IndiaNews

ராஜீவ் காந்தி கொலை: நளினியின் தற்காலிக விடுவிப்பு 3 வாரங்களால் நீடிப்பு

சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
அவருடைய மகள் ஹரிதாவின் திருமணத்திற் கலந்துகொள்வதற்காக ஜூலை 25 லண்டன் சென்றிருந்தார்

ஆகஸ்ட் 22, 2019

ராஜீவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்ட்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த நளினி சிறிஹரன், லண்டனிலுள்ள அவருடைய மகளின் திருமணத்தில் கலந்துகொள்வதற்கென சென்ற மாதம் ஒரு மாத தற்காலிக விடுப்பில் (parole) விடுவிக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவருடைய தற்காலிக விடுப்பை மேலும் 3 வாரங்களுக்கு நீடிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது என பிடிஐ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. அவருடைய தற்காலிக விடுப்பு ஆகஸ்ட் 25 இல் காலாவதியாகிறது.

இந்தியாவின் அதி நீண்டகாலச் சிறைக்கைதியான நளினி, ராஜீவ் காந்தியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவரெனச் சந்தேகிக்கப்பட்டு, 28 வருடங்களுக்கு முன்னர் ஜுன் 15, 1991 அன்று கைதாகியிருந்தார்.

இதற்கு முன்னர் சில தடவைகள் சகோதரரின் திருமணம், தந்தையின் மரணம் போன்ற தேவைகளுக்காக அவசரகால விடுப்புகளில் (சில மணித்தியாலங்கள்) சென்றிருந்தாலும் இப்பொழுதுதான் முதல் தடவையாக சாதாரண தற்காலிக விடுப்பில் செல்ல (ordinary parole) அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தடவை லண்டனில் இருக்கும் அவரது மகளின் திருமணத்தில் கலந்துகொள்வதெற்கென தற்காலிக விடுப்பு வழங்கப்பட்டது. ந்ளினி சிறையிலிருக்கும்போது மகள் பிறந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுப்பின் போது அவர் அரசியல்வாதிகளைச் சந்திக்கவோ, பொது அறிக்கைகளை விடுவதற்கோ, ஊடகங்களுக்கு செவ்விகள் வழங்குவதற்கோ தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

1999ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நளினியின் தூக்குத் தண்டனையை உறுதிசெய்திருந்தாலும், 2000 ம் ஆண்டு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.