ருவிட்டரை மடக்கிய இந்திய அரசு
இந்திய சட்டங்களை மீறும் பல கணக்குகளை முடக்குவதோடு பாதகமான பல பதிவுகளை நீக்கிவிடும்படி இந்திய அரசு ருவிட்டர் நிறுவனத்துக்கு கொடுத்த கட்டளையை அந் நிறுவனம் நிறைவேற்றியுள்ளது. ஜூன் 4 (திங்கள்) வரை இதற்காகக் கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இந்திய அரசின் இக் கட்டளை தமது அடிப்படை விதிகளை மீறுகிறது எனக்கூறி ருவிட்டர் நிறுவனம் பங்களூரிலுள்ள கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
ஊடகக் கட்டுப்பாடுகள் தொடர்பாக ருவிட்டர் நிறுவனத்துக்கும் இந்திய அரசுக்குமிடையே நீண்டகாலமாக முரண்பாடுகள் இருந்துவருகின்றன. தற்போதைய கட்டளை தமது ‘மக்கள் தளத்திற்கு’ வழங்கப்பட்ட பேச்சுச் சுதந்திரத்தை மீறுகின்ற செயல் எனக்கூறி அது இவ் வழக்கைப் பதிவுசெய்துள்ளது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இந்திய மின்தள, தகவல் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைணவ், “நாட்டின் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்குப் பணிவது அனைவரதும் கடமையாகும்” எனக் கூறியுள்ளார்.
சென்ற வருடம் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், பொய்யான தகவல்கள், துவேஷத்தைக் கிளப்பும் கருத்துக்கள் மற்றும் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் விடயங்களை சமூக வலைத்தளங்கள் களைந்துவிடுவதற்கான கட்டளைகளைப் பிறப்பிக்கும் அதிகாரங்களை அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தது. சமூக வலைத்தளங்கள் இதற்கு இணங்க மறுக்கும் பட்சத்தில் பாதகமான செய்திகளைக் காவும் வலைத்தளங்கள் மீது தற்போது இருக்கும் சட்டப்பாதுகாப்பு (liability protection) அகற்றப்படும் எனவும் இதனால் இச் செய்திகளால் பாதிக்கப்படுபவர்கள் செய்தித் தளங்கள் மீது மானநஷ்ட வழக்குகளைப் பதிய முடியும் எனவும் சட்டம் கூறுகிறது.
இந்தியாவின் இச் சட்டப் பிரயோகம் தொடர்பாக ‘வட்ஸப்’ நிறுவனமும் அரசுக்கு எதிரான வழக்கொன்றைப் பதிவு செய்திருந்தது. அவ் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
இந்தியாவில் அண்ணளவாக, 34 மில்லியன் ருவிட்டர் பாவனையாளர்களும் (2019), 340 மில்லியன் முகநூல் பாவனையாளர்களும், 390 மில்லியன் வட்ஸப் பாவனையாளர்களும் இருக்கிறார்கள். இணையத் தளப் பாவனையாளர்களின் எண்ணிக்கை சுமார் 460 மில்லியன்களாகும்.