Spread the love

செய்தி அலசல்

தேற்தல் ஆணையத்தின் தலைவரும், மூன்று ஆணையாளர்களில் ஒருவருமாகிய மஹிந்த தேசப்பிரிய ராஜபக்சக்களின் அரசியல் பொறியில் விழுந்துவிட்டார் என்ற செய்தி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடதுசாரிப் பின்னணியைக் கொண்ட மஹிந்த தேசப்பிரிய ஒரு நேர்மையான, நடுநிலையான போக்கைக் கொண்டவராகப் பல தரப்புகளாலும் மதிக்கப்பட்டு வந்த ஒருவர். ராஜபக்சக்களின் தந்திர வலைக்குள் அகப்படாமல் நீண்டகாலமாகத் தப்பி வந்தவர். ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றபோதிலிருந்து அவரது காலுக்குக் கீழான மண் அரிப்புத் தொடங்கிவிட்டிருந்தது. இப்பொழுது விழுந்திருக்கிறார்.

மஹிந்த தேசப்பிரியவின் மகன், W.V.K. தேசப்பிரிய, நெதர்லாந்தில் உயர்கல்வி படித்துக்கொண்டிருந்தவர். கொறோனாவைரஸ் பயணக்கெடுபிடிகளுள் சிகியிருந்த அவரை நாட்டுக்குத் திருப்பி அழைப்பதற்காக ஜனாதிபதி ராஜபக்சவிடம் உதவி கேட்டுப் போனதாகவும், இதன் காரணமாக, லண்டனில் இருந்த அவரது மகன் நேறு இலங்கை திரும்பியுள்ளதாகவும் ‘கொலொம்பொ டெலிகிராஃப்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மீள் பயணத்துக்கான உத்தரவு, ஜனாதிபதியால் தனிபட்ட முறையில் வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தைத் தாம் பார்த்ததாக அப்பத்திரிகை தெரிவிக்கிறது.

இச் சம்பவத்தால் தேர்தல் ஆணையத்தின் சுயாதீனம் இழக்கப்பட்டுவிட்டது எனப் போர்க்கொடிகள் எழுந்துள்ளன. தேர்தல் திகதி நிர்ணயம் ஏற்கெனவே பிரச்சினைக்குரியதாக மாறியுள்ள இன் நிலையில், ஆணையத்தின் தலைவரது இன் நடவடிக்கை அதன் நடுநிலைமையைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

தேர்தல் ஆணையத்தில் மூன்று ஆணையாளர்கள் இருக்கிறார்கள். ஆணையம் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் ஏகமனதாக எடுக்கப்பட்டு வந்தாலும், முடிவு எடுக்கப்பட முடியாத சந்தர்ப்பத்தில் (tie) ஆணையத் தலைவர் தனது வாக்கைப் பிரயோகிப்பது வழக்கம். அந்த வகையில், ஆணையத் தலைவரின் பதவி முக்கியத்துவம் பெறுகிறது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் ஜூன் 20 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட போதே அத் தீர்மானத்தின் பின்னால், அதிகாரத்தின் இரும்புக் கைகள் இருக்கிறதா எனச் சந்தேகங்கள் இருந்தன.

தேர்தல் ஆணையம் ஒரு நாட்டின் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதும், நாட்டின் அதியுச்ச அதிகாரம் அந்த ஆணையத்துக்குப் போய்ச் சேருகிறது. வேட்பாளர் தகுதிகளைத் தீர்மானிப்பது முதல் தேர்தல்கள் சீராக நடத்தப்படுவது வரை அதற்கு பலமான அதிகாரங்களுண்டு. ஜனாதிபதி தேர்தலின்போது ராஜபக்சக்களுக்குச் சாதகமான பல நடவடிக்கைகள் தேர்தல் சட்டங்களுக்குப் புறம்பாக நடைபெற்றிருந்தன. கைத் தொலைபேசிகளை வாக்களிப்பு நிலையங்களுக்குள் எடுத்துச் செல்லமுடியாது என்பதில் கறாராக இருந்த ஆணையம், பிக்குகள் வாக்களிப்பு நிலையங்களின் வாசல்களில் நின்று பிரச்சாரம் செய்வதைத் தடுக்க முடியவில்லை. அது ஆணையத்தின் பலவீனத்தால் நடைபெற்றதா அல்லது பயத்தினால் நடைபெற்றதா என்பது பற்றி இனிமேலும் விவாதிக்கத் தேவையில்லை.

இவ் விடயத்தில் தேசப்பிரியவின் மகன், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கு எழுதிய மின்னஞ்சல்களைத் தந்தையார் நேரடியாகக் கொண்டுபோய் இவ்வலுவலகங்களில் கையளித்ததாக ஆணையாளர் சம்பத்தப்பட்ட பத்திரிகை ஆசிரியரிடம் ஒத்துக்கொண்டுள்ளார் எனத் தெரிகிறது. இக் கோரிக்கையைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் பிரதமரின் செயலாளர் காமினி சேனாரத் ஆகியோர் தேசப்பிரியவின் மகனை மீள எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். வெளிவிவகார அமச்சை நிர்வகிக்கும் முன்னள் ரெயர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகேயிற்குத் தனது மகனைத் திருப்பி எடுத்து தரும்படி ஆணையாளர் எழுதியிருந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.இவ்வொப்புதலுக்கு முதல், ‘தனது மகன் நெதெர்லாந்தில் புலமைப்பரிசிலில் படித்துக்கொண்டிருந்த ஒரு அரசாங்க பொறியிலலாளர் எனவும், அவரோடு மேலு நான்குபேர் இலங்கைக்கு திரும்பிவருவதற்கு விண்ணப்பித்திருந்ததன் பிரகாரமே விசேட விமானத்தில் திருப்பியழைக்கப்பட்டிருந்தார் எனவும் இவ் விடயத்தில் தான் தலையிடவில்லை எனவும்’ ஆணையாளர் தெரிவித்திருந்தார். விடயங்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதும் அவர் உண்மையை ஒத்துக்கொண்டுவிட்டதாக ‘கொலொம்பொ டெலிகிராஃப்’ செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜபக்ச வைத்த பொறி

ராஜபக்ச ஜனாதிபதியாக வந்ததிதிலிருந்து தேசப்பிரிய தனது பதவியைத் துறக்க விரும்பியதாகவும், அவரது குடும்பத்தினர் அதற்கு இணங்கவில்லை எனவும் பேசப்படுகிறது. அதே வேளை, தேசப்பிரியவை விலக்கி விட்டுத் தமக்கு சாதகமான ஒருவரை நியமிக்க ராஜபக்ச எண்ணம் கொண்டிருந்ததாகவும் இப் பொறிக்குள் சிக்கவைப்பதன் மூலம் அவரைப் பதவியிலிருந்து விலகச் செய்வது சுலபமானது என்பதால் இவ் விடயத்தை ஜனாதிபதி /பிரதமர் / வெளிவிவகார அலுவலகங்களூடாகக் கசியவிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பலரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

தேர்தல் திகதி நிர்ணயம் தொடர்பாக தேர்தல் ஆணையம் சட்ட அபிப்பிராயமொன்றை எடுக்கவேண்டுமென சட்டமா அதிபர் டப்புல டெ லிவேரா ஆணையத்தைக் கேட்டிருந்தது தொடர்பில் ஜனாதிபதி, தேசப்பிரியவின் சார்பு நிலையை எதிர்பார்த்ததாகவும் இதற்குப் பிரதியுபகாரமாக மகனைத் திருப்பியழைப்பைப் பாவித்திருக்கலாமெனவும் பேசப்படுகிறது.

19 வது திருத்தத்தின் கீழ், தேர்தல் ஆணையம் எந்தவொரு கட்டளையையும் அரச அதிகாரிகளிடமிருந்து எடுக்கக் கூடாது. தற்போது எழுந்துள்ள சிக்கலில் ஆணையாளர் , தனது மகனின் மீட்புக்காக, ஜனாதிபதியின் விருப்பத்தை நிறைவு செய்ய உத்தேசித்திருந்தாரா என்பதுதான் கேள்வி. என்னதான் இருந்தாலும் ராஜபக்சக்கள் வைத்த பொறியில் அவர் விழுந்துவிட்டார். அவர் பதவியிலிருந்து விலகினாலும், விலகாவிட்டாலும் இனி இருக்கப்போகும் ஆணையம் நடுநிலையாக இருக்கமுடியுமென்ற நம்பிக்கை அற்றுப்போய்விட்டது. இது 19 வது திருத்தமென்ற பிரேதப்பெட்டியில் அடித்த இன்னுமொரு ஆணி.

முந்தய ராஜபக்ச ஆட்சியின்போது பலர் இப்படியான ‘ராஜபக்ச பொறிக்குள்’ விழுத்தப்பட்டிருந்தார்கள். வாசுதேவ நாணயக்கார, அனுரா பண்டாரநாயக்கா என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

ஏனைய இரண்டு ஆணையாளர்களான ரட்ணஜீவன் ஹூல், நளின் அபயசேகர ஆகியோரின் பதவிகளின் நிலைமைகள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனவா? பார்க்கலாம்.

Print Friendly, PDF & Email