ராஜபக்ச இரகசியங்களை அம்பலப்படுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்
உயிர்த்த ஞாயிறு, ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், எக்னலிகொட கொலைகள் பற்றிய இரகசியங்களை ஐ.நா. உடபட பல வெளிநாட்டு அமைப்புகளிடம் பகிர்ந்திருப்பதாக நம்பப்படுகிறது
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் வெளி நாடொன்றுக்குத் தப்பியோடி ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகச் சந்தேகிக்கப்படும் பல கொலைகள் மற்றும் காணாமலாக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான பல இரகசியங்களைப் பகிர்ந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் ஐந்து நாட்களாக ஐ.நா. அதிகாரிகள் அவருடைய வாக்குமூலத்தைப் பதிந்தனர் எனவும் இதன் போது உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு மற்றும் ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் கொலைகள், ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் உட்பட, ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பல சம்பவங்கள் பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன எனவும் டெய்லி மிரர் தெரிவிக்கிறது.
குறிப்பிட்ட நபர் தன்னிடமுள்ள பல தகவல்கள் பற்றிய விடயங்களைக் கொழுபிலும் வெளிநாடுகளிலுமுள்ள பல ராஜதந்திர அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்த பின்னர் இலங்கையை விட்டுத் தப்பியோடி வெளிநாடொன்றில் அகதி நிலை கோரியிருப்பதாக அப் பத்திரிகை தெரிவிக்கிறது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் மற்றும் காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து அவர் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார் எனத் தெரிகிறது.
இது பற்றி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடனும் (பிள்ளையான்), ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகத்துடனும் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என டெய்லி மிரர் மேலும் தெரிவித்துள்ளது.