ருவிட்டர்: பராக் அக்ரவால் பணி நீக்கம் – பழிவாங்கும் இலான் மஸ்க்?
நட்டஈடாக அக்ரவாலுக்கு $42 மில்லியன் வழங்கப்படும்

சில காலமாகப் பரபரப்பாகப் பேசப்பட்டுவந்த ருவிட்டர் சமூகவலைத்தளக் கைமாற்றம் முடிவுக்கு வந்துள்ளது. உலகின் அதிபணக்காரரும் ரெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் அதிபருமாகைய இலான் மஸ்க், $44 பில்லியன் டாலர்களைக் கொடுத்து பொது நிறுவனமாகிய ருவிட்டருக்கு ஒரே சொந்தக்காரராகிறார். உலகின் பல செய்தி ஊடகங்களைப்போல் இனி அது ஏறத்தாள – தனி ஒருவரின் சொத்து அல்லது நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் அவருக்குரியவை. உலகின் நாகரீகத்தைப் பாதுகாக்கவே தான் இந்நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ளதாக மஸ்க் கூறுகிறார்.
நிறுவனம் கைமாறியதும் அங்கு பணிபுரியும் 75% மான ஊழியர்களைத் தான் பணிநீக்கம் செய்வேன் என மஸ்க் சிலநாட்களின் முன் கூறியிருந்தார். ஆனால் அவர் முதலில் பணியகற்றியது அந்நிறுவனத்தின் மூன்று உயரதிகாரிகளை. அவர்களில் இருவர் இந்திய பூர்வீகங்களைக் ஒண்ட பராக் அக்ரவால் (CEO) மற்றும் சட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான விஜய கட்டே. மூன்றாமவர் பிரதம நிதி அதிகாரி (CFO) நெட் சீகல்.
ஆரம்பத்தில் $44 பில்லியன் டாலர்களுக்கு ருவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு உடன்ப்ட்டு ஒப்பந்தம் செய்திருந்த மஸ்க் பின்னர் காலை வாரப் பார்த்தார். ஆனால் ருவிட்டர் நிறுவனம் அவர்மீது வழக்குப் போட்டுவிட்டது. ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட விலையைக் குறைப்பதற்கு மஸ்க் முயன்றார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இக்கால கட்டத்தில் முதன்மை நிர்வாகி அக்ரவாலுக்கும் மஸ்கிற்க்குமிடையே பொதுவெளியிலும் பிரத்தியேகமாகவும் எழுத்துமூலம் விவாதங்கள் நடைபெற்றன எனவும் பின்னர் வேறு வழியில்லாத நிலையில் மஸ்க் ருவிட்டரை வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது. தற்போது நிறுவன கைமாறியதும் மஸ்க் தனது பழிவாங்கலை நிறைவேற்றுகிறார் எனக் கூறப்படுகிறது.
ருவிட்டர் உத்தியோகபூர்வமாகக் கைமாறியதும் இலான் மஸ்க், புதனன்று, கலிபோர்ணியாவிலிலுள்ள ருவிட்டரின் தலைமையகத்துக்கு ஒரு கழிவுத்தொட்டியுடன் சென்று ‘அலுவலகத்தைத் துப்புரவு செய்யப்போவதாக’ நகைச்சுவையாகக் கூறியதோடு உள்ளே சென்றதும் குறிக்கப்பட்ட உயரதிகாரிகளைப் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் அவமானப்படுத்தி வெளியேற்றியதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. அது மட்டுமல்லாது ருவிட்டரில் அவரது பெயர் இப்போது Chief Twit எனவும் மாற்றப்பட்டுள்ளது.
“உலகின் எதிர்கால நாகரீகத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு பொது டிஜிட்டல் சதுக்கத்தை உருவாக்கவே நான் ருவிட்டரை வாங்கினேன். அங்கு பலவிதமான நம்பிக்கைகளும், விவாதங்களும் வன்முறையேதுமின்றி ஆரோக்கியமான முறையில் உரையாடல்களை மேற்கொள்ள முடியும்” என மஸ்க் குறிப்பிட்டுள்ளார். இதை அவர் தனது முதலாவது ருவிட்டர் செய்தியில் ‘The Bird is Freed” எனச் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் நவம்பரில் ருவிட்டரின் இணை ஸ்தாபகரும் முதன்மை நிர்வாகியுமான ஜாக் டோர்சி திடீரெனப் பதவி விலக்கியதும் IIT Bombay மற்றும் Stanford பட்டதாரியான 38 வயதுடைய அக்ரவால் முதன்மை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் ருவிட்டர் தனது வியாபாரத்தை ஊக்குவிக்க உள்ளார்ந்த bots பொறிமுறையைப் பாவிக்கின்றமை தொடர்பாக ஏற்பட்ட கருத்துமுரண்பாடு காரணமாக ருவிட்டரை வாங்குவதினின்றும் பின்வாங்க மஸ்க் முயற்சித்தார். அது சட்டப்படி முடியாத காரணத்தால் நிறுவனத்தை வாங்குவதற்கு மஸ்க் நிர்ப்பந்திக்கப்பட்டார். இதற்கு காரணம் அக்ரவாலும் இதர உயரதிகாரிகளும் என்பது மஸ்கின் வாதம். பதவி பறிப்பிற்காக அக்ரவாலுக்கு $42 மில்லியன் நட்டஈடு வழங்கப்படுமெனத் தெரிகிறது.