குறுஞ் செய்தி

குறுஞ் செய்திகள் 29-11-2022

ராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற ஆசனத்தை இழக்கலாம்?

இலங்கை: அமைச்சர் டயானா கமகெயின் இலங்கை குடியுரிமை பற்றிய சந்தேகத்தைத் தெளிவுபடுத்தும் நொக்குடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 22 ஆவது திருத்தத்தின் பிரகாரம் இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதிகளாக அங்கம் வகிக்க முடியாது. அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய குடியுரிமையையும் வைத்திருக்கிறார் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலின் சந்தேகநபர் வெட்டிக் கொலை

இலங்கை: உயிர்த்த ஞாயிறு குண்டுத்தக்குதல்களுடன் தொடர்புடையவரெனச் சந்தேகத்தில் கைதாகிப் பின்னர் ஆதாரங்கள் இல்லையென்ற காரணத்தால் விடுதலை செய்யப்பட்ட 38 வயதுடைய முஹம்மது பதியுர்தீன் முஹம்மது ஹர்ணாஸ் என்பவர் மட்டக்குளியில் வைத்து நேற்று காலை (28) வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார். ஒரு வாகனத்தில் வந்த இருவர் நேற்று காலை 10:00 மணிக்கு, அவரை வெட்டிவிட்டு அதே வாகனத்தில் தப்பியோடிவிட்டதாகவும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு காலமாகி விட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அப்பிள் நிறுவனத்துடன் பொருதும் இலான் மஸ்க்

அமெரிக்கா: ருவிட்டர் செய்தித் தளம் சுயாதீன கருத்துச் சுதந்திரத்துக்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டுமென்று கருதிய அதன் புதிய அதிபர் இலான் மஸ்க் அத் தளத்தில் பதிவிடுபவர்களுக்கு கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுத்திருந்தார். இதனால் இன, மத மற்றும் பல்வேறு பேதங்களைக் காட்டும் துவேசக் கருத்துக்களைக் கொண்ட பதிவுகள் பல மடங்கு அதிகமாயின. இதனால் ருவிட்டரில் விளம்பரம் செய்யும் பல நிறுவனங்கள் தமது விளம்பரங்களை நிறுத்திக்கொண்டன. ருவிட்டர் தளத்தின் செயலியை (app) விநியோகம் செய்யும் அப்பிள் மற்றும் கூகிள் நிறுவனங்கள் அவ்விநியோகத்தை நிறுத்தப்போவதாக தற்போது எச்சரித்துள்ளன.