ராஜபக்ச சகோதரர்களின் கீழ் 154 திணைக்களங்கள் / நிறுவனங்கள்

Spread the love

டிசம்பர் 12, 2019

புதிய அரசாங்கத்தில் 154 திணைக்களங்களையும், நிறுவனங்களையும் மகிந்த, சமால், கோதாபய சகோதரர்கள் தம்முள் வைத்துள்ளனர்.

மகிந்த ராஜபக்சவின் கீழ் இருக்கும் மூன்று அமைச்சுகளின் கீழ் 86 திணைக்களங்கள் / நிறுவனங்கள் உள்ளன. கோதாபயவின் பணிப்பின் கீழ், அமைச்சுகள், திணைக்களங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் கடமைகள் வரையறுத்துக் கூறப்பட்டிருந்தன. இவை நேற்று வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

மஹிந்த ராஜபக்ச, தன் முந்திய ஆட்சியின்போது வைத்திருந்ததைப் போலவே நிதி, புத்த சாசன, மத விவகாரங்கள் ஆகிய அமைச்சுகளை எடுத்துக்கொண்டதுடன் இம்முறை நகர அபிவிருத்தி, வீடமைப்பு ஆகிய அமைச்சுக்களையும் சேர்த்து தற்போது ஐந்து அமைச்சுக்களை நிர்வகிக்கிறார்.

நிதி அமைச்சின் கீழ் 86, புத்த சாசன அமைச்சின் கீழ் 23, நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் 17 என மொத்தம் 126 திணைக்களங்கள் / நிறுவனங்கள் மஹிந்த ராஜபக்சவின் கீழ் இருக்கின்றன.

19வது திருத்தத்தின் பின் ஜனாதிபதி எந்தவொரு அமைச்சையும் நிர்வகிக்க முடியாது என்பதனால் பாதுகாப்பு அமைச்சுக்கு எவரையும் நியமிக்காமல் அதை முப்படையிடம் கொடுத்திருக்கிறார். அப்படியிருந்தும் தனக்குக் கீழ் 31 திணைக்களங்களை அவர் நிர்வகிக்கிறார்.

இதற்கு அரசியலமைப்பு இடம் கொடுக்கவில்லையெனினும் புதிய தேர்தலின் பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்பை மாற்றி நிறைவேற்று அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் தானே பாதுகாப்பு அமைச்சை எடுத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது பாதுகாப்புச் செயலாளாராக இருக்கும் கமல் குணரத்னவே பாதுகாப்பு விவகாரங்களைக் கையாள்கிறார். பாதுகாப்பு அமைச்சரில்லாத போது அவ்வமைச்சின் கீழ் பாதுகாப்பு செயலாளர் என்றொரு பதவி இருப்பதுவும் அரசியலமைப்புக்கு எதிரானது எனினும் அரசியலமைப்பையோ அல்லது நீதி ஸ்தாபனங்களையோ அனுசரித்துப் போகும் நிலையில் புதிய ஆட்சி இல்லை. அதைப் பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாமல் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்னுமொரு சகோதரரான சமால் ராஜபக்ச மஹாவெலி, விவசாயம், வர்த்தகம் ஆகிய மூன்று அமைச்சுகளின் கீழ் 37 திணைக்களங்கள் / நிறுவனங்களுக்குப் பொறுப்பாக இருக்கிறார். அத்தோடு அவர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராகவும் உள்ளார்.

முந்தைய ராஜபக்ச ஆட்சியில் மஹிந்தவும் அவரது சகோதரர் பசிலும் நாட்டின் பொருளாதாரத்தின் கணிசமான பங்கைத் தமது அமைச்சுகளூடு நிர்வகித்திருந்தனர்.

இவர்களை விட பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரம், சமூக சேவைகள், சுகாதாரம், நாட்டு வைத்தியம் ஆகியவற்றின் அமைச்சரான பவித்திரா வன்னியாராச்சியின் கீழ் நாட்டின் தேசிய சுகாதாரத் திணைக்களமுட்பட, 42 திணைக்களங்கள் / நிறுவனங்கள் உள்ளன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>