Spread the love

சிவதாசன்

கடவுள்கள் வித்தியாசமாக யோசிக்கப் பழகிவிட்டார்கள். அவர்கள் இப்போது வானத்தில் இல்லை. இலங்கையில் நிற்கிறார்கள்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல்களில் மக்கள் ராஜபக்சக்களுக்கு வழங்கிய ஆட்சிப் பொறுப்பை நேரில் பார்வையிட அவர்கள் வந்திருக்கிறார்கள்.

வெற்றி அசாதாராணமானது. தீர்க்கமானது. மக்களால் மனமுவந்து கொடுக்கப்பட்டது. சந்தேகமே இல்லை.

59.09 வீதமான இலங்கையர்கள் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்களித்து 145 பாராளுமன்ற ஆசனங்களை அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். இது கோதாபய ராஜபக்சவை மட்டும் நம்பி மக்கள் வழங்கியிருக்கும் ஆணை. இவர்களில் முன்நாட் கொள்ளையர்களும், கொலைகாரர்களும் வருகிறார்கள். அவர்களை மன்னித்துத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். இது அசாதாரணமானது.

2009 போருக்குப் பின்னர் மஹிந்தருக்கு இப்படியான ஆணையொன்று முன்னரும் வழங்கப்பட்டிருந்தது. இரண்டு தவணைகளில் அவர்களது ஊழல் புற்றெடுத்த ஆட்சி தூக்கியெறியப்பட்டது. அதற்குப் பின் வந்த ரணில் – சிறிசேன கூட்டு அதைவிட மோசம். எனவே மீண்டும் ஒரு தடவை இன்னுமொரு ராஜபக்சவை நம்பி அதைக் கொடுத்திருக்கிறார்கள்.

1948 இலிருந்து நாட்டில் கம்பீரமாக நடந்துவந்த யானையின் கட்சிக்கு ஒரு ஆசனத்தைக்கூடத் தர மக்கள் மறுத்துவிட்டார்கள். 2015 தேர்தலில் 500,000 இற்கும் மேலான வாக்குகளை எடுத்துச் சாதனை புரிந்த ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். இது அசாதாரணமானது மட்டுமல்ல திட்டமிட்ட பழி வாங்கல்.1918 உள்ளூராட்சித் தேர்தல்கள், 2019 ஜனாதிபதி தேர்தல், 2020 பாராளுமன்ரத் தேர்தல்கள் – மூன்றிலும் மக்கள் ராஜபக்ச தரப்பையே நம்பி வாக்களித்திருக்கிறார்கள். எனவே தான் இவ் வெற்றி அசாதாரணமானது, தொடர்ச்சியானது, தீர்க்கமானது. மக்கள் மட்டுமல்ல வேட்பாளரும் அவர்கள் பின்னால் ஓடுகிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவின் 42 வருட அரசியல் வாழ்வு முடிவுக்கு வருகிறது. விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவைப் பிரித்ததும், 19 வது அரசியல் யாப்புத் திருத்தமுமே அவரது சாதனைகள். எவ்வளவுதான் கடும்போக்காளராக இருந்தாலும், போரை முடித்துவைத்த கோதாபயவே எமக்குத் தேவை என சிங்கள மக்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். எனவே இன்னும் 10 வருடங்களுக்கு இதுவே தான் ஆட்சி. தமிழர்க்கு வேறு தேர்வே இல்லை.

இவ்வெற்றிக்கான ஸ்கிறிப்டின் பின்னால் பசில் ராஜபக்ச இருப்பதாகச் சொல்கிறார்கள். அவரது அணுகுமுறை கிராமங்களைச் சார்ந்தது. கிராமிய மக்களே தமது பலம் என்பதை அவர்கள் பரீட்சித்து நிரூபித்தது உள்ளூராட்சித் தேர்தல்கள்.

நமது அரசியல்வாதிகள் செய்ததைப் போல பெருங்குரலிட்டு (rhetoric) அவர்கள் எதையும் செய்யவில்லை. அமைதியாக குடிமைச் சமூகங்கள், புத்த சங்கங்கள் மூலம், சிங்கள மொழி, கலாச்சாரம், மதம் ஆகியவற்றினால் சுவையூட்டப்பட்ட, மணமூட்டப்பட்ட அரசியலை அவர்கள் முன்னெடுத்தார்கள். பொருளாதாரம், நகர அபிவிருத்தி எல்லாம் நகர வாசிகளுக்கு மட்டுமே. அவர்களின் வாக்கு வங்கி சொற்பமானது எனவே அதை ஐ.தே.கட்சியிடமும் ஜே.வி.பி.யிடமும் விட்டுவிட்டு கிராம மக்களுடன் அவர்கள் பொழுதைச் செலவழித்தார்கள். இதனால் உருவான சிங்கள தேசியம் பலமாக வளர்ந்தது. கோதாபயவைச் சுற்றி அது படர்ந்தது.

இத் திட்டமிடல், செயற்பாடுகள் அனைத்தும் வெளியில் தெரியாமலேயே (sub terrain) வளர்க்கப்பட்டதால், மற்றவர்களின் கவனத்தை அது ஈர்க்கவில்லை. அவ்வப்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், புலிகள் மீளுருவாக்கம் பெறுதல், இந்தியாவின் போதை வஸ்து, ஐசிஸ், தமிழ்ப் புலம் பெயர்ந்தோர் என்று அவர்களுக்கு இலவச உரம் கிடைத்துக்கொண்டே இருந்தது.

சுதந்திரம் கிடைத்தபோது நாட்டை நிர்வகித்த தமிழர்கள் இப்போது ஓய்வு பெற்றுவிட்டனர் அல்லது கட்டமைக்கப்பட்ட முறையில் மாற்றீடு செய்யப்பட்டுவிட்டனர். போரினால் அழிக்கப்பட்டவர்கள் போக, எஞ்சியிருந்தவர் புலம் பெயர்ந்துவிட்டனர். சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் இனிமேல் தமிழர்கள் வெறும் நுகர்வோர் மட்டுமே.

ரணில் விக்கிரமசிங்க போன்றோரின் ஆட்சி நகர்வாசிகளின் சுகபோக வாழ்வைச் சுற்றியிருந்ததும், அவரின் மிதவாத அரசில் “ஆற்றில் போனதை அண்ணர்களும் தம்பிகளும் அள்ளிக்கொண்டு போக” கோதாபய பிராண்ட் சிங்கள தேசியம் செழித்துச் சடைத்தது. 2019 ஜனாதிபதி தேர்தல் திறந்துவிட்ட படலையால் இப்போது பாராளுமன்றம் 145 பேருடன் புகுந்திருக்கிறது. திறந்த படலையால் ஐ.தே.கட்சி, சமாகி ஜன பலவேகய கட்சிகள் தெருப்பிச்சைக்காரராக உள்ளே நுழையக் காத்திருக்கிறார்கள் என்பது ராஜபக்ச ராச்சியத்தின் பலத்தையும், செழுமையையும் காட்டுகிறது.

சீனா என்ற பெரியண்ணர் இருக்குமட்டும், ராஜபக்ச ராச்சியத்தை அசைக்கமுடிமென்று நான் நினைக்கவில்லை.தமிழர் நிலை

தமிழர் எதிர்காலம் இரண்டு காரணிகளால் தீர்மானிக்கப்படும். ஒன்று: சிங்களத் தேசியம் தமிழ் மக்களுக்கு ‘ஏதாவது செய்யவேண்டுமென்ற’ மனமாற்றத்துக்குட்பட வேண்டும். இரண்டு: பூகோள அரசியல் காய்நகர்த்தல்களினால் சர்வதேச சக்திகள் இலங்கை மீது நெருக்குதலை அதிகரிப்பதன் மூலம் ‘ஏதாவது’ கிடைக்கச் செய்வது. கோதாவின் ஆட்சியில் இது சாத்தியமற்றது. எனவே தற்போதைக்குத் தமிழரிடம் இருப்பது முதலாவது தேர்வு தான்.

ஜனநாயக முறைமையில், பெரும்பான்மையினர் விரும்பாமல் சிறுபான்மையினருக்கு எதுவும் கிடைக்காது என்பதை இத் தேர்தல் மீண்டுமொரு தடவை நிறுவியிருக்கிறது. எனவே பெரும்பான்மை இணங்கக்கூடிய உள்ளகப் பொறிமுறையொன்றை தமிழர் தரப்பு உருவாக்க முயற்சிக்க வேண்டும். தமிழர் சிங்களவருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை நிரூபிப்பது அதன் முதல் படி. இந்த நிலையில் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் “நீங்கள் இதைத் தந்தேயாக வேண்டும்” என்ற பிடிவாதம் ராஜபக்ச ஆட்சியில் சரிவரப் போவதில்லை. இணக்க அணுகுமுறையொன்றே அதற்குச் சரி

இந்தத் தேர்தலில் அதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்கான அடித்தளங்கள் போடப்பட்டுள்ளன . சிங்களத் தேசியக் கட்சிகளில் கேட்ட தமிழ் வேட்பாளர்கள் மற்றும் பங்காளிக் கட்சிகளில் கேட்ட தமிழர்கள் 5 பேர் தெரிவாகியிருப்பது சிங்கள மக்களுக்கு ஒரு செதியைக் கொண்டு வந்திருக்கிறது. சிங்கள மக்கள் தமிழர் குறித்து அச்சம் கொள்லத் தேவையில்லை என்பதே அது. ஏற்கெனவே பிள்ளையான், கருணா, டக்ளஸ் போன்றோர் சிங்களத் தரப்போடு பணியாற்றியிருந்தும், “அவர்கள் தமிழர்களின் பிரதிநிதிகள் அல்லர், எமக்கே அந்த அந்தஸ்து உள்ளது” எனத் தமிழர் தேசியக்கூட்டமைப்பு உரத்துக் கூவி வந்தது. அதில் உண்மையும் இருந்தது. எனவே இந்த மூன்று நாயன்மார்களாலும் பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை.

இந்தத் தேர்தலின் பின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ‘ஏகப் பிரதிந்தித்துவத்தை’ இழந்துவிட்டது. தமிழ் மக்களைப் பிரித்தாளலாம் என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது ராஜபக்சக்களுக்குக் குதூகலம் தரும் ஒரு செய்தி. இப்போது பல மடங்களிலிருந்து பல நாயன்மார்கள் செல்கிறார்கள். ராஜபக்சவின் ‘ஏக்கிய ராஜ்ய’ கனவு இப்போது பலித்திருக்கிறது. கோதாவின் நமுட்டுச் சிரிப்பு ஒன்றே இப்போதைக்கு அதற்காகத் தரப்படும் நன்றி.

2009 இல் போர் முடிந்த கையோடு, மஹிந்தருக்கு அருமையான தொரு சந்தர்ப்பம் கிடைத்தது. “இத்தனை உயிர்களின் அழிவிற்காகவும் நான் வருந்துகிறேன். உங்கள் வலி எனக்குப் புரிகிறது. தமிழர்களுக்கு உரிய நியாயமான தீர்வைத் தருகிறேன்” எனத் துணிச்சலோடு அதை வழங்கியிருந்தால், இன்றைக்கு அவர் உலகளாவிய ஒரு மகா மனிதர் (statesman) ஆகவும், நிரந்தர அமைதியையும் சமாதாதானத்தையும் கொண்டுவந்த நாட்டின் தந்தை எனவும் புகழப்பட்டிருப்பார். போரை முடித்துவைப்பதற்கு உலக உதவியைப் பெற்றதற்கான பிரதியுபகாரம் அதுவேதான். சிங்கள மக்களும் அதை ஏற்றுக்கொண்டிருந்திருப்பார்கள். அது நடைபெறவில்லை.2020 தேர்தல் கோதாபயவுக்கு அப்ப்டியொரு சந்தர்ப்பத்தை மீண்டும் வழங்கியிருக்கிறது. பிரதான (சிங்கள) கட்சிகளின் கீழும், பங்காளிக் கட்சிகளின் கீழும் உறுப்பினர்களைத் தெரிந்து தமிழ் மக்கள் அனுப்பியிருக்கிறார்கள். சமாதானத்துக்கான ஒரு ஒலிவ் கொத்தை அவர்கள் நீட்டியிருக்கிறார்கள். சிங்கள மக்களின் ஏகோபித்த நம்பிக்கை அவருக்கு பலமான கவச குண்டலத்தையும் வழங்கியிருக்கிறது. கொடுப்பதற்கு மனமிருந்தால் அவர் கொடுக்கலாம். The ball is in his court.

மாறாக, அவர் இன்னும் மஹாவம்ச மனநிலையுடனும், துட்ட கெமுனுவின் கனவுகளுடனும் இருப்பாராயின் தமிழர் இன்னுமொரு மீட்பருக்காய்ப் பல வருடங்கள் காத்திருக்க வேண்டி வரும். அவர் தமிழராயிருக்கவேண்டுமென்று கட்டாயமில்லை.

தமிழர்கள் தரப்பில் சுமார் 15 பேர் பாராளுமன்றம் போகிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக எதையும் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் உதிரிகளாகத் தமது பதவிகளைக் காப்பாற்றுவற்காகவென்று இறைக்கும் நீர் நெல்லுக்கும் புல்லுக்கும் போகலாம். ஒரு குடையின் கீழ் தமிழ் மக்கள் இவர்களை அனுப்பாமைக்கான காரணங்கள் பல. ஆனால் அவற்றில் ராஜதந்திரம் ஒன்று மட்டும் இல்லை என்பது தெளிவு. த.தே.கூட்டமைப்புக்கு ஒரு பாடம் புகட்டப்பட்டிருக்கிறது. அதனால் தமிழர் எதிர்காலம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்பதுதான் அவர்களது எண்ணமாக இருப்பின் ராஜபக்சக்களின் கணிப்பும், செயற்பாடுகளும் சரியென்றே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

மஹிந்த ராஜபக்ச ராச்சியம், அரசர் கோதாபயரின் ஆசீர்வாதங்களுடன், முதலமைச்சர் மகிந்தரின் கீழ் ஆவணி 20இல் வரும் சுபமுகூர்த்தமொன்றில் கூடுமென அரசர் கோதாபயர் தண்டோரா போட்டிருக்கிறார். தலைநகரம் களைகட்டுகிறது. மக்கள் ஆரவாரப்படுகிறார்கள். பரதேசங்களிலிருந்து மந்திரி பிரதானிகள் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்வரிசை ஆசனங்கள் தமிழர் சிலருக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடவுளர்கள் முன்வரிசையில் காத்திருக்கிறார்கள். தீண்டாமையை அவர்கள் இன்னமும் கைவிடவில்லை.

சுபம்.

Print Friendly, PDF & Email