ராஜிவ் கொலை | அரசாங்கத்தின் சம்மதமின்றி விடுதலைசெய்யும்படி நளினி நீதிமன்றத்தில் மனு தாக்கல்


ஆளுனர் நடவடிக்கை எடுக்காவிட்டால் அது நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கருதப்படும்

ராஜிவ் காந்தி கொலையில் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைவாசம் அனுபவித்துவரும் நளினி சிறிதரன், ராஜிவ் கொலையில் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்ட அனைவரையும் அரசாங்கத்தின் அனுமதியின்றித் தன்விடுதலைசெய்யும்படி மீண்டுமொரு தடவவை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு சமர்ப்பித்துள்ளார்.

ராஜிவ் காந்தி கொலைக் கைதிகள்

இவர்களை விடுதலை செய்ய உத்தரவிடும்படி தமிழ்நாடு ஆளுனரைக் கோரி, அ.இ.அ.தி.மு.க. அரசும், தி.மு.க.அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தன. அப்படியிருந்தும், முந்நாள் ஆளுனர் பன்வரிலால் புரோஹித் மற்றும் தற்போதைய ஆளுனர் ஆர்.என்.ரவி இருவருமே தமிழ்நாடு அரசாங்கங்களின் தீர்மானத்தை அனுசரித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆளுனர்களின் இந்நடவடிக்கை இந்திய அரசியலமைப்பின் 161 ஆவது கட்டளைக்கு முரணானது என்ற கோதாவில், தமிழ்நாடு மாநில அரசின் பரிந்துரைப்புக்கமைய, மத்திய அரசின் சம்மதமில்லாமலேயே, தன்னையும் இதர கைதிகளையும் விடுதலை செய்யும்படி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டுமொரு தடவை மனு சமர்ப்பித்துள்ளார்.

மே 1991 இல் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் சிறிபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் கூட்டமொன்றில் வைத்து கொல்லப்பட்டிருந்தார். இக்கொலைக்குக் காரணமானவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, முருகன், சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ஜெயகுமார், றொபெர்ட் பயஸ் மற்றும் நளினி ஆகிய ஏழு பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரையும் விடுதலை செய்யும்படி செப்டம்பர் 2018 இல் முன்னாள் தமிழக அரசு அப்போதைய ஆளுனர் பன்வரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரைத்திருந்தது. பின்னர் 2021 இல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசும் இவர்களை விடுதலை செய்ய்யும்படி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. ஆனாலும் இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஆளுனர் எஅந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நளினியால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை நேற்று (வெள்ளி, அக். 02), முதன்மை நீதிபதி சஞ்சிப் பனர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதன் பலனாக அக்டோபர் 12 ம் திகதிக்குள் சமபந்தப்பட்ட அதிகாரிகள் இக் கைதிகள் விடயத்தில் தமது முடிவைத் தெரிவிக்கவேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

ஆளுனர் இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் அது நீதிமன்றத்தை அவமதித்த குற்றமாகக் கருதப்படும். இதன் பெறுபேறாக மத்திய அரசின் சம்மதத்தை எதிர்பாராமல், சென்னை உயர்நீதிமன்றம் இக் கைதிகளை விடுதலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.