ரூ.20 மில்லியன் பணத்தை மக்களுக்குப் பகிர்ந்தளித்த கரவெட்டி முதியவர் கைது

நடமாட்ட முடக்கத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும்படி வெளிநாட்டிலுள்ள மகன் அனுப்பிய பணத்தை விநியோகித்த முதியவரொருவர் திங்களன்று (செப் 06) நெல்லியடி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கரவெட்டி இரும்பு மதவடியைச் சேர்ந்த இந்த முதியவர், மற்றும் அவருக்கு உதவியாகவிருந்த மேலும் மூன்று உறவினர்கள் ஆகியோரை, பொது முடக்கச் சட்டத்தை மீறியமைக்காகப் பொலிசார் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிய வருகிறது.

ஊர் முடக்கம் காரணமாக பல பொதுமக்கள் தமது நாளாந்த ஊதியத்தை இழந்து சிரமப் படுகிறார்கள். அவர்களது நிவாரணத்துக்காக வெளிநாட்டிலிருந்து ஒரு அக்கறையுள்ள தமிழர் ஒருவர் 20 மில்லியன் ரூபாய்களை உடுப்பிட்டியிலுள்ள அவரது தந்தையாருக்கு அனுப்பி, வறிய குடும்பங்களுக்கு தலா ரூ. 2,000 வரை கொடுக்குமாறு கேட்டிருந்தார் எனவும் அதற்கமையை மேலும் மூன்று உறவினர்களின் உதவியுடன் அவர் அப்பணத்தை விநியோகிக்கத் தொடங்கியிருந்தார் எனவும் அறியப்படுகிறது.

இவ் விடயத்தை அறிந்த பல பொது மக்கள் நிதி வழங்குமிடத்தில் வரிசையில் குழுமியதுடன், அவர்களில் பலர் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் எதையும் அனுசரிக்காது அங்கு நின்றிருந்தார்கள் எனவும், கோவிட் பொதுமுடக்கச் சட்டத்தை மீறிய காரணத்தால் நெல்லியடி பொலிசார் குறிப்பிட்ட முதியவரையும் அவரது உதவியாளர்களையும் கைதுசெய்தனர் எனவும் தெரிய வருகிறது.

பொலிசார் தலையிடுவதற்கு முன்னர் ஏறத்தாள 500 பேர் வரையில் இவ்வுதவிப்பணத்தைப் பெற்றுவிட்டார்கள் எனவும் மீதமாக வரிசையில் நின்றவர்களைப் பொலிசார் எச்சரிக்கை செய்து துரத்தி விட்டனர் எனவும் அறிய முடிகிறது.