மே 24) அமெரிக்க ரெக்ஸாஸ் மாநிலத்தின் சான் அன்ரோணியோ நகரிலிருந்து 85 ,மைல்கள் மேற்கேயுள்ள உவால்டி என்னுமிடத்தில் ஆரம்பப் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் காரணமாக 19 குழந்தைகளும் 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுடைய துப்பாக்கிதாரியும் பொலிசாரால் கொல்லப்பட்டுள்ளாரெனத் தெரிகிறது.

கொல்லப்பட்ட சந்தேக நபர் முதலில் அவரது பாட்டியைச் சுட்டுக் கொன்றுவிட்டு அதன் பின்னரே பாடசாலைக்குச் சென்று அங்கு குழந்தைகளைக் கொன்றார் என சார்ஜண்ட் எரிக் எஸ்ட்றாடா கூறியதாக சீ.என்.என். தெரிவித்துள்ளது. துப்பாக்கிதாரிக்கு இன்று 18 வயது ஆகிறது. இச் சம்பவத்தில் துப்பாக்கிதாரி தனியராகவே செயற்பட்டுள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரியின் இன்ஸ்டாகிராம் பதிவில் சில நாட்களுக்கு முன்னர் சில AR15 ரக ரைபிள்களின் படங்கள் பதியப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. துப்பாக்கிதாரியின் பெயர் சல்வடோர் றாமோஸ் எனத் தெரியவந்துள்ளது. ஒரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமொன்று விரைவில் வருகிறது எனவும் குழந்தைகள் கவனமாக இருக்கும்படியும் றாமோஸ் தனது சமூகவலைப் பதிவுகளில் தெரிவித்திருந்தாக ரெக்ஸாஸ் மாநில செனட்டர் றோலண்ட் குட்டியெரேஸ் தெரிவித்துள்ளார்.