Sri Lanka

ரூபவாஹினியின் ‘சனல் ஐ’ தொலைக்காட்சியை லைக்கா குழுமம் வாங்குகிறது?

‘ரூபவாஹினி-2’ என்று ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ‘சனல் ஐ’ (Channel Eye) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட தொலைக்காட்சியை லண்டனைத் தலைமயகமாகக் கொண்ட லைக்கா குழுமம் வாங்கியிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. கல்வி, இளையோர், பொழுதுபோக்கு என்ற மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத் தொலைக்காட்சி விளையாட்டுகள் தொடர்பான ஒளிபரப்பில் பிரபலமானதாகவிருந்தாலும் வணிக ரீதியில் அதிகம் இலாபத்தை ஈட்டவில்லை என்பதால் அதை விற்றுவிட ரூபவாஹினி முடிவெடுத்திருந்தது.

இவ்விடயம் தொடர்பாக லைக்கா குழுமத்தின் அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன் தற்போது இலங்கை வந்துள்ளதாகவும் அவருக்கு இத் தொலைக்காட்சியை விற்பது தொடர்பாக தென்னிலங்கை சிங்கள தீவிரவாதிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் அறியப்படுகிறது. இதற்குப் பதிலளித்த ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தனா “இத் தொலைக்காட்சி லைக்கா குழுமத்திற்கு ஒரு குறுங்கால வாடகைக்கு விடப்படுள்ளதெனவும் அதற்காக லைக்கா குழுமம் மாதமொன்றுக்கு ரூ.25 மில்லியன்களை வழங்குமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

2021 இல் லைக்கா குழுமம் லங்கா பிரிமியர் லீக்கிலுள்ள விளையாட்டுக்கழகமான ‘ஜஃப்நா கிங்ஸ்’ ஐ வாங்கியிருந்தது. தற்போது பிரிமியர் லீக் விளையாட்டு இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியில் பிரபலமாக வருவதால் இவ்விளையாட்டுக்களை ஒளிபரப்பு செய்வதற்கு இளையோர் மத்தியில் பிரபலமான ‘சனல் ஐ’ உதவியாக இருக்குமென்பதற்காக லைக்கா குழுமம் அதை ‘வாங்குவதாக’ அறியப்படுகிறது.

ஏப்றில் 1999 இல் ரூபவாஹினி 2 என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இச் சனல் ஆகஸ்ட் 2000 ஆண்டில் சனல் ஐ எனப் பெயர் மாற்றிக்கொண்டது.