ருவிட்டர் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகியாக (CEO) பராக் அகர்வால் தெரிவு
வெள்ளையர்களிடமிருந்து எதிர்ப்பும் வலுக்கிறது
ருவிட்டர் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி ஜாக் டோர்சியின் பதவி விலகலைத் தொடர்ந்து அப்பதவி இந்திய அமெரிக்கரான பராக் அகர்வாலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவற்றை நிர்வகிக்கும் இந்திய அமெரிக்கர்களின் வரிசையில் இணையும் அகர்வால் இவர்களுள் மிகவும் இளையவராவார்.
இருப்பினும் அவரது நியமனத்தை எதிர்த்து உலகெங்குமுள்ள வெள்ளை இனத் துவேஷிகள் குரலெழுப்ப ஆரமபித்துள்ளனர். நியமனம் கொடுக்கப்பட்டு முதலாவது நாளிலேயெ அவருக்கு எதிராக 20,000 ருவிட்டர் செய்திகளை சமூக வலைஞர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதற்குக் காரணம் 2010 இல் அகர்வால் தனது ருவிட்டர் செய்தியில் வெளியிட்ட ஒரு கருத்து. அப்போது அவர் ருவிட்டரில் ஒரு பணியாளராகவே இருக்கவில்லை. அப்போது அமெரிக்க நகைச்சுவையாளர் ஒருவர் அமெரிக்காவில் இஸ்லாமிய வெறுப்பு பற்றி மேடையில் கூறிய கருத்தை விமர்சித்து அகர்வால் தனது ருவிட்டரில் அக் கருத்தைத் தெரிவித்திருந்தார். அக் கருது இதுதான்:
“முஸ்லிம்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசமுண்டென்பதை அவர்களால் அறியமுடியவிட்டால் வெள்ளையர்களுக்கும் இனவாதிகளுக்கும் பேதமிருப்பதாக நான் கருதமாட்டேன்” என்பதே அகர்வாலின் குறுஞ்செய்தி.
இச் செய்தியைக் கிண்டி எடுத்து அமெரிக்க வலதுசாரி இணையத்தளமான பிறெயிட்பாட் (Breitbart), தனது திங்கள் பதிப்பில் வெளியிட்டிருக்கிறது. இதன் பிரதம ஆசிரியர் ஜனாதிபதி ட்றம்பின் ஆலோசகர்களில் ஒருவரான ஸ்டீவ் பனன்.
அகர்வாலின் இக் கருத்து இனத் துவேசம் கொண்டது என்பதே ருவிட்டரில் அவரை விமர்சிப்பவர்களது கருத்து. அமெரிக்க குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் அகர்வாலுக்கு எதிராகக் குரலெழுப்பியுள்ளார்கள். அவர்கள் எல்லோருக்கும் அகர்வால் முறையான் பதிலைக் கொடுத்துள்ளார்.