Columns

‘ராமர் பாலம்’: பேராயர் ரஞ்சித் பற்றவைத்த பெருநெருப்பு

“என்ன இந்த மனிசனுக்கு தேவையில்லாத வேலை. இந்த வீரவன்ச கோஷ்டியே வாயை மூடிக்கொண்டிருக்கு ஆனால் இந்தாள் பத்த வச்சுபோட்டுது” வடிவேகர் கடுப்போடு வந்து ஈருருளியை நிறுத்தினார்.

“ஏனண்ணை இப்ப என்ன நடந்து போச்செண்டு இப்பிடிக் குதிக்கிறியள்”

“அட கிருசு. வேற யாருமெண்டா பறட்டை அது இது எண்டு சொல்லியிருப்பன், சொன்னது பேராயராகப் போச்சு. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பாலம் போட்டால் இலங்கையின்ர இறையாண்மையும் சுதந்திரமும் இழக்கப்பட்டுவிடுமாம். அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் எண்டு சீனா இஅல்ங்கையைப் பிச்சுப் பிச்சு எடுக்கேக்கை வாயை மூடிக்கொண்டு இருந்த இந்த கார்டினல் இப்ப துள்ளிக் குதிக்கிறார்”

“அண்ணை. அந்தாள் பாவம். வச்சுக்கொண்டு வஞ்சகம் செய்யிற ஆளில்லை அவர். அவர் எப்பவும் இன்னொரு தரப்பின்ர வாயாகத் தான் இருக்கிறவர். இதில இந்தியாவைத் தான் நான் பிழை சொல்லுவன்”

“ஏன்? ராஜதந்திரமெண்டு வரேக்க இந்தியா எப்போதுமே ஒரு முட்டாள் எண்டுதான் சொல்லுவன். குறிப்பாக இந்த மோடி கூட்டம் ஆட்சியைப் பிடிச்சதில இருந்து அதுகளுக்கு ராம நாம ஜெபத்தைத் தவிர வேறொண்டும் தெரியாது. பாருங்க அவையின்ர ‘அயலார் முதல்’ கொள்கையை. இதுவரை அவை சாதிச்சதெல்லாம் அயலாரை எதிரிகளாக்குவது தான். கோதா பட்டினி போட்ட சிங்களவன் கையேந்திறதுக்கு முன்னமே அவசரப்பட்டு 5 பில்லியன் டொலர்களை அள்ளிக்குடுத்து அவங்களைக் காப்பாற்றி விட்டுது இந்தியா. இப்ப ரணில் ஓரளவு நிமித்திப் போட்டுது. இனி சிங்களவனுக்கு இந்தியா தேவையில்லை.”

“ஓம் கிருசு. அதுக்கும் மல்கம் ரஞ்சித் சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்?”

“எங்கட ஆக்கள் எப்பவும் சிங்களவனை மோட்டுச் சிங்களவன் எண்டு சொல்லுவினம். வரலாற்றில அதுக்கு ஒரு உதாரணமும் இல்லை வடிவேலர். முதல்ல நாங்க தெரிஞ்சு வைக்க வேண்டிய விசயம், சிங்களவனும் இந்தியன் தான். சைவக் காரரால அடிச்சு விரட்டப்பட்ட புத்த பிக்குகள் பிடிச்ச இடம் தான் இலங்கை. இந்த எப்பேற்பட்ட சோழனாலயும் வரண்ட யாழ்ப்பாணத்தை மட்டுமே தக்கவைக்க முடிஞ்சுது. என்.கியூ. டயஸ் எண்டொரு சிங்கள அரசியல்வாதி இருந்தவர் தெரியுமோ?”

“எனக்கென்னடா தெரியும் கிருசு. மித்திரன், முரசொலி, தினத்தந்தி, சுதந்திரன் எண்ட பத்திரிகையள் வளர்த்த பிள்ளைதானே நான். என்னட்டை இருந்து எதை எதிர்பார்க்கிறது?. சொல்லு”

“இந்த என்.கியூ.டயஸ் எண்டவன் பெரிய மாதா. ஒரு காலத்தில தென்னிலங்கை சிங்கள அரசியல்வாதியளுக்கு ஆலோசனை வழங்கின காய். உங்களுக்குத் தெரியுமோ இலங்கையின்ர நேவி முகாம்களில பெரும்பாலானவை வடக்கில தான் இருக்கு எண்டது?”

“உண்மையிலயடா கிருசு எனக்கு இது தெரிதெரியாது”

“கள்ளத்தோணியளை நிப்பாட்டிறதுக்கெண்டு அந்தாள் அப்பவே இந்த கடற்படை முகாம்களை நிறுவினது. கள்ளத்தோணியள் நிண்டுபோய்க் கனகாலம் ஆகியும் முகாம்கள் எங்கயும் போகேல்ல. புலியளைத் தோற்கடிச்சதில இந்த முகாம்களுக்கு பெரிய பங்கிருக்கு. டயஸ் அப்பவே புத்தியைப் பாவிச்சிருக்கு. அதுதான் உண்மையான ‘அயலார் முதல்’ கொள்கை. மாலைதீவைச் சீனாவிட்ட பறிகொடுத்ததுக்குப் பிறகு இந்தியாவுக்கு இலங்கையில ஒரு கண். அதுக்குத் தான் அவை ஜே.வி.பி.உள்ளிட்ட அனைத்துக் கட்சிக்காரங்களையும் தட்டு வைச்சு அழைக்கினம். பாவம் இந்தியா காலனித்துவ காலத்தில இருந்து ஒரே நெளிவு தான்”

“சரி கிருசு, வகுப்பெடுத்தது காணும் ரஞ்சித்தின்ர விசயத்துக்கு வா” வடிவேலர் அவசரப் படுத்தினார்.

“ஜனாதிபதி எலக்‌சன் வரப்போகுதெல்லோ. ரணில் பாவம் ஆதரவு கேட்டு இந்தியாவிட்டப் போயிருக்கு. அவங்கள் அங்க வைச்சு வகுப்பெடுத்திருக்கிறாங்கள். தென்கிழக்காசியாவில சனத்தொகை கூடின நாடென்றும் ‘குளோபல் சவுத்தில’ தாங்கதான் ‘அமெரிக்கா’ எண்டும் இந்தியா நினைக்குது. இலங்கை எப்பவும் தன்ர வாடிக்கையாளராக மட்டுமே இருக்கவேணுமென இந்தியா நினைக்குது. அதை உறுதியாக்கவேணுமெண்டா ‘ராமர் பாலத்தை’ திரும்பவும் போட வேணும்’. அதைத் தான் அது ரணிலிடம் சொல்லியிருக்கு. ரணில் அதை மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம இஞ்ச வந்து தன்னக் காப்பாத்தி வைச்சிருக்கிற ராஜபக்சக்களிட்ட சொல்லியிருக்கும், அதுகளுக்கு நேர இந்தியாவோட மோதப் பயம். அதுகள் பத்தவைச்சு ‘மதிப்புக்குரிய’ கர்தினாலிட்ட பந்தத்தைக் குடுத்திருக்கினம். இந்தாள் அதை ஒலிம்பிக் ரோச் எண்டு நினைச்சுக்கொண்டு ஓடுது”

“ஓ அப்பிடியெண்டு நீ நினைக்கிறாய். அதுக்கேன் இந்தாள்? வீரவன்ச, கம்மன்பில, நாணயக்கார எண்டு கொஞ்ச ராஜபக்ச வாலுகள் இருக்குத்தானே?”

“அவங்கள் முந்தின ஜே.வி.பி. யைப்போல வாழ்நாள் இந்திய எதிர்ப்பு வாதிகள். அரகலயவுக்குப் பிறகு சனம் இவங்களைக் கையைவிட்டிட்டுது. இப்ப ரஞ்சித் தன்ர புதிய மொந்தையில பழைய கள்ளைக் கொண்டு வருகிறார். நம்பத்தகுந்த மனிசன் எண்டபடியால சனம் கேக்கும். தேர்தல் நெருங்கியதும் பத்தையளுக்குப் பின்னால இருந்து வெட்டியான்கள் பந்தங்களோட வெளிக்கிடுவினம். அதுதான் அவங்களின்ர மாஸ்டர் பிளான்”

“என்னமோ நீதான் பிளானைப் போட்டுக் குடுத்த மாதிரி சவுண்ட் விடுற. அது சரி பாலம் போடுறத்தால தமிழனுக்குத் தானே நன்மை?”

“தெற்கு மானிலங்களை இணைக்கிற ஆறுகளின்ர தண்ணீர் வழங்கல் பிரச்சினையையே தீர்க்கேலாத இந்தியா இலங்கைக்கு மின்சாரம், எரிவாயு வழங்கலையும் குத்தகைக்கு எடுத்தா எந்த நேரமும் அதைப் பணயமாக வைச்சு இலங்கையை மிரட்டலாம். அதனால மல்கம் ரஞ்சித் சொல்லிற விசயத்தில உண்மை இருக்குதுதான்”

“அப்ப தமிழனுக்கு எண்டொரு தீர்வு?”

“”கிளிநொச்சித் தண்ணியை யாழ்ப்பாணத்துக்கு விடமாட்டன்” எண்டு சொல்லிற அரசியல்வாதிகள் முதல்ல தமக்குள்ள ஒரு தீர்வைக் கொண்டுவரட்டும். அதுக்குப்பிறகு இந்தியாவிட்டக் கேக்கலாம்”

“அப்ப ஏன் இந்தியாவை முட்டாள் எண்டு நீ சொன்னனி? “

“ஞாபகமிருக்கோ இந்தியா இலங்கைக்கு கொஞ்ச அம்புலன்ஸ் வண்டிகளைத் தானமாகக் கொடுத்தது?”

“ஓம் சொல்லு”

“அது இந்தியாவின்ர சதி எண்டும் அந்த அம்புலன்ஸ்களில ஏறிற நோயாளிகள் பிரேதமாகத்தான் இறங்குவினம் எண்டும் சிங்கள தொழிற்சங்கவாதிகளே கூக்குரலிட்டவங்கள். பிறகு கோவிட் காலத்தில தான் அந்த அம்புலன்ஸ்களின்ர அருமை தெரிஞ்சுது, அப்பிடியிருந்தும் தமிழரின்ர கதறல்களை உதாசீனம் செய்துபோட்டு அவங்களுக்குத் தான் அள்ளிக் கொட்டுது. இப்பிடியான சென்சிட்டிவ் ஆன விசயத்தை எலக்சன் நேரத்தில மோடி வந்து அறிவிக்கப் போறாராம். இதை அவங்கள் எடுத்துச் சுழற்றப் போறாங்கள். கொஞ்சம் இருந்து பாருங்க அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தியாவுக்கு எதிராக ஏதோ ஒரு வகையில கத்திக் குழறப்போறாங்கள்”

“அப்ப நான் பேசாம இந்த ‘பிரகடனக் காரரோட’ ஒட்ட வேண்டியது தான். அவங்கள் உள்ளூருக்குள்ளதானே பாலம் போடப்போறதெண்டு சொல்லுறாங்கள்”

திருப்தியான பதிலைக் கேட்டவுடன் வடிவேலர் மீண்டும் தன் வாகனத்தில் ஏறிக்கொண்டார்.