Spread the love

ஐ.நா.விடம் கையளிக்கப்படலாம்?

பிரான்ஸ் புறநகர்ப் பகுதியொன்றில் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட ருவாண்டா இனப்படுகொலைகளின் சூத்திரதாரியான ஃபெலிசியன் கபூகா, இன்று, பாரிஸ் நீதிமன்றமொன்றில் நிறுத்தப்படவுள்ளார்.

1994 ம் ஆண்டு ருவாண்டாவில் ஹூட்டு ஆயுததாரிகளால் 800,000 டூட்சி இனத்தவரும் அவர்களை ஆதரித்த ஹூட்டு இனத்தவரும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். 100 நாட்களாக நடைபெற்ற இப் படுகொலைகளைச் செய்வதற்கு தனது சொந்தப்பணத்தைக் கொடுத்து ஊக்குவித்ததாக 84 வயதுடைய ஃபெலிசியென் கபூகா குற்றம்சாட்டப்பட்டிருந்தார். பிரான்சின் புறநகர்ப் பகுதியொன்றில் மறைந்து வாழ்ந்துவந்த இவரைச் சில நாட்களின் முன் பிரென்சுப் பொலிசார் கைதுசெய்திருந்தனர்.

ருவாண்டாவின் அதி பணக்காரர்களில் ஒருவரும், தொழிலதிபருமான கபூகா, 1997 இல் இனப்படுகொலையுட்பட, ஏழு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டிருந்தார்.

இன்று சம்பிரதாயபூர்வமாக நடைபெறும் விசாரணையின்போது வழக்கு இன்னுமொரு விசாரணை நீதிபதிகள் குழுவிடம் கையளிக்கப்படும் எனவும், மனிதத்துக்கெதிரான குற்றங்களை விசாரிக்கும் ஐ.நா. வின் நீதிமன்றத்திடம் கபூகாவைக் கையளிப்பதா என்பதை இன் நீதிபதிகள் முடிவுசெய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


பிரான்சைத் தளமாகக் கொண்ட ஒரு இனப்படுகொலை ஆதரவு அமைப்பு, எப்படி கபூகாவால் பிரான்சில் மறைந்து வாழ முடிந்ததென்றும், அவருக்கு எப்படியான உதவிகள் கிடைத்திருக்கலாமென்றும் அறிவதற்கான சட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

“இவர்தான் எங்களுடைய கிளோஸ் பார்பி, எங்கள் அடோல்ஃப் ஈச்மன் (நாஜி போர்க்குற்றவாளிகள்)” என, பிரான்சில் இருந்து இயங்கும் இபுக்கு ஃப்ரான்ஸ் அமைப்பின் தலைவர் எத்தியேன் சான்சிமானா தெரிவித்தார்.

“26 வருடங்களாக அவர் எப்படி பிரான்சில் மறைந்து வாழ்ந்திருக்க முடியும்? இப்படி ஒரு வசதியான வாழ்வை வாழ்வதற்கு யார் உதவி செய்தார்கள்? நிச்சயம் அவரது உறவினர்களால் மட்டும் இது சாத்தியமாகியிருக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

பாரிசின் புறநகரான அஸ்னியே-சூர்-செய்ன் என்னுமிடத்தில் சனிக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையின்போது வேறொரு அடையாளத்தோடு வாழ்ந்துகொண்டிருந்த கபூகா கைதுசெய்யப்பட்டிருந்தார்.இவரது கைதுக்காக 5 மில்லியன் டாலர்கள் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் எப்படி பாரிசுக்குள் நுழைந்தார் என்பது மர்மமாக இருக்கிறது.

1994 இலிலிருந்து, கபூகா, ஜேர்மனி, பெல்ஜியம், கொங்கோ-கின்ஷாசா, கென்யா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வாழ்ந்திருக்கலாம் என பிரான்ஸ் நீதியமைச்சு அறிக்கையொன்று தெரிவிக்கிறது.

“ருவாண்டா படுகொலைகளின் சூத்திரதாரியான கபூகா, தனது சொந்த வானொலி நிலையங்களின் மூலம் அவரின் கீழ் இயங்கிய இண்டெர்ஹம்வெ ஆயுததாரிகளைத் தூண்டிப் படுகொலைகளை நிகழ்த்தியிருந்தார். ஒட்டுமொத்தமான படுகொலைகளுக்கும் இவர் தான் காரணம். இப்படுகொலைகளுக்காக அவர் 500,000 கொலைவாள்களை அவர் இறக்குமதி செய்திருந்தார். அவரில்லாது இப் படுகொலைகள் நிறைவேறியிருக்க முடியாது” என லண்டனைச் சேர்ந்த எஸ்.ஏ.ஓ.எஸ். பலகலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஃபில் கிரார்க் தெரிவித்துள்ளார். (அல்ஜசீரா)

Print Friendly, PDF & Email
Related:  வியட்நாம் | உயிரிழப்பு எதுவுமில்லாது முடித்துவைக்கப்பட்ட கோவிட் போர்