ராஜீவ் கொலை | குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகலாம்?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுச் சிறையிலிருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இன்று (ஜூன் 10) டெல்ஹிக்குப் பயணமாகிறார். அங்கு அவர் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இது விடயமாகப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சஞ்சய் தத் விடுதலையைத் தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. தமிழக அரசும் இது தொடர்பில் தன் விருப்பை மத்திய அரசுக்குத் தெரிவித்திருந்தது. தேர்தலின் பெறுபேறுகள் பா.ஜ.க. வுக்குச் சாதகமாக இல்லாத நிலையில் தமிழக மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்றுக்கொள்ள இவர்களின் விடுதலை உதவி புரியலாம் என்ற எண்ணத்தில் இம்முயற்சி எடுக்கப்படுவதாகவும் இருக்கலாம்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தமது தூக்குத் தண்டனையை நீக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய விண்ணப்பத்திற்கு உரிய காலத்தில் முடிவு எடுக்கப்படாததால் 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்திருந்தது. பின்னர் 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த 7 பேரையும் விடுவிக்கத் தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
அதே வேளை, மத்திய அரசின் ஆயுதச் சட்டத்தின் பிரகாரம் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலிருந்த சஞ்சய் தத் தின் தண்டனையைக் குறைத்து அவரை முன்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு எனக் கூறப்பட்ட போதிலும் மராட்டிய மானில அரசு மத்திய அரசின் அனுமதி எதுவும் இல்லாமலேயே அவரை விடுதலை செய்தது. இது நடந்து மூன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன ஆனால் தமிழகத்தின் 7 பேர் விவகாரத்தில் மட்டும் மத்திய அரசு எதுவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் இவ் விடயத்தில் மத்திய அரசு அநீதியாக நடந்துகொள்கிறது எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் உள்ல 7 தமிழர்களின் விடுதலை தொடர்பாக ஆளுனர் விரைவில் நல்ல முடிவொன்றை எடுப்பார் எனக் கூறியிருந்தார்.
தமிழக ஆளுனர் மோடி, அமித்ஷா சந்திப்பு இந்த 7 தமிழர்கள்இன் விடுதலையைப் பெற்றுத் தரும் எனத் தமிழக அரசியல் கட்சிகள் நம்புகின்றன.