ராஜ ராஜ சோழன் விவகாரம் | பா.ரஞ்சித்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
ராஜ ராஜ சோழன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தாரென்று இந்து மக்கள் கட்சியால், இயக்குனர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைப் பிரிவு தள்ளுபடி செய்திருக்கிறது.

2019 இல் கும்பகோணத்துக்கு அருகேயுள்ள திருப்பனந்தாள் என்னுமிடத்தில் ‘நீலப் புலிகள் இயக்கம்’ என்ற அமைப்பின் ஆரம்ப நிகழ்வில் பேசும்போது ராஜ ராஜ சோழன் மீது பல சாதி மக்களும் புகழ் பாடுவதை விமர்சித்த இயக்குனர் பா.ரஞ்சித், ராஜ ராஜ சோழனின் ஆட்சி தலித் மக்களுக்கு ஒரு இருண்ட ஆட்சி எனவும் பல சாதி மக்களிடமிருந்தும் நிலங்களைப் பறித்து மக்களை ஒடுக்கும் நிகழ்வு சோழன் காலத்தில் ஆரம்பித்தது எனவும் கூறியிருந்தார்.
இதனை எதிர்த்து இந்து மக்கள் கட்சியின் தஞ்சாவூர் செயலாளர் கா. பாலா அவர்கள் பதிந்திருந்த வழக்கின் பிரகாரம் ஜூன் 11, 2019 இல் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் பொலிசார் வழக்குத் தொடுத்திருந்தனர். இதன் விளைவாக இயக்குனர் ரஞ்சித் தொடுத்திருந்த பிணை மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், வெள்ளியன்று, ரஞ்சித் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறார்.
“பல வகையான வரலாற்று நூல்களில் கூறப்பட்டிருந்த விடயங்களையே இயக்குனர் ரஞ்சித்தும் தெரிவித்திருந்தார். ஆனால் அவற்றைச் சமூக ஊடகங்கள் திரித்துக் கூறிவிட்டன” என ரஞ்சித்தின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். “நான் கெட்ட நோக்கத்தோடு எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவுமில்லை. எனது கருத்துக்கள் எந்தவொரு சமூகத்துக்கு எதிராகவும் அமையவில்லை” என ரஞ்சித் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
‘நீலப் புலிகள் இயக்கத்தின்’ நிறுவனர் உமார் ஃபரூக் எழுதிய புத்தகத்தில் நிலமில்லாத மக்கள் பற்றியும், குறிப்பாக காவேரி டெல்ட்டா பகுதியிலுள்ள நிலமற்ற மக்கள் பற்றியும் எழுதியிருந்தார். அதே வேளை வேறு பலரும் இவ்விடயம் பற்றி எழுதியுள்ளனர். இக் கருத்துக்களையே இயக்குனர் ரஞ்சித்தும் தெரிவிதிருந்ததாகவும் அவை எச்சமூகத்தையும் குறிவைத்துச் சொல்லப்படவில்லை எனவும் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.