ரெக்சாஸ் படுகொலை: காவல்துறையினர் தலையிடுவதற்கு ஒரு மணி நேரம் எடுத்தது
தடுக்க முயன்ற பெற்றோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
காவல்துறையினர் எதையுமே செய்யாமல் வெறுமனே வேலிக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் உள்ளே போவதற்கோ அல்ல்து வேறெங்கும் ஓடிச்சென்று பார்ப்பதற்கோ முயற்சிக்கவில்லை
அஞ்சலி றோஸ் கோமேஸ் – இரண்டு குழந்தைகளின் தாயார்
அம்ரிக்காவின் ரெக்சாஸ் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பாடசாலைப் படுகொலையின்போது துப்பாக்கிதாரியை நிறுத்துவதற்கு காவல்துறையினர் ஒருமணி நேரம் எடுத்திருந்தமை பற்றி பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
மே 24 அன்று, ரெக்சாஸ் மாநிலத்தின் சான் அன்ரோனியோ நகரிலுள்ள யூவால்டி என்னுமிடத்தில் ஆரம்பப்பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக 19 சிறுவர் சிறுமியரும் 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டிருந்தனர். 18 வயதுடைய கொலையாளியான சல்வடோர் றாமோஸ் பின்னர் எல்லைக்காவல் படை அதிகாரி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்து ஒரு மணித்தியாலத்தின் பின்னரே அவர்கள் பாடசாலைக்குள் சென்று துப்பாக்கிதாரியைச் சுட்டுக்கொன்றனர். அதே வேளை இச் சம்பவத்தின்போது தலையிட முனைந்த பொதுமக்களை காவல் துறையினர் கைவிலங்கிட்டுத் தடுத்துமிருந்தனர். இதற்குக் காரணமான உள்ளூர் மற்றும் மத்திய காவல்துறையினர் மீது பொதுமக்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினரின் ஆரம்ப அறிக்கைகள் குழப்பகரமாக உள்ளன. ரெக்சாஸ் மாநில பொதுப் பாதுகாப்புத் திணைக்களம் (DPS) ஆரம்பத்தில் விடுத்த அறிக்கையில் “துப்பாக்கிதாரியை ஒரு மாவட்ட காவல்துறை அதிகாரி தடுத்து நிறுத்த முயற்சித்தார்” எனக் கூறப்பட்டிருந்தாலும் பின்னர் இது மாற்றப்பட்டு அப்படி எதுவும் நடைபெறவில்லை எனத் திணைகளம் கூறி வருகிறது.
வகுப்பறைக்குள் சென்றதும் துப்பாக்கிதாரி கதவுகளை உள்ளே பூட்டிக்கொண்ட பின்னர் மாணவர்களையும் ஆசிரியர்களையும் நோக்கிச் சரமாரியாகச் சுட்டுத் தீர்த்ததாகவும் இத் தருணத்தில் ஆசிரியர்கள் மாணவர்களைப் பாதுகாக்க முயற்சி எடுத்திருந்தனர் எனவும் கூறப்படுகிறது. ஆனாலும் துப்பாக்கிதாரி வகுப்பறைக்குள் சென்று சில நிமிடங்களில் காவல்துறையினர் அவ்விடத்துக்கு வந்துவிட்டனர் எனவும் ஆனால் அவர்களால் வகுப்புக்கு உள்ளே போக முடியாமையால் துப்பாக்கிதாரியை நிறுத்த முடியவில்லை எனவும் திணைக்கள அதிகாரி கூறியிருக்கிறார். இதற்கான விளக்கத்தை நிருபர்கள் கேட்க முற்பட்டபோது அதற்குப் பிறகு விடையளிப்பேன் என அந்த அதிகாரி தெரிவித்திருந்தார்.
“காவல்துறையினர் எதையுமே செய்யாமல் வெறுமனே வேலிக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் உள்ளே போவதற்கோ அல்ல்து வேறெங்கும் ஓடிச்சென்று பார்ப்பதற்கோ முயற்சிக்கவில்லை” என அஞ்செலி றோஸ் கோமேஸ் வால் ஸ்றீட் ஜேர்ணல் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர்து இரண்டு குழந்தைகள் றொப் ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கிறார்கள்.
சம்பவத்தைக் கேள்விப்பட்டுத் தான் பாடசாலைக்கு வாகனத்தில் செல்வதற்கு 40 நிமிடங்கள் எடுத்தது எனவும் அப்போதும் காவல்துறையினர் வகுப்பிற்குள் செல்லாது வெளியே நின்றிருந்தனர் எனவும் கோமேச் கூறுகிறார். இதுபற்றி உயரதிகாரிகளுடன் தான் முறைப்பட்டு செய்ய முற்பட்டபோது ‘விசாரணைகளைல் குறுக்கீடு செய்தமைக்காக’ தான் கைவிலங்கிடப்பட்டுக் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார். உள்ளூர் காவல்துறையினரின் வற்புறுத்தலுக்கிணங்க விடுதலை செய்யப்பட்டவுடன் தான் வேலி மீது பாய்ந்து உள்ளே சென்று தனது இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்றிவிட்டதாக கோமேஸ் தெரிவித்துள்ளார்.
கோமேஸைப் ப்போலவே மேலும் பல பெற்றொர்கள் தம்மை உள்ளே விடும்படி காவல்துறையினரிடம் கெஞ்சும் காட்சிகளுடனான சமூகவலைக் காணொளிகள் வெளியாகியுள்ளன.
இறுதியில் மூன்று எல்லைக் காவல் அதிகாரிகள் வகுப்பறைக்குள் சென்று பாடசாலை அதிபரிடம் சாவியை வாங்கி பூட்டியிருந்த கதவைத் திறந்து துப்பாக்கிதாரியைக் கொன்றார்கள்.
அமெரிக்காவில் நடைபெற்ற பாடசாலைச் சூட்டுச் சம்பவங்களில் இரண்டாவது அதிக எண்ணிக்கையைக் கொண்டது இதுவாகும். 2012 இல் சாண்டி ஹூக் ஆரம்பப் பாடசாலையில் அடம் லான்சா என்ற துப்பாக்கிதாரி மேற்கொண்ட படுகொலைச் சம்பவத்தின்போது 20 முதலாம் வகுப்பு மாணவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
துப்பாக்கிகளை வாங்குபவர்களது பிரத்தியேக தகவல்களைப் பரிசோதித்த பின்னரே (background check) துப்பாக்கிகள் விற்கப்படவேண்டுமென்ற சட்டமொன்றைக் கொண்டுவருவதற்கு அமெரிக்க காங்கிரஸில் ஜனநாயகக் கட்சி முயற்சித்திருந்தாலும் குடியரசுக் கட்சி செனட்டர்கள் அதற்கு எதிராக வாக்களித்து அப் பிரேரணையைத் தோற்கடிக்கச் செய்துவருகின்றனர்.. அமெரிக்க அரசியல் சாசனத்தின் 2 ஆவ்து திருத்தத்தின் பிரகாரம் தனிப்பட்ட ஒருவர் ஆயுதம் தாங்குவதைச் சட்டம் தடுக்க முடியாது. இத் திருத்தத்தை மாற்றுவதற்கு எதிராக அமெரிக்க ரைபிள் அசோசியேசன் என்ற பலம் வாய்ந்த அமைப்பு போராடி வருகிறது. பெரும் தனவந்தர்களும், சார்ள்டன் ஹெஸ்டன் போன்ற பிரபல நடிகர்களும் தமது பண பலத்தால் குடியரசுக்கட்சி செனட்டர்களைத் தமக்கு ஆதரவாக செய்றபட வைத்துள்ளனர்.