Spread the love
பொதுஜன பெரமுன கூட்டத்தில் பசில் கலந்துகொள்ளவில்லை

டிசம்பர் 5, 2019

ராஜபக்ச சகோதரர்களுக்கிடையே முறுகல்? 1
கோதாபய, பசில் ராஜபக்ச சகோதரர்கள்

ஜனாதிபதி தேர்தலில் பெற்ற அமோகமான வெற்றிக்குக் காரணமான அமைப்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்காக நேற்று கட்சியின் பத்தரமுல்ல தலைமையகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனரான பசில் ராஜபக்ச கலந்து கொள்ளாதது பலராலும் பேசப்பட்ட விடயமாகவிருந்தது.

2015 இல் மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்குப் பிறகு சிறிலங்க பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்குவது என்பது பசில் ராஜபக்சவின் எண்ணக்கருவென்றும், சேற்றிலிருந்து செந்தாமரை மொட்டு முகிழ்த்து எழுவதாக உருவகித்து அதன் சின்னத்தைத் தெரிவு செய்தது முதல் கட்சியைப் பட்டி தொட்டிகளெங்கும் பாமர மக்கள் மத்தியில் கொண்டு சென்றது அவர் தானென்றும் கட்சி அங்கத்தவர்களிடையே பரவலாகத் தெரியப்பட்டவொன்று.

குறுகிய காலத்துக்குள் அவர் எடுத்த முயற்சியின் வெற்றி மாகாணசபைத் தேர்தல்களில் தெரிந்தது.

இருப்பினும் அவரது முயற்சியின் இன்னுமொரு வெளிப்பாடான ஜனதிபதி தேர்தலின் வெற்றிக் கொண்டாட்டத்தில் அவரைக் காண முடியாதது, ஜனாதிபதி கோதாபயவிற்கும் அவரது சகோதரர்களுக்குமிடையில் இருப்பதாகக் கருதப்படும் முறுகல் நிலை மோசமடைகிறதா என்ற சந்தேகத்தைப் ‘பொஹொட்டு’ ஆதரவாளர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. கட்சியின் நிறுவனர் என்ற வகையில் அவர் நேற்றய கூட்டத்தில் பங்குபற்றியிருக்க வேண்டும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இவர்களுக்கிடையேயுள்ள முறுகலின் அறிகுறிகளாக ஜனாதிபதி ஆணையத்தின் செயற்பாடுகளிலிருந்து பசில், மஹிந்த இருவரும் புறக்கணிக்கப்பட்டதையும், ராஜபக்ச குடும்பத்தின் அடையாளமான செவ்வூதா சால்வையை அணிவதை கோதாபய விரும்புவதில்லை என்பது போன்ற விடயங்களின் மூலம் மக்களிடையே அன்னியப்பட்டுவிட்ட ‘ராஜபக்ச பிராண்ட்’ டைத் தொடர்ந்து முன்னெடுப்பதை விட்டு விட்டுத் தனது பாணியை முன்னெடுக்க கோதாபய முயல்வது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக அவதானிகள் கருதுகிறார்கள்.

பெரும்பாலான அமைச்சரவை நியமனங்களில் ஊழலற்றோரே நியமிக்கப்படுவர் என கோதாபய அறிவித்திருந்தும் விமல் வீரவன்ச போன்ற சிலரை மஹிந்த தரப்பே நியமித்திருந்தது என்பதும், பாதுகாப்பு அமைச்சு தனக்குக் கீழே வருகிறது என மஹிந்த அறிவித்ததன் பின்னர் அது அவரிடமிருந்து பறிக்கப்பப்பட்டு முப்படைகளின் தளபதியின் பொறுப்பில் விடப்பட்டது எனபதும், பதவியேற்பு வைபவத்தில் செவ்வூதா சால்வையைப் போட்டுக்கொள்ளும்படி அண்ணன் சமால் கொடுக்க கோதாபய அதை மறுதுவிட்ட சம்பவம் ஆகியன கோதாபயவின் தனித்துவமான போக்கு ஏனைய ராஜபக்சக்களின் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதப்படுகிறது.

கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி ராஜபக்ச, சகலரும் சமமாக நடத்தப்படுவார்கள் எனக் கூறியதாகவும் அறியமுடிகிறது.

இதே வேளை, பசில் ராஜபக்ச நத்தாரைத் தனது குடும்பத்துடன் செலவழிப்பதற்காக அமெரிக்கா சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Related:  கலையரசன் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில் தெரிவு