India

ராஜீவ் காந்தி கொலை: விடுதலையான சாந்தன் சென்னை மருத்துவமனையில் மரணம்!

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளில் ஒருவராகிய சாந்தன் என அழைக்கபட்ட சுதேந்திரராஜா இன்று (பெப் 28) சுகவீனம் காரணமாக சென்னை மருத்துவ மனையில் காலமானார். நவம்பர் 2022 இல் உச்ச நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட 56 வயதுடைய சாந்தன் தமிழ்நாட்டின் திருச்சி மத்திய சிறையிலுள்ள சிறப்பு முகாமில் தங்கியிருந்தார்.

சாந்தன்

பெப். 23 அன்று இவரை இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்கான கட்டளையை பிறதேசத்தவர் பதிவுக்கான பிரதேச அலுவலகம் பிறப்பித்திருந்தது எனவும் இரண்டு நாட்களில் அவர் நாடு கடத்தப்படுவார் எனக் கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஈரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு சிறப்பு முகாம் மருத்துவ வசதிகளை வழங்கவில்லை என ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்ததைத் தொடர்ந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று (பெப் 28) காலை 7:50 மணிக்கு மாரடைப்பினால் மரணமானார்.

இறக்கும்போது அவரது சகோதரர்கள் அவருடன் இருந்தார்கள் எனவும் அவருடைய உடல் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்படுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது எனவும் அவரது சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்திருக்கிறார்.

தீவிரமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தன்னை மருத்துவ மனைக்கு மாற்றும்படி சிறப்பு முகாம் நிர்வாகத்தைக் கேட்டிருந்த போதும் அவர்கள் அதை நிறைவேற்றாத காரணத்தால் ஜனவரியில் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு முறைப்பட்டு செய்திருந்தார். சிறப்பு முகாமைவிட சிறையிலுள்ள ஒரு அறை மிகவும் நல்லது எனக்கூறிய அவர் தனது தாயார் இலங்கையில் கடுமையான சுகவீனமுற்று உள்ளதால் தன்னை உடனடியாக இலங்கைக்கு நாடுகடத்திவிடும்படி உயர்நீதி மன்றத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். சிறப்பு முகாமின் நிலைமைகளைக் கூறி அதற்கெதிராக தமிழ் மக்கள் குரல்களை எழுப்பவேண்டுமெனவும் கோரியிருந்தார்.

“ஈழத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் எங்களுக்காகக் குரல்கொடுக்கும்படி இறைஞ்சுகிறோம். உங்கள் மெளனம் எங்களை அடக்க முனைபவர்களுக்கு தவறான செய்திகளைக் கொடுக்கிறது. 32 வருடங்களாக நான் எனது தாயாரைப் பார்க்கவில்லை. தந்தையாரின் இறுதிக்கணங்களில் அவரோடு இருக்க முடியவில்லையே என்பது என்னை வாட்டுகிறது. எனது தாயாருடன் அவரது இறுதிக்காலங்களில் இருக்கவேண்டுமென நான் விரும்புவது தவறெனில் நீங்கள் எனக்கு ஆதரவளிக்கத் தேவையில்லை” என அவர் சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

ரஜீவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறை சென்றவர்களில் நால்வரான சாந்தன், றொபேர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகியதும் திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். (படம்: தி இந்து)