News & AnalysisSri Lankaமாயமான்

ராஜபக்ச ராச்சியத்தில் உடைவு? – பசில் ராஜபக்ச பாராளுமன்றம் வருவது மகிந்த, கோதாபயவுக்கு விருப்பமில்லை?

தென்னிலங்கை அரசியல் – ஒரு ஆய்வு

சீன-அமெரிக்க குளிர் யுத்தத்தின் வெளிப்பாடா?

மாயமான்

கடந்த சில வாரங்களாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் பெரிதும் பேசப்பட்ட பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற வருகை தற்போது பலவகையான தடைகளையும் சந்தித்து வருகிறது. இத்தடைகளில் முன்னணியில் இருப்பது அவரது சகோதரர்கள் மஹிந்தவும், கோதாபயவும் எனப் பின்வீதிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பலவகையான பொருளாதாரச் சிக்கல்கள், நடைமுறைக்கு ஒவ்வாத திட்டங்கள் அமுல்படுத்தல், நாட்டின் வளங்கள் சுரண்டப்படுதல், பதுக்கல் வியாபாரிகள் அமைச்சர்களின் உதவியுடன் அன்றாட மக்களின் வயிற்றிலடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது, அதிகாரத்துக்கு நெருக்கமானவர்களும் வசதி படைத்தவர்களும் தடுப்பூசிகளை முதலில் போட்டுக்கொள்வது, சீன நிறுவனங்கள் அரச திணைக்களங்களின் அனுமதி பெறாமலேயே தமது நடவடிக்கைகளை மேற்கொள்வது எனப் பல முனைத் தாக்குதல்களினால் தாக்கப்படும் மக்களை எதிர்கொள்ள முடியாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு தெரிய வேண்டிய நிலை.

ஜநாதிபதி ராஜபக்சவைப் பொறுத்தவரையில் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் மனநிலையோ விவேகமோ இல்லாதவர் என்பது மக்கள் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இதுவெல்லாம் தற்காலிகமான பிரச்சினை; சீனாவின் உதவியுடன் நாட்டின் பொருளாதாரத்தை நிமித்தி எடுத்துவிடலாமென அவர் நம்புகிறார். அல்லது சீனாவினாலோ (அல்லது அவரது ஆலோசகர்களினாலோ) நம்பவைக்கப்பட்டிருக்கிறார்.

அதிருப்தியடைந்த கட்சி உறுப்பினர்கள் மற்றும் புத்த மகாசங்கப் பிரதிநிதிகள், இவ்வாட்சியைக் கொண்டுவந்தமைக்காக மக்களிடம் செம்மையாக வாங்கிக்கட்டிக்கொண்டு வருகிறார்கள் என்பது வெளிப்படை. முறுத்தெடுவ ஆனந்த தேரர் நாட்டின் புதிய தலைவரை உருவாக்குவதில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். 6.9 மில்லியந் வாக்குகளைக் கொண்டுவந்து பகோதாபயவின் காலடிகளில் கொட்டியமைக்காக அவர் இப்போ வருத்தப்படுகிறார். இந்நாட்டின் அரசியல் ஆலோசகர்களாக மகா சங்கம் மட்டுமே இருக்கமுடியும் என்ற அவரது மாஹாவம்ச சிந்தனைக்கு பூகோள அரசியலும் சம்மாகப் பந்தியில் உட்கார்ந்திருப்பது தெரியவில்லை.

இலங்கையின் காலனித்துவ விடுதலைக்குப் பின்னான அரசியலில் 2015 நல்லாட்சி அரசின வருகை இரண்டு முக்கிய வழிகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. ஒன்று: முதன் முதலாக மேற்கு நாடுகளின் திட்டப்படி ஆட்சி மாற்றம் நிகழ்த்தப்பட்டு அதற்கு ஆதரவான (நல்லாட்சி) அரசு நிறுவப்படுகிறது. இதற்கு மூலகாரணம்வெளிநாடுகளில் வாழ்ந்த சந்திரிகா அம்மையார்; சர்வோதய ஆரியரத்னா உட்பட்ட சிங்கள சிவில் சமூகத் தலைமைகள். இரண்டாவது: இலங்கையில் முதன் முதலாக இரண்டு பிரதான தென்னிலங்கைக் கட்சிகள் இணைந்த தேசிய அரசாங்கம், அத்தோடு, இணைந்து பயணிக்கும் பிரதான எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஏறத்தாள எதிர்க்கட்சியே இல்லாத இவ்வரசின் அடிபடை நோக்கம் புதிய அரசியலமைப்பு; நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை ஒழிப்பு.

மேற்குகுநாடுகள் இச் ‘சதியை’ நிறைவேற்றி ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவந்ததற்கு முக்கிய காரணம், தமிழ் மக்கள் தொடர்பாக நீதியான தீர்வொன்றைத் தருவதாக ராஜபக்சக்கள் கொடுத்த வாக்குறுதியை நம்பி விடுதலைப் புலிகளை ஒழிக்க சர்வதேசம் துணை போனதன் பின்னர் ராஜபக்சக்கள் அவ்வாக்குறுதியைக் காப்பாற்றாமை. இதனால் தமிழ் மக்களுக்கு பரிகாரம் வழங்கவேண்டிய கடப்பாடு சர்வதேசங்களின் மடியில் வீழ்ந்தமை. விளைவு 2015 ஆட்சி மாற்றம்.

இவ்வாட்சி மாற்றத்துக்கு தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது மட்டும்தான் காரணமென நாம் முட்டாள் தனமாக நம்பவேண்டியதில்லை. அது ஒரு பக்க விளைவு மட்டுமே. பூகோள அரசியல் இதில் முன்னணியில் இருந்திருக்கிறது.

நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றிய தமது ஆட்சியைச் சர்வதேசம் (மேற்கு) சதி செய்து கவிழ்த்துவிட்டது; நாட்டைப் பிரிப்பதற்கான திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது என ராஜபக்சக்கள் மீண்டும் மக்களின் கால்களில் விழுந்து ஆட்சியை 2019 இல் மீளப்பெற்றுக்கொண்டார்கள். இந்தத் தடவை சர்வதேசம் பின்வாங்க அந்த இடத்தில் சீனா புகுந்து கொண்டு தனது பூகோள அரசியலை இங்கு குடியேற்றிக்கொண்டது. மேற்கு நாடுகளைப் போலல்லாது கடுகதி வேகத்தில் அபிவிருத்திகளை மேற்கொண்டு சீனா தென்னிலங்கை மக்களின் மனதில் இடம்பிடித்திருந்தபடியால் ராஜபக்சக்களுக்கும். சீனாவுக்கும் இலங்கை ஆட்சியைக் கைப்பற்றுவது இலகுவாக இருந்தது. அதே வேளை சிறிசேன – ரணில் மோதல் மக்களின், திட்டமிட்டுச் செயலாக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் ஆகியன ராஜபக்ச தரப்புக்கு உதவியாக வாய்த்துவிட்டன.

தற்போது நல்லாட்சி அரசே பரவாயில்லை என்னுமளவுக்கு மக்களும், மகா சங்கங்களும் ராஜபக்ச தரப்பு மீதும், சீனா மீதும் தமது வெறுப்புக்களைக் காட்ட ஆரம்பித்துவிட்டனர். மக்களின் இந்த மன மாற்றத்துக்கு கொறோணா நோய்த்தொற்று ஒரு முக்கிய காரணமாக எடுத்துக்கொண்டாலும், நாட்டின் பொருளாதாரத்தைப் பலமிழக்கச் செய்தமைக்கு மேற்கு நாடுகளின் பூகோள அரசியல் காரணமில்லை எனக் கூறிவிட முடியாது.

இலங்கைக்கு வெளிநாட்டுச் செலவாணியைப் பெற்றுத் தரும் மூன்று அம்சங்கள் (1). அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான வர்த்தகம் (2) மத்திய கிழக்கு, பசிபிக், ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் வேலையாட்களால் கிடைக்கும் வருமானம் (3). சுற்றுலாத் துறை. இந்த மூன்றுக்காகவும் இலங்கை சீனா மீதல்ல, மேற்கு நாடுகளில் தான் தங்கியிருக்க வேண்டியுள்ளது. அத்தோடு இலங்கையின் நாணயத்தின் பெறுமதி அமெரிக்க டாலருக்கு எதிராகவே மதிப்பீடு செய்யப்படுகிறது. இந் நாணய மதிப்பீட்டைக் கையாளும் நிதி நிறுவனங்கள் மேற்குநாடுகளிடமே உள்ளன. எனவே பொருளாதரத்துக்கு மேற்குநாடுகளை நம்பிக்கொண்டு சீனாவின் கைகுழந்தையாக இருப்பது எப்படியான ஆபத்தைக் கொண்டுவருமென்பதை ஆட்சியாளர் இப்போது உணரத் தொடங்கி விட்டனர்.

ஆனாலும் சர்வதேசங்களின் இந்த பொருளாதார அழுத்தத்தையும் மீறி, சீனாவின் கடன், நாணய அச்சடிப்பு மூலம் தற்காலிக நிவாரணத்தைப் பெறமுடியுமெனவும், துறைமுக நகரம் அள்ளிக் கொட்டப்போகும் செல்வம், நிரந்தர நிவாரணத்தையும் ராஜபக்ச ராச்சியத்துக்கு மிக நீண்ட ஆயுளையும் கொடுக்கப் போகிறது என ராஜபக்சக்கள் தீர்க்கமாக நம்புகிறார்கள் அல்லது சீனாவினால் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கெதிராகப் பல கல்விமான்களும் வழங்கும் ஆலோசனைகளை அவர்கள் நம்பத் தயாரில்லை. எனவே தான் அடுத்த திட்டத்தில் (பிளான் B) சர்வதேசம் இறங்கியிருக்கிறது.

திட்டம் 1: ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் வருகை

தற்போதைய சூழலில் மேற்குநாடுகள் கூரையால் இறங்குதற்கான பாதையை வழங்கும் நிலையில் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சி இல்லை. அதற்கேற்ற தந்திரம் ரணில் விக்கிரமசிங்கவிடமே இருக்கிறது. அவர்து மீள் வரவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யக்கூடிய மகாசங்கம் இப்போது விகாரைக்குள் முடங்கிக் கிடக்கிறது. அதந் பலமுள்ள தலைவரான முறெத்தெட்டுவ தேரரை ஊடக சாட்சியோடு சந்தித்து அவரது ஆசியுடன் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த ரணில் மீண்டும் பாராளுமன்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

திட்டம் 2: பசில் ராஜபக்ச பாராளுமன்றம் வருகை

பசில் ராஜபக்சவைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரவேண்டுமென்ற பொதுவான அபிப்பிராயம் ஆரம்பத்திலிருந்தே கட்சித் தலைவர்களிடமும், உறுப்பினர்களிடனும் இருந்தது. 20 திருத்தம் இரட்டைக் குடியுரிமை போட்டிருந்த தடையை இலகுவாக நீக்கி விட்டிருந்தது. ஆனாலும் கோதாபய ராஜபக்சவின் இலகுவில் வளைந்து கொடுக்காத போக்கு பசில் உட்படப் பலரது ஆலோசனைகளை உள்வாங்கும் நிலைமையில் இருக்கவில்லை. அத்தோடு பசிலுக்கும் நாமல் ராஜபக்சவுக்குமிடையேயான நீண்ட கால அதிகாரப் போட்டியில் ஜனாதிபதி நாமல் பக்கம் சாய்ந்து வருவது பசிலுக்கு உவப்பாக இருக்கவில்லை. நாமலின் உருவாக்கத்தின் பின்னால் சீனாவும் இருக்கிறது என்பது இன்னுமொரு தகவல். இவ்விழுபறிகளின் மத்தியில் அமெரிக்காவில் இருந்த பசிலின் மனைவியார் மீள அழைக்கப்பட்டு நடக்கவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில் அவரை மேற்கு மாகாணசபையின் முதலமைச்சருக்கான வேட்பாளராக அறிவிக்கப்படும் நிலைக்கு சமரசங்கள் நடந்தேறின. ஆனால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்வரை மாகாணசபைத் தேர்தல்களை நடத்தக்கூடாது எனப் பலவழிகளாலும் எதிர்ப்புக் கிளம்பியதால் அய்யோசனை கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இச் சூழலில், பசில் சகோதரகளுக்கு இறுதிநேர அறிவித்தலைக் கொடுத்துவிட்டு அமெரிக்கா பயணமானார்.

அமெரிக்க மந்திராலோசனை

பசிலின் அமெரிக்கப் பயணம் மருத்துவப் பரிசோதனை சார்ந்தது என அரசாங்கம் அறிவித்திருந்தது. நாடுகளிடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மிக இறுக்கமாக இருக்கும் கால கட்டத்தில் பசிலின் அமெரிக்கப்பயணம் இலகுவாக நிகழ்ந்தேறுகிறது. ஆனாலும் உளறுவாயரான போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பசிலின் அமெரிக்க விஜயத்தை “நாட்டிற்கு நன்மை பயக்கும் விடயமாக பசில் அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார். உண்மையான காரணத்தை இப்போதைக்குக் கூற முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை நாட்டின் நிர்வாகச் சீரழிவைத் தடுத்து நிறுத்தி மக்களைக் காப்பாற்றும் தகமை பசிலுக்கு மட்டுமே உண்டு எனக் கட்சிக்குள்ளும் அரசாங்கத்துக்குள்ளும் பெரும்பாலோர் நினைக்க முற்பட்டிருந்தனர். இவ்வேளையில் பசில் அமெரிக்காவிலிருந்து திரும்பி வருகிறார். அவர் சார்பில் 113 பேர் கையெழுத்திட்டு ‘பசிலைப் பாராளுமன்றம் கொண்டுவந்து அவருக்கு கடந்த அரசாங்கத்தில் வழங்கப்பட்ட நிதி மற்றும் கைத்தொழில் அமைச்சை வழங்கவேண்டும்’ எனக் கோரி ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதுகிறார்கள்.

பசில் அமெரிக்காவிலிருந்து ஒரு ‘மினி சதியை’ நிறைவேற்ற முற்பட்டாரா? இதன் பின்னால் அமெரிக்காவின் ஆலோசனை / அனுசரணை இருக்கிறதா? இருக்கலாம்.

பசில் அமெரிக்காவில் இருந்தபோதுதான் காங்கிரசில் தீர்மானம் #413 முன்மொழியப்படுகிறது. ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என அழைத்த அமெரிக்கா இப்போது அதை ‘ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்ட அமைப்பு’ என இத் தீர்மான முன்மொழிவில் குறிப்பிடுகிறது. இது மட்டுமல்லாது இலங்கை மீது பலவிதமான அரசியல், பொருளாதார அழுத்தங்களை அது கொண்டு வருகிறது. அதே வேளை ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீளப்பெறப் போவதாக எச்சரிக்கை செய்கிறது. இவையெல்லாவற்றினூடாகவும் ஒரு இழை ஒன்று ஓடுகிறதா? இருக்கலாம். இச் சூழலில் பசில் இலங்கை வருகிறார். அவரது வருகை பற்றி சகோதரர்களோ அவர்களைத் தூக்கிப் பிடிக்கும் ‘ஹிரு’ போன்ற ஊடகங்களோ அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.

ராஜபக்சக்கள் சந்திப்பு

பசில் வந்ததும் வராததுமாக ஜூலை 03 அன்று மஹிந்த ராஜபக்ச இல்லத்தில் மஹிந்த, கோதாபய, பசில் ஆகியோர் சந்திக்கிறார்கள். அச்சந்திப்பில் பசில் வாய் திறக்கவில்லை எனவும், பார்வையாளராக மட்டுமே இருந்தார் எனவும் அவர் மீண்டும் பாராளுமன்றம் வருவது, அவருக்கு அமைச்சுப் பதவி வழங்குவது என்பன பற்றிப் பேசப்பட்டது எனவும் நமபத் தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இக் கூட்ட முடிவில் பசிலின் தேசியப் பட்டியல் நியமனம் பற்றி எதுவித முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், மஹிந்த, கோதாபய இருவருக்குமே பசிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தொடர்பாக நாட்டம் எதுவுமில்லை எனவும் ‘இந் நம்பத் தகுந்த வட்டாரங்கள்’ கருதுவதாக கொழும்பு ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த ராஜபக்ச அரசாங்கத்தின்போதே பசிலுக்கும் மஹிந்த குடும்பத்துக்கும் ஆகாது எநச் செய்திகள் வெளிவந்திருந்தன. மஹிந்தவின் வாரிசாக பசில் வருவது பாரியார் ஷிராந்திக்குப் பிடிக்கவில்லை எனவும், மஹிந்தவின் கிரீடம் முறைப்படி நாமலுக்கே போகவேண்டுமென்பதே ஷிராந்தியின் முடிவு எனவும் கூறப்பட்டது. இதனால் மனமுடைந்துபோன பசிலின் மனைவியார் அமெரிக்காவில் குடும்பமாகக் குடியேறிவிட்டார் எனக் கருதப்படுகிறது. இருப்பிநும் 2019 மீள் வருகைக்கு அவர் மீள அழைக்கப்பட்டு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட்டதென்றும் அவரது நிர்வாகத் திறமை காரணமாகவே கட்சி பெரும் வெற்றியீட்டியது எனவும் அதற்காக அவருக்கு தேசியப் பட்டியல் நியமனம் கொடுக்கப்பட்டு முக்கிய அமைச்சுப் பதவியும் வழங்கப்படவேண்டுமென்பது கட்சி அங்கத்தவர்களின் விருப்பமாகும்.

இந்நிலையில் பசில் உள்ளே கொண்டுவரப்பட்டிருந்தால் நாட்டின் பொருளாதார நிலை இந்தளவுக்குச் சென்றிருக்காது என கட்சி உறுப்பினர்கள் பலரும் பகிரங்கமாகக் கூற ஆரம்பித்திருப்பது மஹிந்த, கோதாபய இருவருக்கும், அவர்களது ஆலோசகர்கள், அனுதாபிகள் ஆகியோருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளன எனவும் இது அவர்களது திறமைகளைக் குறைத்து மதிப்பிட வழிவகுக்கிறது எனவும் இதனாலேயே அவருக்கு அந்த முக்கியத்துவத்தைக் கொடுக்க இவர்கள் விரும்பவில்லை எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. மஹிந்த ஓரளவுக்கு இதில் சமரசம் செய்துகொள்ளத் தயாராக இருந்தாலும் குடும்ப அரசியல் தீர்மானம் எடுப்பதில் தடைக்கல்லாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இதை உறுதிப் படுத்துவது போல ” மூத்தவர்கள் எப்படியான தீர்மானத்தை எடுத்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராகவிருக்கிறேன்” என நாமல் ராஜபக்ச மறுநாள் ருவீட் செய்துள்ளார்.

பூகோள அரசியல்

ஆனால் பசிலைப் பாராளுமன்றம் கொண்டுவருவதற்குப் பின்னால் பூகோள அரசியலும் பெரும்பங்கு வகிக்கிறது.

பசிலிந் பாராளுமன்ற வருகை ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒந்றென்றாலும் அவரது அமெரிக்க குடியுரிமையை அவைத்திருக்கும் அவரை இதர ராஜபக்சக்கள் போல தனக்கு விசுவானமவராகச் சீனாவால் பார்க்க முடியாது. அப்படி பசில் ஒருபோதும் தந்நைக் காட்டிக்கொண்டதுமில்லை. இக் காரணங்களுக்காக அவரைப் புறந்தள்ளுவதற்கான அழுத்தத்தை சீனா வழங்குவதாகவும் இருக்கலாம். அதற்காகவே சீனா நாமல் ராஜபக்சவை முந்தள்ளும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது எநவும் நம்பலாம்.

அமெரிக்காவைப் பொறுத்த வரையில் மஹிந்த, கோதாபய இருவரையும் நம்புவதற்கு அது தயாராக்வில்லை எனினும் தற்போதைய ஆட்சியாளரோடு இருக்கும் ஒரே தொடர்பு பசில் மட்டுமே என்பதால் அவரை உரிய முறையில் பாவித்துக்கொள்ளவே அது விரும்பும். எனவே விருப்பமோ விருப்பமில்லையோ பசில் தற்போதைக்கு அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிந்துபோக வேண்டிய தேவை உள்ளது.

இலங்கை அரசின் அடுத்த நகர்வு

எதிர்பாராத வேகத்தில் நகர்ந்த சீனாவின் பட்டி வீதித் திட்டம் மற்றும் அமெரிக்காவில் ட்றம்ப் நிர்வாகம் ஆகிய காரணிகளால் இந்து – பசிபிக் சமுத்திரத்தின் பிராந்தியக் கட்டுப்பாடு இந்தியா, அவுஸ்திரேலியா, யப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து படிப்படியாகக் கழன்று வருகிறது. அமெரிக்காவில் ஜோ பைடனின் வருகை பூகோள அரசியலில் சீனாவைத் தனது ‘முதலாவது’ எதிரியாக வரித்துக்கொண்டு அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

தென் சீனக்கடலில் அமெரிக்காவின் ஆதிக்கம் ஏறத்தாள முடிவுக்கு வந்த நிலையில் தாய்வான் சீனாவின் நிலப்பரப்பாக விரைவில் மாறக்கூடிய சூழ்ல் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ்நாடு அமெரிக்காவுடன் வழமையாக நடத்தும் கடற்படைப் பயிற்சியை நிறுத்திக்கொண்டுள்ளது. தென்சீனக் கடற்கரையோர நாடுகளில் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டு வந்த வரவேற்பு படிப்படியாக சீனாவுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

இந் நிலையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையும் வீழ்ந்து விடுவதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. ‘America is back’ என்ற சுலோகத்துடன் சர்வதேச அரங்கில் குதித்திருக்கும் பைடன் இலங்கையில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் என மேற்கூறப்பட்ட சில காரணங்கள் மூலம் உய்த்துணர முடியும். அதன் நிரூபணமாக, ஜூன் 23 இல் திருகோணமலைக் கடலில் அமெரிக்கா, இலங்கை, யப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொண்ட ‘கரட்-21’ கடற்படைப் பயிற்சி இருக்கிறது. இந்தோ- பசிபிக் பிராந்திய ‘நேட்டோ’ வான QUAD அமைப்பில் இந்தியா ஒரு அங்கத்துவ நாடாக இருந்தாலும் இப் பயிற்சிக்கு இலங்கை அழைப்பு விடுக்கவில்லை என்றொரு குற்றச்ச்சாட்டும் உள்ளது. அதையும் மீறி அமெரிக்கா இதில் பங்குபற்றியிருப்பது அது தனது குறியில் கண்ணாகவிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

அத்தோடு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைத் தக்கவைப்பதற்காக ஐரோப்பிய ஒந்றியத்தின் நிபந்தனைகளைப் பரிசீலிக்கவிருப்பதாக இலங்கை அரசு கூறியிருக்கிறது. அந் நிபந்தனைகளில் ஒன்றான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய அது தயாரெனக் கூறியுள்ளது. 16 முன்னாள் விடுதலைப் புலிகளின் விடுதலையும் இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் அழுத்தத்தின் விளைவு என ஏற்கெனவே அவதானிகள் கருத்துக்கூறியுள்ளனர். இன்று (ஜூலை 5), அமெரிக்காவுடனான நீண்டகால நட்பைப் பேணும் வகையில் இலங்கை அரசு நடந்துகொள்ளூமென்ற கருத்துப்பட கோதாபய அமெரிக்க நட்பை நோக்கிக் கைகளை உயர்த்தியுள்ளார். இது எந்தளவு தூரம் நம்பகத் தனமையுள்ளது , இதற்குச் சீனா எப்படி எதிர்வினையாற்றும் என்பது இனிவரும் காலங்களில் தான் தெரியும்.

இதே வேளை நாட்டில் பொருள் விலையேற்றம், தடுப்பாடு, பதுக்கல் காரணமாக மக்கள் தாங்கொணாத துன்பங்களை அநுபவிக்கிறார்கள், அரசாங்கம் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும் என ஆளும் கட்சி உறுப்பினர்களும். பொருளாதார நிபுணர்களும் பகிரங்கமாகக் குரலெழுப்ப ஆரம்பித்துள்ளார்கள். ஆனாலும் ராஜபக்ச அரசு மேலும் இறக்குமதித் தடைகளை வித்தித்து மேலும் விலையேற்றத்துக்கு காரணமாக இருக்கிறது. இறக்குமதி செய்வதற்குப் பணம் இல்லாமையே இதற்குக் காரணம்.

இச் சூழலில் இலங்கையில் சீனாவின் திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு முதலே ஆட்சி கவிழ்ந்து போவதற்கான சாத்தியங்கள் அதிகமாகத் தெரிகின்றன. நாட்டின் அடுத்த தலைவராக இப்போதைக்கு ‘தயார் நிலையில்’ இருக்கும் ஒரு தலைவர் பசில் ராஜபக்ச மட்டுமே. அவரைத் தன்பக்கம் வைத்திருக்க இயலுமான முயற்சிகளை மேற்கொள்வதே QUAD நாடுகளுக்கு இப்போ தேவை. இதன் மூலம் ராஜபக்ச குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்கி மூத்த ராஜபக்சக்களையும் சீனாவையும் ஓரங்கட்டுவதே அமெரிக்காவின் திட்டம்.

ஜோ பைடன் எதிர்பார்த்ததைவிட மிகவும் கடுமையான, தீர்க்கமான முடிவுகளை எடுக்கக்கூடியவர். வர்த்தக தீர்வை விடயங்கள், எண்ணைக் குழாய் விடயங்களில் அருகிலுள்ள கனடாவுடன் கூட அவர் சமரசம் செய்ய மறுத்தவர். ட்றம்ப் அமெரிக்க மக்களுக்காக ‘அமெரிக்கா முதல்’ எனக் கூக்குரலிட்டார். பைடன் உலகத்துக்காக ‘அமெரிக்கா முதல்’ எனக் கூக்குரலிடுகிறார். மற்றும்படி இருவரும் ‘MAGA அமெரிக்கர்கள் தான்.

முறெத்தெட்டுவ தேரர் இலங்கைக்கான அடுத்த தலைவரை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார். அவரது அடுத்த தலைவரும் இன்னுமொரு மஹிந்த அல்லது வீரவன்சவாகவே இருப்பர். எனவே அதற்கு அமெரிக்கா இணங்கும் என நான் நினைக்கவில்லை. இருக்கின்ற ஆட்சியாளரை நெருக்குவாரப்படுத்துவதன் மூலம் தனது வழிக்குக் கொண்டுவர அமெரிக்கா முயற்சி செய்யும். பசில் அதன் தொடர்பு (link ) ஆக இருக்கலோமோ என்பதே எநது சந்தேகம்.

சீனாவின் நிலை தொடர்பாக ‘எதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்’ என இந்தியா தொடர்ச்சியாகக் கூறி வருகிறது.

இப் பூகோள அரசியல் நகர்வுகள் அவ்வப்போது துப்பும் கழிவுகள் ஒன்று சேர்ந்து உருவாகும் குப்பைக் கூழத்துக்கு ‘தமிழ்த் தேசம்’ (தமிழ் நாடு அல்ல) என்று யாராவது பெயரிட்டால் அவர்களைக் கோபித்துக்கொள்ளாதீர்கள்.