ருவிட்டர்: இலான் மஸ்கின் திரிசங்கு நிலை
சிவதாசன்
ருவிட்டர் வடிவில் சனி இலான் மஸ்கைப் பிடித்துக் கொண்டது முதல் அவர் நித்திரை இல்லாமல் திரிகிறார். அசுரத் தவம் செய்து சிவனிடம் பெற்ற வரம் விரைவில் மீளப்பெறப்படுமா என்பதுவே இப்போதைய கேள்வி.
ருவிட்டர் பறவையைக் கூண்டோடு வாங்கி மூன்று வாரங்களாகின்றன. அது முதல் இந்த ‘கீச்சுத் தலவைர்’ (Chief Twit எனவே அவர் தன்னை அழைத்துக் கொள்கிறார்) ருவிட்டர் தலைமையகத்திலேயே படுத்துக் கிடக்கிறார். ருவிட்டரில் அவரைப் பற்றி வரும் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதிலேயே காலம் கழிகிறது. அவர் மீது வைக்கப்படும் அநேகமான விமர்சனங்கள் ருவிட்டரின் முன்னாள் பணியாளர்களிடமிருந்தே வருகிறது. எதிர்ப்பார்க்கப்படவேண்டியது தான்.
ட்றம்பைப் போலவே இலான் மஸ்க்கும் ஒரு அதி தீவிர இனவாதி. ருவிட்டரைக் கையகப்படுத்திய மறு நாளே அதில் வெளிவந்த இனவாதம், குறிப்பாக கறுப்பினத்தவரை ‘n—-r) என்றழைக்கும் வார்த்தைப் பிரயோகம், 500% த்தால் அதிகரித்தது. பேச்சுச் சுதந்திரம் என்ற பெயரில் அவர் திறந்துவிட்ட படலையால் இனமந்தைகள் படுக்கையறை மட்டும் வந்துவிட்டன.
இலான் மஸ்கிற்கும் இனவாதத்திற்கும் மயிரிடைவெளிதான் இருக்கிறது. அவரது இன்னுமொரு நிறுவனமான ரெஸ்லாவின் கலிபோர்ணியா வேலைத் தலத்தில் கறுப்பின மக்களை இன்னும் அடிமைகள் போலவே நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக பல வழக்குகளும் அவர் மீது தொடரப்பட்டுள்ளன. மிகச் சொற்பமான எண்ணிக்கையில் அங்கு பணி புரியும் கறுப்பின மக்கள் கீழ்நிலைப் பணிகளையே செய்துவருகின்றனர் எனவும் அவர்களை ‘n’ சொல்லினால் இதர வெள்ளைப் பணியாளர்கள் அழைப்பது வெகு சாதாரணம் எனவும் இது குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மஸ்க் உதாசீனம் செய்துவருவதாகவும் செய்திகளாக வந்திருந்தன. ருவிட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்துவதற்கு முன்னரே தான் கையேற்றதும் பல்லாயிரக் கணக்கானவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அவர் அறிவித்திருந்ததும் முதல் நாளே அவர் அதை நடைமுறைப்படுத்தியதும் தெரிந்த விடயங்கள். இதன் போது அவர் கைவைத்த முதலாவது பணியாளர்களில் இருவர் இந்திய பூர்வீகத்தினர். இப்போது அது பல்லாயிரங்களைக் கடந்துவிட்டது. சரி அதை ஒரு வியாபார உத்தியென எடுத்துக் கொள்வோம்.
தீவிர இன மேலாண்மை வாதம் உலகில் மேலோங்கி வருவது உண்மை. அதன் துணிச்சலான முகமாக இதுவரை ட்றம்ப் இருந்துவந்தார். ஜனவரி 06 வெள்ளை மாளிகைப் படைபெடுப்பின் பின்னர் அவரது ‘பிராண்ட்’ அரசியல் கொஞ்சம் மங்கத் தொடங்கியிருக்கிறது. இந்த இடத்தை நிரப்புவதற்கு மஸ்க் முயற்சிக்கிறாரா என்று எனக்கொரு சந்தேகம். பிறப்பால் அவர் ஒரு அமெரிக்கர் இல்லாமையால் அவரால் ஜனாதிபதியாக வர முடியாது. ஆனால் மாநில கவர்னராகவோ இதர பலமான இடங்களையோ அவரால் பிடிக்க முடியும். அல்லது உலகின் தீவிர வெள்ளையினவாதப் பக்தகோடிகளுக்கு அவர் தலைவராக வரலாம். அவருக்கு அந்த ஆசையும் பலமும் இருக்கிறது என்பதை அவரது நாளாந்த ருவீட்டுகள் மூலம் உய்த்துணரலாம்.
ஆனால் அது சாத்தியமாகுமா என்ற சந்தேகத்தை கடந்த சில நாட்களாக வரும் செய்திகள் ஏற்படுத்துகின்றன. மஸ்கிற்கு எதிராக ‘எஸ்ராபிளிஷ்மென்ற்’ என சூசகமாகக் குறிப்பிடப்படும் ஆளவந்தார் ச்மூகம் பகலிரவாக வேலை செய்கிறது. நியூ யோர்க் ரைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்றவற்றின் முகங்கள் இதைப் பிரதிபலிக்கின்றன. ருவிட்டரில் விளம்பரம் செய்வதைப் பல முன்னணி நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன. ரெஸ்லா நிறுவனத்தின் பங்குச் சந்தை 17% வீழ்ச்சியடைந்திருக்கிறது. ருவிட்டரை வாங்குவதற்கு மஸ்க் $4 பில்லியன் பெறுமதியான ரெஸ்லா பங்குகளை விறக்வேண்டி வந்தது. ஸ்பேஸ் எக்ஸ் என்ற மற்றுமொரு நிறுவனமும் பணச்சிக்கலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படியிருந்தும் மஸ்க் இன்னமும் ருவிட்டர் தலைமையகத்தினுள் தன்னைச் சிறைப்படுத்தியிருக்கிறார். அலுவலகங்களுக்கு கதவுகளைத் திறந்துவிடும் எலெக்ட்றோனிக் திறப்புகள் செயற்படாமல் போனதால் முதல் நாள் பணிநீக்கம் செய்தவரை மஸ்க் திருப்பியழைத்து கதவுகளைத் திறக்கவேண்டிய நிலைமை. பணிநீக்கம் செய்யப்பட்ட பலர் ருவிட்டர் தேருக்கு கட்டைகளைப் போட்டு அதன் வேகத்தைக் குறைத்து வருகிறார்கள். விரைவில் குருவி கூட்டுக்குள் செத்துப்போகும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்கிறார்கள்.
ருவிட்டர் உட்பட பெரும்பாலான சமூக ஊடகங்கள் சந்தையில் தமது வியாபகத்தைப் பெருப்பித்துக் காட்ட சில திருகுதாளங்களைச் செய்கின்றன. உதாரணமாக ஒரு நிறுவனம் தனது பண்டம் மீதான விளம்பரத்தைப் போடும்போது அதைப் பார்த்தவர்கள், விரும்பியவர்கள், கருத்துத் தெரிவித்தவர்கள் ஆகியவர்களின் எண்ணிக்கையை மாயமாக ஊதிப்பெருப்பித்துக் காட்ட bots எனப்படும் தானியக்க மென்பொருளைப் பாவிக்கிறார்கள். தேர்தலில் அந்தக் காலங்களில் வாக்குகளைத் திணிப்பது போல. இப்படியான bots ஒரு பண்டத்தின் மவுசை செயற்கையாக அதிகரிக்கச் செய்து அதன் மூலம் விற்பனையைத் தூண்டிவிடுகின்றன. இதனால் தான் சமூக ஊடகங்களில் பெரும் வியாபார முதலைகள் தங்கள் கவனத்தைச் செலுத்துகின்றன. இதில் அதிசயம் என்னவென்றால் இந்த நுணுக்கங்களை எல்லாம் நடைமுறைப்படுத்துவதற்குத் துணை போபவர்கள் அகர்வால் போன்றவர்கள் தான். இப்படியான நிறுவனங்களை நம்பித்தான் IIT போன்ற நிறுவங்கள் உயிர் வாழ்கின்றன. இங்கு வேடிக்கை என்னவென்றால் மஸ்க் இவர்களை விட மூளைப்பலமும், பணபலமும் – முக்கியமாக – நிறப்பலத்தையும் கொண்டிருப்பதுதான். எனவே இந்த பலப் பரீட்சையில் யார் வெல்லப்போகிறார்கள் என்பது, ருவிட்டரை மாற்றீடு செய்யும் நிறுவனமொன்றை யார் முதலில் உருவாக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே இருக்கிறது.
சமீப நாட்களாக மஸ்க் தன்னிலையுணர்ந்து காணப்படுகிறார் என்கிறார்கள். ரெஸ்லா மற்றும் ருவிட்டர் நிறுவனங்களுக்கு முதன்மை நிர்வாகியாக (CEO) தான் இருக்கப்போவதில்லை எனக் கூறிவருவதாகவும் கேள்வி. “முதன்மை நிர்வாகிகள் வியாபாரத்தைக் குறிவைத்தே இயங்குகிறார்கள். இந் நிறுவனங்களில் தொழில்நுட்பங்களை விருத்திசெய்யும் பொறியியலாளராக இருப்பதே எனது கடமையென்று நான் நினைக்கிறேன்” என சமீபத்தில் மஸ்க் கூறியிருக்கிறார். மஸ்கின் தொழில்நுட்ப அறிவு வியக்கத்தக்க ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது வியாபார தந்திரங்களை அரசியல் தீர்மானிப்பது மிகவும் ஆபத்தானது.
சமூக ஊடகங்கள் பல அரசியற் புரட்சிகளுக்குக் காரணமா க இருந்திருக்கின்றன. ஒரு சாமானியனின் கருத்தை வெளிக்கொணரும் ருவிட்டர் போன்ற சாதனங்கள் வாழவேண்டுமென்பதில் எனக்கு உடன்பாடு இருக்கிறது. ஆனால் அவற்றையே புரட்டி எடுக்கும் வகையில் அரசியலைப் புகுத்துவது அழிவுக்கே வழிவகுக்கும்.
குருவியை யாராவது தத்தெடுத்தால் உலகுக்கு நல்லது. “ஆமை பிடிப்பார் மல்லாத்துவார்”…