IndiaNews & Analysis

ராஜிவ் கொலை சந்தேகநபர்கள் 7 பேரையும் விடுதலை செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் மாநில மத்திய அரசுகளுக்கு உத்தரவு

ஆளுனரின் அனுமதிக்குக் காத்திருக்கத் தேவையில்லை என நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவளிகள் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் 7 பேரையும் ஆளுனரின் அனுமதிக்குக் காத்திராமல் உடனேயே விடுதலை செய்யும்படி சென்னை உயர்நீதி மன்றம் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

இக் கொலையில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட நளினி சிறிகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இக் கட்டளையை விடுத்துள்ளனர். ஆளுனரின் அனுமதியில்லாது, இவ்வேழுபேரையும் விடுதலைசெய்யும் ஆணையை, மாநில அரசு பிறப்பிக்கவேண்டும் என்பதே நளினியின் விண்ணப்பமாகும். தலைமை நீதிபதி சஞ்சிப் பனர்ஜி மற்றும் நீதியரசர் பி.டி. அவ்டிகேசவலு ஆகியோர் நேற்று (13) இவ் வழக்கை விசாரித்திருந்தார்கள். இக் கட்டளைக்கு மாநில, மத்திய அரசுகள் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமெனவும் அத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நளினி, முருகன், சாந்தன்,பேரறிவாளன்,ஜயகுமார்,ரவிச்சந்திரன், றொபேர்ட் பயஸ் ஆகிய ஏழு பேரே ரஜிவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசம் அநுபவிப்பவர்களாவர்.

இந்த 7 கொலைக்குற்றவாளிகளையும் விடுதலை செய்வதை யோசிக்கும்படி தமிழ்நாடு ஆளுனர் பன்வர்லால் புரோஹித்துக்கு, செப்டம்பர் 9, 2018 இல், தமிழ்நாடு அரசின் முந்தைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிபார்சு செய்திருந்தார். ஆனாலும் அதன் மீது ஆளுனர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும், தம்மை விடுதலை செய்யக் கட்டளையிடும்படி நளினியும் மற்றயோரும் தொடர்ந்து பல்வேறு விண்ணப்பங்களையும் ஹேர்பியஸ் கோர்ப்பஸ் மனுக்களையும் உயர்நீதிமன்றத்தில் செய்திருந்தனர். அப்படியிருந்தும் ஆளுனருக்குக் கட்டளையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தற்போது நளினி செய்த விண்ணப்பத்தில், மாநில அர்சின் சிபார்சின்மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்காதமை அரசியலமைப்புக்கு முரணானது எனவும் மாநில அரசின் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு ஆளுனருக்கு உண்டு அதைவிட அவருக்கு வேறு வழியேதும் இல்லை எனவும், அதனால் அவரது ஆணைக்குக் காத்திராமல் மாநில அரசு தங்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனவும் கேட்டிருந்தார்.

அதே வேளை இந்திய அரசியலமைப்பின் 161 வது கட்டளையின் பிரகாரம், 10 வருடங்கள் அல்லது அதற்கு குறைவாக சிறைத்தண்டனை அனுபவித்த 3,800 ஆயுள் கைதிகள் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் நளினி தனது விண்ணப்பத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.(தி நியூஸ் மிநிட்)