ராஜபக்ச குடும்ப ஆட்சி முடிவுக்கு வரலாம் – முறெத்தெட்டுவ தேரர் எச்சரிக்கை!

“ஆட்சியாளர்கள் மீதான மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரிக்குமானால், அவர்கள் வீதிக்கு இறங்கி ராஜபக்ச குடும்ப ஆட்சியை ஒரே நாளில் முடிவுக்குக் கொண்டு வருவார்கள்” என ஆளும் கட்சியின் ஆதரவாளரும் பலம் பொருந்திய புத்த மகாசங்கத் தலைவர்களில் ஒருவருமாகிய, அபயராம விகாரையைச் சேர்ந்த முறெத்தெட்டுவ ஆனந்த தேரர் எச்சரித்துள்ளார்.

நாரஹேன்பிட்டியில் அமைந்திருக்கும் அவரது விகாரையில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தேரர் மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

“அரசாங்கத்தின் மீதான மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்களேயானால் ராஜபக்ச குடும்ப ஆட்சி அன்றே முடிவுக்குக் கொண்டுவரப்படும். அந்த நிலைமைக்கு உங்களை ஆளாக்கிவிடாதீர்கள். நாட்டையும், மக்களையும் பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்” என ஆட்சியாளர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“மாதுலுவாவே சோபித தேரர் உயிரோடு இருந்தபோது சொல்வார் ” நாட்டின் ஆட்சியை ஒருபோதும் தனி மனிதனிடம் கொடுத்துவிடாதீர்கள். அது நாட்டிற்குப் பேரழிவைக் கொண்டுவந்துவிடும்” என. இதுதான் இப்போது நடந்திருக்கிறது. தனி ஒரு மனிதனிடம் ஆட்சியைக் கொடுத்ததனால் விளைவு வேறு விதமாகத் திரும்பியிருக்கிறது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி அமைச்சர் கம்மன்பிலவை அழைத்து பெற்றோல் விலையுயர்வை நிறுத்தச் சொல்லலாம். அதனால் தான் அப்பதவியை ‘நிறைவேற்று அதிகாரம்” என்று கூறுகிறோம். அல்லாவிடில் அது இருந்தும் பிரயோசனம் இல்லை” என தேரர் தெரிவித்தார்.

எரிவாயு, பெற்றோல் போன்றவற்றின் விலையை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் கொடுத்ததையடுத்து எரிபொருள், சக்தி அமைச்சர் உதய கம்மன்பில அவற்றின் விலைகளை அதிகரிக்க ஆனை பிறப்பித்திருந்தார். அதற்கு மக்கள் எதிர்ப்பு வலுக்கிறது என அறிந்ததும் விலையுயர்வுக்கு அமைச்சரே பொறுப்பு எனக்கூறி ஆளும் கட்சி கைவிரித்துவிட்டது. இதற்கு காரணம் அமைச்சர் கம்மன்பிலவுக்கும் ஆளும் கட்சியினருக்குமிடையில் அதிகரித்து வரும் விரிசல் காரணமெனவும் கூறப்படுகிறது. ஆளும் கட்சிக் கூட்டணியில், கம்மன்பிலவின் கட்சி உட்படப் பதினொரு சிறிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.